
பொதுவாக நம் பாதத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாம் அணியும் ஷூ மற்றும் செருப்புகளும் முக்கிய காரணம். பெண்களிடம் நடத்திய ஒரு ஆய்வில் 90 சதவீதம் பெண்கள் குறைவான அளவுடைய ஷூக்களையே அணிகிறார்கள். இதனால் கால் பாதத்தில் வலி மற்றும் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர் என்கிறார்கள்.
சரியாகப் பொருந்தாத அல்லது மிகவும் இறுக்கமாக இருக்கும் ஷூக்களை எக்காரணத்தை கொண்டும் என்றுமே அணியாதீர்கள். இது உங்கள் பாதங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இது வலியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் சருமத்தையும் சேதப்படுத்தும். காலணிகளுக்கும் சருமத்துக்கும் இடையே தொடர்ந்து ஏற்படும் உராய்வு, சருமத்தில் தடிப்புகள், எரிச்சல் மற்றும் கொப்புளங்களுக்கு வழிவகுக்கும். சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், இவை மிகவும் தீவிரமானதாகி விடும்.
காலுக்கு இதமான ஷூக்களை தேர்வு செய்ய, உங்கள் பாதத்தின் அளவை தரையில் வரைந்து கொள்ளுங்கள். அதில் தற்போது நீங்கள் அணிந்து கொண்டுள்ள ஷூவை வையுங்கள். பாத அளவை விட ஷூவின் அளவு சிறியதாக இருந்தால் நீங்கள் இறுக்கமான ஷூ அணிந்துள்ளீர்கள் என்று அர்த்தம். அதனல் பின் விளைவுகள் ஏற்படும்.
உங்கள் பாத அளவில் ஏதாவது மாற்றம் உள்ளதா என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். மிகவும் தொள தொளவென்று உள்ள ஷூக்கள் நீங்கள் நடக்கும் போது தவறி விழ வாய்ப்பை ஏற்படுத்திவிடும். பொதுவாக இரண்டே கால் இஞ்ச் அளவுக்குள் உயரமுள்ள ஹீல் ஷூக்களை தான் அணிய வேண்டும். அதற்கு மேல் உயரமுடைய ஹீல் அணிந்தால் நம் பந்துக்கிண்ண மூட்டில் பிரச்சினை ஏற்படும்.
தரமான ஷூக்களை மற்றும் செருப்புகளை அணிவது பாதங்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும். பித்த வெடிப்பு குணமாகும்.
செருப்புகளை வாங்க செல்லும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். வாங்கும் செருப்புபின் அடிப்பாகத்தை கவனிக்க வேண்டும், அது கெட்டியாக இருக்க வேண்டும். தளர்வாக இருந்தால் எளிதில் கழண்டு விடும். நிறைய டிசைன்களில் நிறைய செருப்புகள் இருக்க வேண்டும் என்பதற்காக தரக்குறைவான செருப்புகளை வாங்கக்கூடாது . இதனால் கால்களில் வெடிப்பு ஏற்படும். உடல்வாகிற்கு ஏற்றவாறு செருப்புகளை வாங்க வேண்டும்.
பரந்த கால்களை உடையவர்கள் கட் ஷூக்களை போடலாம்.
ஒல்லியான சின்ன கால்களை கொண்டவர்கள் பெருவிரல் மேலும் பாதங்களின் நடுவிலும் வார் வரும் மாதிரியான செருப்புகளை அணியலாம்.
உயரமானவர்கள் சுமாரான ஹீல்ஸ் வைத்த, பாதங்கள் தெரியும் படியாக உள்ள செருப்புகளை அணியலாம்.
குட்டையானவர்கள் கால்கள் தெரியாத வண்ணம் கட் ஷூ மற்றும் செருப்புகளை அணியலாம்.
வெயில் காலத்தில் கட் ஷூ போட வேண்டாம். மழை காலத்தில் ரப்பர் செருப்பு போட வேண்டாம். வசதியான மற்றும் சரியான அளவிலான காலணிகளை அணியுங்கள்.
மூடிய ஷூக்களை நீண்ட நேரம் அணிவதால் அதிகப்படியான வியர்வை ஏற்படுகிறது. இது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இது ரிங்வோர்ம் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. பாதங்கள் நீண்ட நேரம் ஷூக்களுக்குள் அடைத்து வைத்திருப்பதால், காற்று உள்ளே போகாது. இது துர்நாற்றத்தை அதிகரிப்பதோடு பாக்டீரியா தொற்று அபாயத்தையும் அதிகரிக்கிறது.
நீண்ட நேரம் காலணிகளை அணிவது கால்களை ஒரு குறிப்பிட்ட நிலையில் பூட்டி வைத்திருப்பதாகவும், இதனால் கால் தசைகள் விறைப்பாகவும் பலவீனமாகவும் மாறும். இந்த தொடர்ச்சியான இறுக்கம் கால்களின் இயற்கையான இயக்கத்தைக் குறைக்கிறது. மேலும், காலப்போக்கில் வலி, பலவீனம் மற்றும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எனவே உங்கள் கால்களை அவ்வப்போது அலுவலகத்தில் திறந்து வைக்கவும், இதனால், உங்கள் கால்களுக்கு சற்று காற்றோட்டம் கிடைக்கும். உங்கள் கால்களில் அடிக்கடி கவனம் செலுத்துவது முக்கியம். ஏதேனும் பிரச்னை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.