பொதுவாகவே நம் தினசரி உணவில் இனிப்பு, காரம், புளிப்பு, உப்பு, கசப்பு ஆகிய ஐந்து சுவை தரும் உணவுப் பண்டங்களை சாப்பிடுகிறோம், ஆனால் துவர்ப்பை மட்டும் சுவைக்க நமக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால்தான் வீட்டில் சாப்பாடு அல்லது விழா விருந்துக்குப் பிறகு வெற்றிலை-பாக்கு (இனிப்புச் சுவையுடனான பீடா அல்ல) சுவைக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது பாக்கில் இருக்கும் துவர்ப்பு சுவை நம்முடைய ஜீரண செயல்பாட்டை சமன்படுத்துகிறது.
இந்தத் துவர்ப்புச் சுவையை நமக்கு மிகவும் பரிச்சயமான வாழை தருகிறது. ஆமாம், வாழைப்பூதான் அது. இந்தப் பூவில் கால்சியம், பொட்டசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு-தாமிர சத்துகளோடு, ஏ, பி-1, ஸி ஆகிய விட்டமின்களும் நிறைந்திருக்கின்றன.
இத்தனை சத்துகள் கொண்ட வாழைப்பூ, இன்சுலின் சுரப்பதை அதிகரித்து, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வெள்ளைப்படுதல் மற்றும் மூல நோய் ஏற்படாமல் தடுக்கும். சிறுநீரகம், கர்ப்பப்பை கோளாறுகளை தீர்க்கிறது. செரிமானக் கோளாறால் ஏற்படும் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உபாதைகளும் தோன்றாது.
ஆனால், இதை சமைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்தான் படுபோர். ஆமாம் வாழைப்பூ இதழ்களில் உள்ள நரம்பை கட்டாயம் நீக்க வேண்டும். இதற்கு சோம்பல்பட்டே பல இல்லத்தரசிகள் வாழைப்பூவை சமையலில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
சரி, எப்படி சுத்தம் செய்வது?
கைகளில் எண்ணெய் அல்லது உப்பு கரைத்த தண்ணீரைத் தடவிக் கொள்ளுங்கள். வாழைப்பூவின் செந்நிற மடல்களை உரித்து நீக்குங்கள். ஒவ்வொரு மடலையும் நீக்கும்போது அடியில் பூக்கள் வரிசையாக, சீப்பாகக் காட்சி தரும்.
இந்த சீப்பை எடுத்து அதன் ஒவ்வொரு இதழையும் தனித்தனியாகப் பிரித்து கூறு கட்டிக் கொள்ளுங்கள். இந்தக் கூறை இடது உள்ளங்கைக்குள் ஒரு பிடியாகப் பிடித்துக் கொண்டு, வலது கை உள்ளங்கையால் இதழ்களின் முனைகளைத் தேய்க்கவும். இப்போது ஒவ்வொரு இதழும், தனித்தனிப் பூவாகவே மலரும். அவை ஒவ்வொன்றின் நடுவே முனையில் ஒரு குமிழ் அமைப்புடன் ஒரு நரம்பு நிமிர்ந்து நிற்கும். இந்த நரம்புகள் எல்லாவற்றையும் உரித்து நீக்கி விடுங்கள். அப்படியே விட்டு, சமைத்தால் இந்த நரம்புகள் வேகாது, அதோடு, வயிற்றுக் கோளாறுகளையும் உண்டு பண்ணும், சரியா?
இந்த பூக்கூறுகளைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இந்தத் துண்டங்களை அப்படியே வைத்துவிட்டால் உடனே கருத்துப் போகும். ஆகவே நறுக்கியவுடன், தண்ணீரிலோ அல்லது மோரிலோ போட்டு ஊற வையுங்கள். பிறகு பிழிந்து எடுத்துக் கொள்ளலாம்.
சரி, இப்போது வழைப்பூ ரெஸிபி ஒன்றைப் பார்க்கலாமா?
வாழைப்பூ கோலா உருண்டை
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ – துண்டாக நறுக்கிக் கொண்டது – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 2 அல்லது 3
இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன் (மிக்ஸியில் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்துக் கொண்டது)
பொட்டுக் கடலை மாவு – 200 கிராம்
கறிவேப்பிலை, கொத்துமல்லி – சிறிதளவு
வெள்ளை எள் அல்லது கசகசா – 50 கிராம்
முந்திரி – 15
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாழைப்பூ துண்டுகளுடன் உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். பிறகு, இதை மிக்ஸியில் போட்டு மீடியமாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் போட்டு கூடவே பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி, துண்டுகளாக்கிய முந்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். ஒன்றுக்கொன்று சேர்ந்து கொள்ளும்படி கையால் நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள்.
இப்போது இந்தக் கலவையில் பொட்டுக் கடலை மாவைக் கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்துக் கொண்டே வாருங்கள். உருண்டையாக உருட்டும் பதத்திற்கு வந்த பிறகு இந்த மாவை சேர்க்க வேண்டாம். இந்த உருண்டைகளை எள் அல்லது கசகசாவில் போட்டு உருட்டி, ஒரு தட்டில் வைத்து ஃபிரிட்ஜுக்குள் சில நிமிடங்கள் வையுங்கள். இது ரெடி ஸ்டாக்.
பிறகு தேவைப்படும்போது வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்த பிறகு ஃபிரிட்ஜிலிருந்து எடுத்த உருண்டைகளைப் போட்டு அப்படியே பொரித்தெடுங்கள். உருண்டை சிதைந்து விடாதபடி பக்குவமாக ஒரு சட்டுவத்தால் புரட்டிப் போடலாம். உருண்டைகள் பொன்னிறமாய் ஆனவுடன் எடுத்து வடை போல அப்படியே சாப்பிடலாம். சாம்பார், தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ளலாம்.
குழம்பு தயாரித்து முடித்த பிறகு இந்த உருண்டைகளை அதில் போட்டு (பருப்பு உருண்டைக் குழம்பு போல) குழம்புக்குப் புது சுவை கொடுக்கலாம்.