

வாழைப்பழம் சாப்பிட்டதும் நாம் உடனே அதனுடைய தோலை தூக்கி வீசிவிடுவோம். ஆனால், அந்த தோலால் கூட நம்முடைய ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகள் இருக்கிறது. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் அதில் இருக்கும் பொட்டாசியம் சத்து நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த பொட்டாசியம் சத்து உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை சமநிலைப்படுத்தும். இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி ரத்தம் சீராக ரத்தநாளத்தில் செல்வதற்கு உதவும்.
பொதுவாக வாழைப்பழத்தை செரிமானத்திற்காக சாப்பிடுகிறோம் என்று சொல்வார்கள். அது முற்றிலும் உண்மை தான். வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிட்டாலே செரிமான சம்மந்தமான பிரச்சனை சரியாகிவிடும். வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், அஜீரணக்கோளாறு, மலச்சிக்கலை சரிசெய்யும்.
வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று நமக்கு தெரியும். ஆனால், வாழைப்பழ தோல் (Banana peel) எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா? முகத்தில் வரும் முகப்பருக்களை போக்க வாழைப்பழ தோல் சிறந்தது என்று சொல்கிறார்கள். வாழைப்பழ தோலில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைய இருக்கிறது. வாழைப்பழ தோலை முகத்தில் வைத்து மிருதுவாக தொடர்ந்து ஏழு நாட்கள் மசாஜ் செய்தால் முகப்பரு முற்றிலும் சரியாகும்.
சிலருக்கு சருமம் மிகவும் வறண்டு போயிருக்கும். அவர்களுடைய சருமம் ஈரப்பதம் அடைய வாழைப்பழ தோல் மசாஜ் செய்வது நல்லது. தோலில் அலர்ஜி இருப்பவர்கள் வாழைப்பழ தோலை வைத்து மசாஜ் செய்ய தோல் சாம்மந்தமான அனைத்து பிரச்னைகளும் சரியாகும்.
வீட்டில் இருக்கும் பூச்செடிகளுக்கு வாழைப்பழ தோலை போடலாம். வாழைப்பழ தோலில் பொட்டாசியம், பாஸ்பரஸ், கேல்சியம் நிறைந்திருக்கிறது. இதை செடிகளுக்கு போடும் போது செடி நன்றாக செழிப்பாக வளரும். குறிப்பாக ரோஜா செடியிருக்கும் இடத்தில் போட்டால் நன்றாக செழிப்பாக வளரும். இது சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படும்.
சிலருக்கு பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை போக்குவதற்கு பற்கள் மீது வாழைப்பழ தோலின் உட்பகுதியை வைத்து தேய்த்துக் கொண்டே வந்தால், பற்கள் மீது உள்ள மஞ்சள் கறையை முற்றிலுமாக நீக்க முடியும். வாழைப்பழ தோல் மற்றும் முட்டை மஞ்சள் கரு இவை இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து முகத்தில் மாஸ்க் போன்று போட்டால், முகம் பார்க்க பளபளப்பாகவும், அழகாகவும் இருக்கும். அடுத்தமுறை வாழைப்பழம் சாப்பிடும் போது அதன் தோல்களை இப்படி பயன்படுத்த மறக்காதீர்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)