சாமை உண்டால் ஆமை வயது என்பது நம் முன்னோர்கள் வழக்கில் இருந்த ஒரு பழமொழி. நிலத்தில் வாழும் உயிரினங்களிலே அதிக ஆயுட்காலம் உடையது ஆமை. ஆமையின் ஆயுட்காலம் சராசரியாக 80 முதல் 100 ஆண்டுகள் வரை இருக்கும். சில வகை ஆமைகள் அரிதாக 150 ஆண்டுகள் கூட உயிர் வாழும் தன்மை உடையவை. சாமையில் உள்ள பல்வேறு பயன்களை கருத்தில் கொண்டே சாமை உண்டால் ஆமை வயது என்பதை நம் முன்னோர்கள் வழக்கத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். சாமை அரிசி என்பது சிறுதானியங்களில் ஒன்று. சராசரியாக நாம் சாப்பிடும் அரிசியில் இருக்கும் நார்ச்சத்தை போன்று ஏழு மடங்கு அதிகமாக நார்ச்சத்து சாமை அரிசியில் உள்ளது.
சாமை அரிசியில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் இளம் பெண்கள் அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதற்கும், கர்ப்பப்பையை வலுவாக்கவும் சாமை அரிசி பயன்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது ரத்தசோகை நோயை குணப்படுத்த முடியும்.
மேலும் சர்க்கரை நோயாளிகள் சாமை அரிசியை சாப்பிடும் போது சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும்.
சாமை அரிசியில் அதிகமாக சுண்ணாம்பு சத்து உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும், எலும்புகளுக்கு இடையே உள்ள தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. இதனை ஆங்கிலத்தில் Little Millet என்று கூறுவார்கள்.
சாமை அரிசியில் அதிகமான நார் சத்துக்கள் உள்ளதால் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது.
சளி மற்றும் இருமல் போன்ற சுவாச நோய்களுக்கும் சாமை அரிசியை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
சாமை அரிசியில் குறைவான கலோரிகளே இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சாமை அரிசியை தாராளமாக சாப்பிடலாம்.
சாமை அரிசியில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இதனை தாராளமாக கொடுக்கலாம்.
காய்ச்சல் ஏற்படும்போது ஏற்படும் நாவறட்சியை தடுப்பதற்கு சாமை அரிசியை கஞ்சி வைத்து கொடுக்கலாம்.
சாமை அரிசியில் நன்மை தரும் கொழுப்புகள் அதிகமாக உள்ளதால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது மிகவும் நல்லது.
ஆண்கள் இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது ஆண்மை குறைவு ஏற்படுவதை தடுக்க முடியும்.
சுவையான சாமை அரிசி கிச்சடி எப்படி செய்வது என்பதைஇப்பதிவில் காணலாம்.
தேவையான பொருள்கள்:
சாமை அரிசி= 1 கப்
பெரிய வெங்காயம்=1
பச்சை மிளகாய் =2
கேரட்,பீன்ஸ், உருளைக்கிழங்கு =150கி
பச்சை பட்டாணி -50கி
தக்காளி=1
புதினா, மல்லி இலை-1 கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது -2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, மல்லி இலை, தக்காளி, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். பின் பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பின் மிளகாய் தூள் 2 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.
ஒரு கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் வைத்தால் சாதம் நன்கு குழைந்து வரும். உதிரியாக வேண்டுமானால் ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீரே போதுமானது. தண்ணீர் சேர்த்த உடன் அரிசி மற்றும் உப்பு சேர்த்து குக்கர் மூடி போட்டு மூன்று விசில் எடுத்தால் சுவையான சாமை அரிசி கிச்சடி தயார். தேங்காய் சட்னி அல்லது வெங்காய பச்சடி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
விரைவில் செரிமானம் ஆகக்கூடிய ஒரு நல்ல ரெசிபி!