அன்புள்ள அம்மா… !
நான் செளக்கியம். நீங்களும் அப்பாவும் நலமா… ?
நீங்கள் பத்திரிகையில் படித்து இருப்பீர்கள். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளில் நான் மிகவும் முக்கியமான இடத்தை பெற்ற கேப்டன்.
அம்மா… !
நான் உங்களை நேசிப்பது போலவே என் தாய் நாட்டையும் நேசிக்கிறேன். எஸ். ஐ லவ் இந்தியா.
அம்மா…
நான் இருக்கும் இடம் ஸ்ரீ நகருக்கு பக்கமான ஒரு மலை பிரதேசம். மிகவும் குளிராக இருக்கும். ஆனால், நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை நிறைவேறும்போது மற்ற எல்லா தடைகளும் தூள்தூளாக போய் விடுகின்றன.
அப்பாவிடம் சொல்லுங்கள். நான் நலமாக இருக்கிறேன் என்று.
அம்மா… !
இங்கு தீவிரவாதிகள் அடிக்கடி நுழைந்து போர் செய்து வருகிறார்கள். சுற்றுலா வந்த மக்களை ஈவு இரக்கம் இன்றி சுட்டு தள்ளினார்கள். அதற்கு பதிலடி கொடுக்கவே ஆபரேஷன் சிந்தூர்.
நாங்கள் ட்ரோன்களை அனுப்பி தீவிரவாத முகாமை அடையாளம் கண்டு கொண்டோம். அப்போதுதான் ஆபரேஷன் சிந்தூர் ஆரம்பித்தது. நான் விமான படையில் உள்ள 5 பேருக்கு கேப்டனாக பொறுப்பு எடுத்து கொண்டேன்.
தீவிரவாத முகாமை அடையாளம் கண்டு அதை அழிப்பதே விமான படையின் இலக்கு.
என்னுடன் பைலட்டை சேர்த்து 7 பேர். இந்த டீமூக்கு நான்தான் கேப்டன். இது எனக்கு பெருமை தருவதாக இருந்தது. எனக்குக் கொடுக்கப்பட்ட பணியை செய்து முடிக்கவேண்டும் என்று ஒரு உந்துதல் சக்தி எனக்கு உள்ளே இருந்தது.
ட்ரோன் எடுத்த படங்களைப் பார்த்தோம். அதில் ஒரு பெரிய கட்டடத்தில் சுமார் 100 தீவிரவாதிகள் இருந்தது தெரிய வந்தது. என் மேலதிகாரிகள் என்னை ஆபரேஷன் சிந்தூர் துவங்கச் சொன்னார்கள்.
நாங்கள் கிளம்பினோம். அந்த இடம் தூரத்தில் இல்லை. இந்திய எல்லையை ஒட்டியே இருந்தது. நாங்கள் புறப்பட்டு 30 நிமிடங்களில் அந்த பெரிய கட்டடம் மேல் பறந்தோம். கீழே இருந்து தாக்குதல் துவங்கினார்கள் தீவிரவாதிகள். நான் என் சக வீரர்களுக்கு “அட்டேக்” என்று உத்தரவு பிறப்பித்தேன்.
குண்டுகள் சரியாக குறியை அடைந்தன. வெறும் 7 நிமிடங்கள்தான். தீவிரவாதிகள் முகாமை அழித்து விட்டோம். சுமார் 100 தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்து போனார்கள்.
சக வீரர்கள் என்னை கட்டிப் பிடித்தனர். எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஆபரேஷன் சிந்தூர் முழு வெற்றி அடைந்தது. அதுவும் என் தலைமையின் கீழ் நடைபெற்ற சம்பவம் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.
வெற்றியோடு திரும்பிய எங்களை எங்கள் மேலதிகாரிகள் பாராட்டி உடல் தழுவி கொண்டார்கள்.
ஆம். ராணுவம் முழுக்க முழுக்க எங்களுக்கு 'ஜெய்' போட்டது. மனம் முழுக்க முழுக்க சந்தோஷம். தாய்நாட்டிற்காக போர் புரிவது… அதுவும் தமிழனாகிய என் தலைமையில்...
அம்மா… உங்களுக்கு ஒரு நல்ல செய்தி.
நான் ராணுவ பணியை முடித்து சீக்கிரம் நம் வீட்டிற்கு வரப் போகிறேன். அப்பாவிடமும் சொல்லுங்கள். அநேகமாக அடுத்த மாதம் துவக்கத்தில் நான் அங்கே வருவேன்.
சரிம்மா. நான் முடிக்கிறேன். இத்தனை ஆண்டுகள் தாய் நாட்டிற்காக சேவை செய்தேன். இனி என்னை பெற்றெடுத்த உங்கள் இருவரையும் நேசித்து உங்களுக்குப் பணி செய்ய விரும்புகிறேன்.
என் ராணுவ அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுத திட்டம் போட்டு உள்ளேன். ஆம், நம் வீட்டில்தான் எழுதப் போகிறேன்.
சந்தோஷம்தானே அம்மா…!
வாழ்த்துக்கள்.
ஜெய் ஹிந்த்!