நம் வீட்டில் இருக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

முத்தான பத்து, நம் வாழ்க்கை கெத்து
Important things to have in our home!
Lifestyle articles
Published on

- என். சொக்கன்

ம்ம வீட்ல இது இருக்கணும், அது இருக்கணும் என்று மக்களுக்குத் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும். அதில் ஒருவருக்குப் பிடிப்பது இன்னொருவருக்குப் பிடிக்காது, இவருக்குப் பிடிப்பதை வேறொருவர் 'ம்ஹூம், தேறாது' என்று உதட்டைப் பிதுக்குவார். ஆனால், இன்றைய சூழ்நிலையில் எல்லாருடைய வீட்டிலும் இருக்கவேண்டிய, மக்களுடைய நல்வாழ்வு, முன்னேற்றத்துக்குத் துணைபுரியக்கூடிய பத்து விஷயங்கள் என்னென்ன?

1. அலாரம் கடிகாரம்

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் அலாரம் கடிகாரத்தைப் பெரும்பாலானோர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனெனில், நம்மைப் பொறுத்தவரை அது ஒரு சாதாரணக் கருவி. சொல்லப்போனால், நாம் நன்கு தூங்க விரும்பும் நேரத்தில் நம்மை எழுப்பிவிட்டு எரிச்சலூட்டுகிற பொருள்.

ஆனால், இன்னொரு கோணத்தில் பார்த்தால் அலாரம் கடிகாரம் நமக்கு நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு தோழராக இருக்கிறது. அதிகாலையில் நம்மை எழுப்பிவிடுகிற கடிகாரத்தில் தொடங்கி, 'மதியம் ரெண்டரைக்கு ஒருத்தரைக் கூப்பிடணும்' என்று நாம் செல்பேசியில் வைத்துக்கொள்கிற நினைவூட்டல், சமையலறையில் 'காய் 15 நிமிஷத்துக்கு வேகணும்' என்று நாம் கடிகாரத்தைப் பார்த்துக்கொள்ளுதல் என அனைத்தும் இந்த வகையில்தான் வருகின்றன.

பல்வேறு துறைகளில் உலகின் தலைசிறந்த வெற்றியாளர்களைப் பார்த்தால், அவர்கள் அனைவரும் நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். எதையும் சரியான நேரத்தில் தொடங்கவேண்டும், சரியான நேரத்தில் செய்யவேண்டும், ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கக்கூடாது என்று ஓடுகிறவர்களாக இருப்பார்கள். இந்தப் பழக்கத்தையெல்லாம் நமக்கு வழங்கும் ஓர் அரிய, எளிய கருவிதான் அலாரம் கடிகாரம்.

நினைவிருக்கட்டும், உலகில் யாரும் பணம் தந்து வாங்க இயலாத ஒரே சொத்து, நேரம்தான். அதைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் முன்னேறுவார்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கு இளவயதிலிருந்து இதைக் கற்பிக்க அலாரம் கடிகாரம் மிகவும் உதவும்.

2. எடை இயந்திரம்

உடல் எடையைச் சரியாகக் கவனித்துக்கொள்ளுதல் ஒரு முக்கியமான வாழ்க்கைத் திறன். நம்முடைய உயரத்துக்கு நாம் எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்வதும், அந்த எடையைவிடக் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கிறவர்கள் உரிய உணவுமுறை மாற்றங்கள், உடற்பயிற்சி போன்றவற்றின்மூலம் சரியான எடையை நோக்கிச் செல்வதும், தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவதும் நன்மையுள்ள பழக்கங்கள். இதையெல்லாம் செய்வதற்கு வீட்டில் ஓர் எடை இயந்திரம் இருக்கவேண்டும், அது டிஜிட்டல் முறையில் துல்லியமாகக் கணக்கிடுகிற இயந்திரமாக இருந்தால் இன்னும் நல்லது.

ஆனால் ஒன்று, எடை இயந்திரம் இருக்கிறது என்பதற்காகச் சில மணி நேரத்துக்கு ஒருமுறை எடை பார்த்து அதிர்ச்சியடைவதோ மகிழ்ச்சியடைவதோ வீண் வேலை. எடையைக் கட்டுப்படுத்துவது ஒரு போதையாக ஆகிவிடக்கூடாது, நல்ல பழக்கமாகத் தொடரவேண்டும், அந்தச் சமநிலை முக்கியம்.

3. இணைய இணைப்புள்ள ஒரு ஸ்மார்ட் கருவி

மாற்றங்கள் நிறைந்த இன்றைய உலகத்தில் ஏராளமான விஷயங்கள் நொடிக்கு நொடி நடந்து கொண்டிருக்கின்றன. நம் நண்பர்கள், உறவினர் களுடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதில் தொடங்கிச் செய்திகளைப் படிப்பது, பொழுதுபோக்கு, வங்கிச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வது, அரசு அலுவலகங்களை அணுகுவது, கல்லூரி, பள்ளிப் படிப்பு என அனைத்துக்கும் இணையம் தேவையாக இருக்கிறது. உலகில் அனைவருடனும் ஒரு கிளிக்கில் இணைகிற, ஊடாடுகிற வசதியைத் தருகிற இணையமும் அதைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய ஒரு ஸ்மார்ட் கருவியும் (செல்ஃபோன் அல்லது தொடுகணினி (டேப்ளட்) அல்லது மேசைக்கணினி அல்லது மடிக்கணினி (லாப்டாப்) போன்றவை) நம் வீடுகளில் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

இணையத்தில் நல்லவற்றோடு தீயவையும் நிறைந்திருக்கின்றன என்பதையும் நினைவில் வைக்கவேண்டும், ஆனால், அதற்கு அஞ்சி இணையத்தை ஒதுக்கிவிடவும் கூடாது.

இதையும் படியுங்கள்:
நல்லதொரு குடும்பம்!
Important things to have in our home!

4. மிதிவண்டி (அல்லது) மின்சார வண்டி

பொதுவாக, 'ஒரு பைக் இல்லாட்டி ஒரு கார் இருக்கணும், ரெண்டும் இருந்தா இன்னும் நல்லது' என்பார்கள். ஆனால், கால மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இதை நாம் சற்று மாற்றிக்கொள்ளலாம், 'ஒரு மிதிவண்டி இருக்கணும், தேவைப்பட்டா ரெண்டு சக்கர அல்லது நாலு சக்கர வண்டி ஒண்ணு, அது மின்சாரத்துல இயங்கறதா இருந்தா இன்னும் நல்லது.' மிதிவண்டிக்குப் பெட்ரோல், டீசல், மின்சாரம் எதுவும் தேவையில்லை, அது சுற்றுச்சூழலைப் பாதிப்பதில்லை என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, அது ஒரு நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கிறது, உடலுக்கு நன்மை தருகிறது. ஆனால், அதை எல்லா இடங்களிலும் எல்லாத் தேவைகளுக்கும் பயன்படுத்த இயலாது என்பதால், மின்சார வண்டி ஓ.கே.!

5. தூய்மைப் பொருட்கள்

Cleanliness is next to Godliness என்று ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு. தூய்மையான வீட்டில் உடல் நலம் பெருகும், நோய்கள் குறையும். பல் தேய்த்தல், முகம் கழுவுதல், குளித்தல், வெளியில் சென்று திரும்பினால் கை, கால் கழுவுதல், ஆடைகளை அழுக்கின்றித் துவைத்தல், காய்கறிகளைத் தூய்மைப்படுத்திவிட்டுச் சமைத்தல் என்று இதையொட்டிப் பல பழக்கங்கள் உள்ளன. இவற்றை நாம் மிகுதியாகப் பயன்படுத்தப் பயன்படுத்த நமக்கு நல்லது. அதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் நம் வீட்டில் இருக்கவேண்டும். அதற்காக விலை உயர்ந்த சோப்பு, சீப்பு, பற்பசைதான் வாங்கவேண்டும் என்று பொருள் இல்லை. நம்முடைய பட்ஜெட்டில் நமக்கு ஏற்றதை வாங்கிப் பயன்படுத்தலாம். இயன்றவரை தூய்மையைப் பராமரிக்கும் மனநிலைதான் இங்கு அடிப்படைத் தேவை.

6. ஒழுங்குள்ள சமையலறை

நம்முடைய சமையலறைகள் ஒவ்வொன்றும் ஒரு மினி தொழிற்சாலையைப் போன்றவை. மளிகைப் பொருட்கள், காய்கறிகளை வாங்குவது, சேமித்துவைப்பது, சரியான நேரத்தில் சரியான அளவில் பயன்படுத்திச் சுவையாகச் சமைப்பது, யாருக்கு எவ்வளவு தேவை என்று கணக்கிட்டுச் சமைப்பது, எஞ்சும் பொருட்களைக் கையாள்வது என அனைத்தையும் இல்லத்தரசிகள் மிகச் சிறப்பாகச் செய்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு உதவக்கூடிய ஒழுங்குள்ள சமையலறை ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டும்.

7. வரவு செலவுப் புத்தகம்

நாம் சம்பாதிக்கிற ஒவ்வொரு ரூபாய்க்கும், நாம் செலவழிக்கிற ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்திருப்பது ஒரு நல்ல பழக்கம். இதன்மூலம் நம்முடைய பணம் எப்படி வருகிறது, எப்படிச் செல்கிறது என்கிற தெளிவு நமக்குக் கிடைக்கும், அதை மிச்சப்படுத்திச் சேமிக்கும் வழிகளையும் கண்டறியலாம். அதற்காக, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வரவு செலவுப் புத்தகம் இருக்கவேண்டும். அதை நோட்டுப் புத்தகத்தில்தான் எழுதவேண்டும் என்று கட்டாயம் இல்லை, கணினி, செல்பேசியில்கூட எழுதலாம், தொடர்ந்து எழுதுவதும் மாதம் நிறைவடைந்ததும் செலவுகளை அலசி, ஆராய்ந்து, அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிகளைச் சிந்திப்பதும்தான் முக்கியம்.

8. நூலகம்

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறிய நூலகமாவது இருக்கவேண்டும். அதில் நான்கைந்து நூல்கள் இருந்தால்கூடப் போதும், அவற்றை அவ்வப்போது மாற்றிக்கொண்டிருக்கலாம், பொது நூலகத்திலிருந்து நூல்களை வாடகைக்குப் பெற்றுப் படிக்கலாம், பழைய நூல்களைக் குறைந்த விலையில் வாங்கலாம்... இப்படிப் பல வழிகளில் வீட்டில் எல்லாருக்கும் படிக்கிற பழக்கத்தைக் கொண்டுவந்துவிட்டால், அதன்மூலம் நாம் ஏராளமாகக் கற்றுக்கொள்வோம், நம் வாழ்க்கையை இன்னும் முன்னேற்றிக்கொள்வோம். இதைவிடச் சிறந்த ஒரு நேர முதலீடு வேறு எதுவும் இல்லை.

இதையும் படியுங்கள்:
96 வயதில் பத்ம விருது! மங்கையர் குலத்துக்கே பெருமை சேர்க்கும் நிகழ்வு!
Important things to have in our home!

9. மகிழ்ச்சிப் பெட்டி

எல்லாருடைய வாழ்க்கையிலும் பிரச்னைகள் வருகின்றன, பதற்றமும் அச்சமும் அவ்வப்போது எழுகின்றன. அதுபோன்ற நேரங்களில் நம்மைத் தேற்றிக்கொள்வதற்காக ஒரு 'மகிழ்ச்சிப் பெட்டி'யைத் தயாரிக்கச்சொல்கிறார்கள் உளவியல் வல்லுனர்கள். அதாவது, நாம் சோர்ந்திருக்கும் நேரத்தில் நமக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய பொருட்களை இந்தப் பெட்டியில் சேர்த்துவைக்கலாம். எடுத்துக்காட்டாக, நம் அன்புக்குரியவர்களுடைய புகைப்படங்கள், நமக்குப் பிடித்த உணவுப் பொருட்கள், நாம் அழைத்துப் பேசக்கூடிய நண்பர்களுடைய தொலைபேசி எண்கள், நாம் விரும்பிப் பார்க்கிற ஒரு திரைப்படம் அல்லது விரும்பிக் கேட்கிற ஒரு பாடல் ஆகியவை அந்தப் பெட்டியில் இடம்பெறலாம். இப்படி ஒரு பெட்டி வீட்டில் ஒவ்வொருவருக்கும் இருக்கலாம். அது தேவையுள்ளபோது சட்டென்று கிடைக்கிற இடத்தில் இருக்கவேண்டும்.

10. நன்றிக் குறிப்பேடு

இவ்வுலகில் நமக்கு எத்தனையோ நல்லவை கிடைத்திருக்கின்றன, கிடைத்துக்கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் பல தனி நபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் காரணமாக இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நாம் நன்றி சொல்கிறோமா? ஒருவேளை, வாயைத் திறந்து சொல்லாவிட்டாலும், மனத்துக்குள்ளாவது சொல்கிறோமா?  இந்தப் பழக்கத்தைக் கொண்டுவரக்கூடிய ஒரு நல்ல விஷயம், நன்றிக் குறிப்பேடு. அதாவது, ஒவ்வொரு நாளும் இந்தக் குறிப்பேட்டைத் திறந்துவைத்துக்கொண்டு சில நிமிடங்கள் சிந்திக்கவேண்டும், அந்த நாளில் நமக்கு நடந்த நல்ல விஷயங்கள் என்ன, நாம் எதற்கெல்லாம் நன்றியுடன் இருக்கவேண்டும் என்று எண்ணிப்பார்த்து அதை எழுதவேண்டும். உடற்பயிற்சியைப்போல் இது ஒரு நல்ல மனப்பயிற்சியாக இருக்கும்.

இதை எழுதுவதுடன் நிறுத்திவிடவேண்டியதில்லை, சம்பந்தப்பட்ட நபரிடம் நேரிலோ தொலைபேசியிலோ நம்முடைய நன்றியுணர்வைத் தெரிவிக்கலாம், அது நம் உறவுகளை இன்னும் வலுவாக்கும், நமக்கும் மன நிறைவையும் மகிழ்ச்சியையும் வழங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com