

இந்திரலோகம் என்பது இந்து புராணங்களின்படி தேவர்களின் தலைவனான இந்திரன் ஆட்சி செய்யும் சொர்க்கலோகம் அல்லது தேவலோகம் எனப்படும். இது மேருமலையின் உச்சியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி அமராவதி என அழைக்கப்படுகிறது.
அதன் தலைநகர் இந்திரன், ரம்பைகள், தேவலோக கன்னிகைகள் மற்றும் பிற தேவர்கள் வாழும் இடம் என இந்து புராணம் கூறுகிறது. பூமிக்கு மேலே உள்ள ஏழு உயர் லோகங்களில் ஒன்றாக சொர்க்க லோகம் அமைந்துள்ளது.
இன்பங்கள் நிறைந்த மிக ஆடம்பரமான இடமாக கருதப்படுகிறது. இங்கு பாட்டு, நடனம், இசை நிகழ்ச்சிகள் மற்றும் நித்திய நிகழ்ச்சிகள் என அனைத்தும் எப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்திரன் தான் இதன் தலைவர் ஆவார்.
நல்ல கர்ம வினைகள் மற்றும் வேள்விகள் செய்த ஆன்மாக்கள் தங்கள் மரணத்திற்குப் பிறகு இந்திரலோகத்தை அடைகின்றனர். சுருக்கமாகச் சொன்னால் இந்திரலோகம் புண்ணிய பலன்களை அனுபவிக்கும் தற்காலிக சொர்க்கம் ஆகும். இந்த இடம் மோட்சத்திற்கு முந்திய நிலையை குறிக்கிறது.
இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் வசிக்கும் இடமாகும். புராணத்தின் படி பிரம்மாவின் மகனும் தேவர்கள் கட்டடக் கலைஞருமான விஸ்வகர்மா நிறுவிய அமராவதி நகரமாகும். இங்கு நறுமணங்கள் கொண்ட பூந்தோட்டங்கள், சாகா வரம் அளிக்கும் அமிர்தம், கற்பக விருட்சம், கேட்டதை தரும் காமதேனு, நடன அழகிகள், தேவ கன்னிகைகள், கந்தர்வர்கள், இந்திரனின் வெள்ளை யானை, வெள்ளை குதிரை ஆகியவை உள்ளன.
இந்த அமராவதி பட்டணம் 800 மைல் சுற்றளவு கொண்டது. 40 மைல் உயரத்திற்கு மதில் சுவர் சுற்றிலும் உள்ளது. பலமுறை அசுரர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. அமராவதி நகரத்திற்கு மனிதர்கள் செல்ல அனுமதி இல்லை.
தேவர்களுக்கு இணையான நகுசன், யயாதி, அர்ஜுனன் இவர்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. இங்குள்ள தூண்கள் வைரத்தால் மின்னும். ஆசனங்கள் அனைத்தும் தங்கத்தால் ஆனது.
இந்திர சபை, 33 தேவர்கள், 48 ஆயிரம் ரிஷிகள் அமரும் வகையில் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அமராவதி நகரில் நூற்றுக்கணக்கான ஏரிகள் பெரிய அரண்மனைகள் பூங்காக்கள் நிறைந்து காணப்படும்.
இது 14 உலகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தேவர்கள் அனைவரும் வசித்து வந்ததால் தேவலோகம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்திரன் பதவி மிகவும் உயர்ந்த பதவியாக புராணத்தில் கூறப்படுகிறது.
இந்த இடத்தை கைப்பற்ற அசுரர்கள், அரக்கர்கள் முயலும் போது சிவபெருமான், பெருமாள் ஆகியோர் அவர்களை அழித்து தேவலோகத்தை மீண்டும் தேவர்களுக்கு மீட்டி கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இந்திரலோகத்தில் ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை போன்ற நடன அழகிகள் இருக்கிறார்கள். இவர்கள் நடன கலையில் தேர்ச்சி பெற்றவர்கள். இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் இவர்களது நடனத்தை கண்டு களிப்பது வழக்கம். இந்திரலோகத்தில் கந்தர்வர்கள் சூரியன், சந்திரன், சனி, ராகு, கேது போன்ற நவகிரகங்களின் அதிபதிகளும், அக்னி, வாயு, வர்ணன் போன்ற பஞ்சபூதங்களில் அதிபதிகளும் இருக்கிறார்கள்.
இந்திரனுக்கு பிடித்தமான ஆயுதம் வஜ்ராயுதம். இவரது சக்தி வாய்ந்த தேரோட்டியின் பெயர் மாதலி .
இந்திரன் மிகவும் தலைக்கனம் பிடித்தவன். யாரையும் மதிக்க மாட்டான் . இவரை அடக்க எண்ணிய விநாயகர் இந்திரலோகம் சென்றார். அவருக்கு இந்திரன் பிரம்மாண்டமான வரவேற்பை கொடுத்தான். உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தாராளமாக கூறினான். உடனே விநாயகர் ஒரே ஒரு அருகம்புல்லை மட்டும் எடுத்து அதை ஒரு தராசு தட்டில் வைத்து இதற்கு இணையாக எனக்கு கொடுங்கள் போதும் என்றார்.
இந்திரன் பலமாக சிரித்து விட்டு தன்னிடம் இருந்த தங்கக் கட்டிகளை கொண்டு தராசில் அதற்கு நிகராக வைத்தான். இருந்தாலும் அருகம்புல்லின் எடைக்கு ஈடாகவில்லை. தன்னிடம் இருந்த தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிற ஆபரணங்கள் அனைத்தையும் வைத்தும் அந்த அருகம்புல்லுக்கு ஈடாகவில்லை.
அதற்கு மேல் கொடுப்பதற்கு இந்திரனிடம் எதுவும் இல்லை. எனவே விநாயகர் இடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரினார். இவ்வாறாக விநாயகர் இந்திரனின் ஆணவத்தை அடக்கியதாக புராணங்கள் கூறுகின்றன.