
பிறந்த குழந்தைக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் ஒருங்கே கிடைக்கும் உணவெனில் அது தாய்ப்பால் மட்டுமே. ஒரு மனிதனுக்கு நிரந்தரமான நோய் எதிர்ப்பார்ப்பாற்றலிற்கு பெரிதும் துணையாக இருப்பது குழந்தையாக இருக்கும் போது அவனுக்கு கிடைக்கும் தாய்ப்பால் ஆகும்.
தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் உடலுக்கு மட்டுமில்லை, தாயின் உடலுக்கும் நல்லது. தாய்ப்பால் கொடுப்பதால் பெண்கள் மார்பக புற்று நோய் வருவதில் இருந்து விடுபட முடியும்.
சில தாய்மார்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காமல் போகும். தாய்மார்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்ப காலத்தில் உடலுக்கு வலுவூட்டும் உணவுகளை உண்ணாமல் விட்டது மற்றும் அதிக மன உளைச்சலும் தாய்ப்பால் குறைய காரணமாகும். பின்வரும் குறிப்புகளை அறிந்து கொண்டு பின்பற்றினால் இரட்டை குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு கூட போதுமான அளவு தாய்ப்பால் சுரக்க ஆரம்பித்து விடும்.
தாய்ப்பால் அதிகரிக்க
1. தாய்ப்பால் அதிகரிக்க ஆலம் விதை, ஆலம் விழுது, கடலை வகைகள், வெந்தயம், பூண்டு மற்றும் கீரைகள் போன்றவற்றை அதிகளவில் சேர்க்க வேண்டும்.
2. வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
3. மேலும் சாதம் வடித்த கஞ்சி வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி கொடுக்க, தாய்ப்பால் சுரக்கும்.
4. கேழ்வரகு, முளைகட்டி இடித்து அதில் முளைகட்டிய வெந்தய பொடி சேர்த்து குடிக்க பால் சுரப்பு அதிகரிக்கும்.
5. பூண்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்.
6. அனைத்து கீரை வகைகளும் தாய் பால் சுரக்க துணை நிற்கும். இருந்தாலும் முருங்கைக்கீரை அதிக சிறப்பு வாய்ந்தது. முருங்கைக் கீரையை பூண்டு மற்றும் மிளகுடன் சேர்த்து கொதிக்க வைத்த சாறாகவோ அல்லது தனியாக வதக்கி உண்ணலாம்.
7. பாலூட்டும் தாய்மார்கள் பாதாம் சாப்பிடுவது மிக சிறந்தது. முந்திரி, பாதாம், வாதமை கொட்டை, மற்றும் வேர்க்கடலை போன்றவை பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இது அதிக அளவு ஊட்டச்சத்துக்களையும், புரோட்டின் மற்றும் கால்சியத்தையும் கொண்டு உள்ளதால் பால் சுரக்க துணை நிற்கின்றன.
8. பேரிச்சம்பழம் / அத்திப்பழம் போன்றவற்றை தினம் சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படும்.
9. பாலுடன் பூண்டை வேகவைத்து மசித்து நன்றாக கொதிக்க விட்டு தினமும் குடித்து வர பால் வற்றுதல் பிரச்சனையே வராது.
10. முளை கட்டிய பயறு வகைகள் சிறுதானிய வகை உணவுகளை சாப்பிடலாம். இது தாய் குழந்தை இருவருக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தி தாய்ப்பாலும் சுரக்க வைக்கும்.
11. அசைவ பிரியர்கள் என்றால் பால் சுறா மீன் மற்றும் பால் சுறா கருவாடு சாப்பிடுவதால், தாய்ப்பால் சுரத்தல் அதிகரிக்கும்.
12. பால் கொடுக்கும் தாய்மார்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம். குழந்தைக்கு பால் கொடுக்கும் போது வந்தது கொடுத்த பின்னரும் கட்டாயமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
13. உண்ணும் உணவு ஒரு பக்கம் இருந்தாலும், பால் கொடுப்பதற்கு முன் மார்பகத்தை கைகளால் நன்றாக அழுத்தி மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். பால் எளிதாக சுரக்கும். எனவே, ஒவ்வொரு முறை பால் தரும் முன்ப மார்பகங்களை நன்றாக தேய்த்தும், கசக்கி விட்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால், அதனால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)