

காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை... இந்த பழமொழியை நாம் எல்லோருமே கேட்டு இருப்போம். இந்த பழமொழிக்கான விளக்கத்தை பார்க்கலாமா...
ஒரு காக்கா ஒரு பனை மரத்தின் (Kakka panam pazham story) மேலே உட்கார்ந்தது. சரியாக அது உட்காரும் நேரத்திற்கு ஒரு பழம் வந்து அதன் மேலே விழுந்தது. இதை இரண்டு கோணங்களில் பார்க்கலாம். மரத்திலிருந்து பழம் காக்காவை பார்த்து விழுந்ததாகவும் காக்காவால் மரம் ஆடி அந்தப் பழம் விழுந்ததாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
வாஸ்தவத்தில் அந்தப் பழம் ஆனது பழுத்து தொங்கிக் கொண்டிருந்தது. அது எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருந்தது. சரியாக அது விழும் நேரத்திற்கு காக்கா வந்து உட்கார்ந்து விட்டது. ஆகவே இதில் தவறு மரத்தின் மீதுமில்லை, காக்காவின் மீதுமில்லை. காக்கை உட்காருவதும் பனம் பழம் விழுவதும் இரண்டு தனித் தனிச் செயல்கள். ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் யதேச்சையாக நடந்தவை.
இந்தப் பழமொழி ஆனது அன்றாட வாழ்க்கையில் எப்படி ஒத்துப் போகிறதென்று தெரியுமா உங்களுக்கு......
உதாரணத்திற்கு வீட்டில் ஏதாவது ஒரு பொருள் முதலிலேயே சிறிது வீணாகி இருக்கும். ஆனால் அதை ஒரு குழந்தை எடுக்கும் போது அது உடைந்து விடும். தவறு அந்த குழந்தை மீது இல்லை. ஏற்கனவே உடையும் நிலையில் இருந்த அந்தப் பொருள் உடைவதற்கும் குழந்தை எடுப்பதற்கும் சரியாக இருக்கவே அந்தக் குழந்தை எடுக்கும் சமயத்தில் அது உடைந்து விட்டது. ஆனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் அந்த குழந்தையை போட்டு அடிப்பார்கள். இந்த குழந்தையின் நிலைமையும் காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாகி விட்டது.
இன்னும் விளக்கமாக சொல்ல போனால் ஒரு நபர் ஒரு இடத்திலோ அல்லது பொது இடங்களிலோ அல்லது அலுவலகத்திலோ நுழையும் போது ஒரு பிரச்னை எதிர்பாராத விதத்தில் ஆரம்பிக்கிறது என்று வைத்துக் கொண்டால் சில பேர் டபக்கென்று பழியை அந்த நபர் மீது போட்டு விடுவார்கள். ஆனால் அந்தப் பிரச்னைக்கும் அவருக்கும் சம்பந்தமே இருக்காது. சம்பந்தமே இல்லாமல் அவர் பெயர் வந்துவிடும். அவர் போனார், உடனே பிரச்னை தொடங்கி விட்டது என்று. இவரோட நிலைமையும் இந்த பழமொழியின் கதையை போலத்தான்.
இன்னும் சில வீடுகளில் இரண்டு குழந்தை இருந்தால் பெரிய குழந்தை ஒரு பொம்மையை தெரியாமல் கீழே போட்டு விடும் . அது லேசாக உடைந்து விடும். ஆனால் இந்த குழந்தை பயத்தில் அதை ஓசைப்படாமல் அப்படியே வைத்துவிட்டு வந்துவிடும் பிறகு இரண்டாவதாக இருக்கும் சின்ன குழந்தை அதை எடுக்கப் போகும்போது அது கையோடு வந்துவிடும். பிறகு என்ன? அந்த குழந்தை தான் அடி வாங்கும், காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை தான் ஆகும்.
இதேபோல இன்னும் நிறைய கூறிக் கொண்டே போகலாம் வாழ்க்கையில் முக்கால்வாசிப் பேர் இப்படித் தான் எதேர்ச்சியாக நடந்த சம்பவத்திற்கும், அவர்கள் செய்யாத தவறுக்கும் பழியை சுமந்து கொண்டிருக்கிறார்கள்.