
என் கற்பனை உலகிற்கான முதல் கதவு... கல்கியின் நூல்கள். இவர் இயற்றிய கதையின் நாயகிகளே அதற்கான சாவி.
பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தில் இடம் பெற்ற பெண் கதாபாத்திரங்கள்: குந்தவை, பூங்குழலி, நந்தினி, வானதி, ஊமை ராணி.
பார்த்திபன் கனவு வரலாற்றுப் புதினத்தில் பெண் கதாபாத்திரங்கள்: வள்ளி, குந்தவி.
சிவகாமியின் சபதம் வரலாற்றுப் புதினத்தில் இடம் பெற்ற பெண் கதாபாத்திரம்∶ சிவகாமி.
என இவரின் கதைகளில் வரும் ஒவ்வொரு பெண்கதாபாத்திரங்களும் பெண்களின் கனவுகள், எதிர்பார்ப்புகளின் எதிரொலிகள்.
பொதுவாக பெண்களிடம் தான் வாழ விரும்பும் வாழ்க்கை முறை, கனவுகள் பற்றி கேட்டால், அது நிறைவேற, எதிர்காலத்தில் அதாவது, குறைந்தது கால் நூற்றாண்டு கடந்து பிறந்திருக்க வேண்டும் எனக் கூறுவர். ஏனெனில் பெண்ணுரிமை தற்போதும் கூட பல சடங்கு, சம்பிரதாயங்கள், கலாசாரம், இனம், மதம், மொழி என பலவற்றுள் முடங்கிக் கிடக்கிறது என்பதால்.
ஆனால் நானோ, கடந்த காலத்தில் பல நூறாண்டுகளுக்கு முன்பே பிறந்திருக்க வேண்டுமென கூறுவேன். ஏனென்றால் முன்பு குறிப்பிட்ட பெண் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் நான் வாழ விரும்பும் பெண்ணிய வாழ்க்கை.
நீங்கள் குந்தவையாகப் பிறந்தால் அரசாள இயலும். அரசியலில் ஈடுபடலாம், போர்களில் முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளலாம். உமது பாட்டனார், உற்றார், உறவினர், தாய், தந்தை, தமையன் யாராயினும் மக்களின் நலனுக்காக, தம்மால் எவரையும் எதிர்த்துப் பேச இயலும். அவர்களை கண்டிக்கலாம். இந்தச் சமூகம் உங்கள் அரசியல் அறிவையும், துணிவையும் பாராட்டும். மாமந்திரிகளும், வயதில் மூத்தோரும் கூட உங்கள் விவேகத்தையும் பராக்கிரமத்தையும் கண்டு உங்களுக்கு அடிபணிவார்கள்.
நீங்கள் கல்கியின் சிவகாமியாக இருந்தால், பேரரசர்கள் முன்னிலையிலும் உங்கள் காதலின் பிடிவாதத்தைத் தைரியமாக நிலைநாட்டும் பெண்ணாக இருப்பீர்கள். வீட்டில் முடங்கிக் கிடக்கும் பெண்ணாக இல்லாமல், கலை மீதுள்ள ஆர்வத்தை ஊரெங்கும் பரப்பச் செய்வீர்கள். 'ஒரு பெண்ணானவளுக்கு, கனவு பாதுகாப்பானதா?' என்ற ஐயம் இருக்காது. மாறாக, கோயில், சோலைகள், அரங்கம், மண்டபம் என எங்கிருந்தாலும் உங்கள் உணர்ச்சிகளை நடனம் மூலம் உச்சரிப்பீர்கள். யாருமில்லாத ஊரில், வேறொரு நாட்டில், பகைமை பாராட்டிக்கொண்டு தனிப்பெண்ணாக பத்தாண்டுகள் ஆனாலும் வாழமுடியும். பின் நாடு திரும்பி, காதலை இழந்தவளாய் இருந்தாலும், காலம் முழுவதும் தம்மை தனது கனவுகளுக்காக அர்ப்பணித்து, கலைப் பயணத்தை வாழ்நாள் முழுவதும் தொடரலாம்.
திருமணம், குடும்பம் என்பவை ஒரு பெண்ணுக்கு பல எதிர்பார்ப்புகளில் ஒன்று மட்டுமே; அவை அத்தியாவசியம் அல்ல. தனிக்காட்டு ராணியாக வாழலாம்.
ஒருவேளை எந்த அரச குடும்பமுமன்றி, தலைமை பொறுப்பு, பாரம்பரியக் குடும்பம் இவற்றைப்போல எந்தப் பின்புலமும் இல்லாமல், ஒரு படகோட்டி அல்லது ஓடக்காரரின் மகளாகவோ, மனைவியாகவோ, பிறந்திருந்தால், இத்தகைய பிடிவாதமும் தைரியமும் ஒரு பெண்ணின் வாழ்வியலில் இருக்க முடியாது என நினைத்தால், அதற்காக கல்கி அழுத்தம் திருத்தமாக இயற்றிய கதாபாத்திரங்களே பூங்குழலி, வள்ளி.
நாம் ஒருவேளை பூங்குழலியாகப் பிறந்திருந்தால், ஒரு சாமானிய படகோட்டியின் குடும்பமாக இருந்தாலும், தனிப் பெண்ணாக கடல் கடந்து செல்லலாம். வயோதிகன், ஆண், பெண், அரசன் என யாராக இருந்தாலும், தனிப்படகில் பல நாட்கள், வாரங்கள் கடல் கடந்து வேறு நாடுகளுக்கு அழைத்து செல்லலாம். கையில் குறுவாளோடு பூதங்களுடன் கூட பேசிப்பழகலாம்.
வள்ளியோ இன்னும் பிரமிக்கவைக்கும் பெண்! வள்ளியாகப் பிறந்திருந்தால், நாட்டுக்காக கபடமாட, ஆபத்தான இடங்களுக்குத் தீயவர்களைப் பின்தொடர்ந்து செல்லலாம். கணவரைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைக்கலாம். சூழ்நிலையிலும், பணிகளிலும் ஈடுபட வைக்கலாம். எவ்வளவு சிக்கலான சூழ்நிலையாக இருந்தாலும், தானாக முடிவெடுத்து செயல்படலாம்.
நீங்கள் நந்தினியாக இருந்தால்...? எப்படிப்பட்ட வீரர்களையும் ஒட்டுமொத்த சிற்றரசர்களையும் உங்கள் கட்டுப்பாட்டில் கையசைவில் செயல்பட வைக்க இயலும்.
பேரரசன் இளவரசராக இருந்தாலும், தன் காதலை நிரூபிக்க அரச அங்கீகாரம், மகாராணி பட்டம் இவை எதுவும் வேண்டாம்; அவர் பாகனாக இருக்கும்போது அருகில் ஒரு பணிப்பெண்ணாக வாழ்ந்து மாண்டாலே போதும் எனச் சொல்லக்கூடியவள் வானதி. வானதியாக இருந்தாலோ? நீங்களும் அவ்வாறு வாழ்ந்து காட்ட முடியும்.
சாதி, மதம், மொழி என சிறு சிறு பிரிவுகளைக் காரணம் காட்டி, பெண்களின் காதல், விருப்பங்கள் இவை அனைத்தும் புதைக்கப்படுகின்றன இக்காலத்தில். ஆனால், பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே, தனது முதன்மைப் பகை நாட்டின் முடி இளவரசன் என்றறிந்தும், கடல் கடந்து செல்லும்போது, இருநிமிடப் பார்வை, பேச்சில் மனதை, நம் தைரியத்தைக் கொடுத்து, ஆண்டுகள் பல கண்களை எண்ணியே காத்திருந்து, போராடி வந்தவரின் உயிரைக் காத்து, அவரையே வாழ்க்கைத் துணையாக்க முடிவெடுத்தவள் குந்தவி (பார்த்திபன் கனவு).
இவை போன்ற எண்ணற்ற பெண் கதாபாத்திரங்களால் வாசகிகளை தன் எழுத்தின் ரசிகைகளாக மாற்றினார் கல்கி.
வாசகர்களுக்கு ஒரு ஐயம் ஏற்படலாம் – இவர்கள் அனைவரும் கல்கியின் கதாபாத்திரங்கள்தானே! இவற்றைக் கொண்டு எப்படி பிற பெண்களின் வாழ்வும் அது போலவே இருக்கும் என்று கூறமுடியும்? அதற்கு என்னிடம் மூன்று முக்கிய விளக்கங்கள் உள்ளன.
முதலாவது விளக்கம்:
கல்கியின் எழுத்தில் எனக்கிருக்கும் புரிதல்படி, இதில் வரும் எந்தப் பெண்ணும் வாழ்க்கை முழுவதும் இன்பமாக நினைத்தபடி வாழவில்லை. அதுவெல்லாம் பெண் சுதந்திரம், பெண்ணுரிமை ஆகியவற்றின் இயல்பான பாகம். உலகத்தில் பிறக்கும் எந்த உயிராலும் வாழ்க்கை முழுவதும் துயரம் இன்னல்களின்றி வாழ முடியாது. ஆனால், நீங்களோ நானோ, என் தாயோ, தோழிகளோ அனைவரும் விரும்புவது ஒன்றுதான்: தமக்கு எது வேண்டும், வேண்டாம், எப்போது வேண்டும் என முடிவெடுக்கும் உரிமை. அவரவர் வாழ்க்கையின் போக்கை அவரவரே தீர்மானிக்க வேண்டும். இவற்றைத்தான் கல்கியின் பெண் கதாபாத்திரங்கள் ஒவ்வொரு சூழ்நிலை முடிவிலும் உணர்த்துகின்றன.
இரண்டாவது விளக்கம்:
இந்த இரு புதினங்களில் வரும் ஒரு சிறிய பெண் கதாபாத்திரமாக இருந்தாலும், கல்கியின் எழுத்தில் அப்பெண் வீரம் அல்லது விவேகம் கொண்ட, துணிவான, தன் வாழ்க்கையின் குறிக்கோள்களை நன்கு அறிந்தவளாக இருப்பாள். யாரின் கைப்பிடியிலும் சிக்கியிருக்க மாட்டாள். ஒருவேளை சிக்கியிருந்தால் கூட, அவனை மாய்த்து, சிவகாமியைப்போல் சபதம் நிறைவேற்றி வெளியே வருவாள். இல்லையெனில் மணிமேகலை, ஊமை ராணியைப்போல் காதலின் பிடியில் இருந்தால், தன்னீடு செய்து மாய்த்துக்கொள்வாள்.
மூன்றாவது காரணம்:
கல்கி இந்நூல்களை, புனைகதைகளையும் இயற்றும் முன் ஆராய்ச்சிகள் பல செய்து, ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் என ஆய்வு மேற்கொண்டு, ஆலயம், குகைகள் என அலைந்து திரிந்து இயற்றினார். ஒருவேளை நம் முன்னோர்கள் ஏன் கலாச்சாரம், வேதங்களுக்கு கட்டுப்பட்டு, குடும்பங்களின் பழக்கவழக்கங்களை பாதுகாத்த பெண்களைப் போற்றவில்லை? மாறாக, கலைத்துறை, பயணம், அரசாளுமை, போர்கள், வீரம் உரிமை, நியாயம் இவற்றில் சிறந்து விளங்கியவர்களை முன்னிறுத்துகிறது, போற்றுகிறது?
இதையே கல்கியும் மேலும் முற்படுத்த எண்ணுகிறார்.
சேர, சோழ, சாளுக்கிய, பல்லவ, பாண்டிய என அனைத்து பராக்கிரம அரசுகளைக் கொண்ட நாடுகளின் முதன்மை வரலாறே இந்நூல்களுக்கு அடித்தளமாயினும், அந்நாட்டின் பெண்களே இக்கதைக்கு முதன்மை, மையம் மற்றும் முற்றுப்புள்ளியாகத் திகழ்கின்றனர். இக்கதைகளின் ஆழமும், அதன் தீர்வுகளும் பெண்களைக் கொண்டே நிகழ்கின்றன.
இதுவே என்னைப் போன்ற வாசகிகளுக்கு நூல்களின் மீது ஆர்வமும், அதை முடிக்கும் பொழுது தைரியத்தையும் தருகிறது. ஆம், கல்கியின் எழுத்தில் மூழ்கிக் கிடக்கும் பெண் என்பதால், நானும்… பொன்னியின் சிவகாமிதான்!