
தமிழ்நாட்டில் வசிக்கும் செட்டிநாட்டவர் எனும் நகரத்தார் சமுதாயப் பெண்கள் விரும்பி அணியும் சேலையாக, கண்டாங்கி (Kandangi) சேலை இருக்கிறது. இச்சேலை, செட்டிநாடு சேலை என்றும் அழைக்கப்படுகிறது. 250 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையான இந்த ரகச் சேலைகள் முதலில், செட்டிநாட்டவர் எண்ணத்தில் உதித்த வடிவத்திலேயே உருவாக்கப்பட்டது என்கின்றனர்.
திசையாயிரத்து ஐநூற்றுவர், நானாதேசிகள் எனப் பல்வேறு வணிகக்குழுவின் பெயரால் கல்வெட்டுகள் மூலம் அறியப்படும் வணிகர்கள், சோழ நாட்டின் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வெளியேறி, பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்கின்றனர். பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு அடைக்கலமளித்த பாண்டிய மன்னன், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கிக் கொள்ள இடமளித்து உதவினான். அவர்கள் குடியேறிய 96 கிராமப்பகுதிகள், ‘செட்டிநாடு’ என்று அழைக்கப்படுகிறது.
செட்டிநாட்டுப் பெண்களின் விருப்பத்திற்கேற்றபடி, இரண்டு ஓரம் கொண்டதாகவும், நடுவில் கட்டம் போட்டதாகவும், வேறு எந்த சேலையிலும் இல்லாத வகையில், 48 'இஞ்ச்' அகலம், 5.5 மீட்டர் நீளம் கொண்டதாகவும் இச்சேலைகள் பருத்தி நூல் கொண்டு உருவாக்கம் பெற்றன. இச்சேலைகள், பெண்களின் கெண்டைக்கால் பகுதியில் பளபளப்பான சரிகை ஓரங்களைக் கொண்டு, தனி அழகைத் தந்ததால், முதலில் 'கெண்ட அங்கி' என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர், இச்சொல் ‘கண்டாங்கி’ என்று மருவியதாகச் சொல்கின்றனர்.
கண்டாங்கி சேலைகள் திரைப்படப் பாடல்கள் மற்றும் பல்வேறு புதுக்கவிதைகளின் வழியாக அனைவரிடத்திலும் சென்று சேர்ந்த பின்பு, கண்டாங்கி சேலைக்குத் தனி மதிப்பு ஏற்பட்டது. அனைத்துப் பெண்களிடமும் கண்டாங்கி சேலை அணிந்திட வேண்டுமென்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியது. நகரத்தார் சமுதாயப் பெண்களின் வழியாகவும் கண்டாங்கி சேலைகளுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு கிடைத்தது. செட்டிநாட்டுப் பெண்கள் மட்டுமே அணிந்து வந்த கண்டாங்கி சேலை, தற்போது அனைத்துத் தரப்புப் பெண்களாலும் விரும்பி அணியும் சேலையாகிப் போனது.
காரைக்குடியிலும், அதனைச் சுற்றியுள்ள சில ஊர்களிலும் நெய்யப்படும் கண்டாங்கிச் சேலை மிகப் பெரிய ஓரம் கொண்டது. இச்சேலைகளுக்கு ஒளிமயமான அடர் மஞ்சள் (மஸ்டர்ட்), பழுப்பு நிறக் கருஞ்சிவப்பு (மெரூன்), கறுப்பு நிறங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. நல்ல அடர்த்தியான மாறுபட்ட வண்ணங்களின் கலவையாகத் தயாரிக்கப்படும் இச்சேலைகள் கட்டம் போட்டதாகவேத் தயாரிக்கப்படுகின்றன.
கோடுகள், பெரிய கட்டம், பூக்கள் கொண்ட நடுப்பகுதி என்று தற்போதையக் காலத்திற்கு ஏற்றபடி மாற்றங்கள் செய்யப்பெற்றும் தயாரிக்கப்படுகின்றன. இச்சேலைகளின் வண்ணங்களும், வடிவமைப்புகளும் இதற்குச் சிறப்பு சேர்க்கின்றன.
பட்டாம்பூச்சி, அன்னப்பறவை, வைரம், செடி, கொடி, இலை, ருத்ராட்சம், கோபுரம், தாமரைப்பூ, யானை, மயில் என்று பல்வேறு ஓவியங்கள் கண்டாங்கி சேலைகளில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆயிரம் ரூபாயில் தொடங்கி, நிறம் மற்றும் வடிவமைப்பு, தரத்திற்கும் ஏற்றபடி அதிகமான விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கண்டாங்கி சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கவேண்டும் என்று 2013 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி பட்டு கூட்டுறவு நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. அதன் பின்னர், 2019 ஆம் ஆண்டில் காரைக்குடி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கண்டாங்கிச் சேலைக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.