

நீரியுஸ் என்ற முந்தைய கடல் தெய்வத்திற்கும், டோரிஸ் என்ற கடல் பெண் தெய்வத்திற்கும் பிறந்தவள் கடல் தேவதை தீடிஸ். இந்த கடல் தேவதைக்கும், மனிதப் பிறவியான பீலியஸ் என்ற அரச குமாரனுக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு எல்லாத் தெய்வங்களுக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டது.
ஆனால், பிளவை உருவாக்கும் பெண் தெய்வம் எரிஸை திருமணத்திற்கு அழைக்கவில்லை. இதனால், கோபம் கொண்ட எரிஸ், அழையா விருந்தாளியாக திருமணத்திற்கு வந்தார். அங்கு ஒரு தங்க ஆப்பிளை உருட்டி விட்ட எரிஸ், அந்த ஆப்பிள் யார் மிகவும் அழகு படைத்தவரோ அவருக்குச் சொந்தம் என்றாள். ஹேரா, ஏதீனா, அஃப்ரோடைட் என்ற மூன்று பெண் தெய்வங்களும் அந்த தங்க ஆப்பிளை அடைய போட்டி போட்டனர்.
ஹேரா, மண வாழ்க்கைக்கான கடவுள், கடவுள்களுக்கு எல்லாம் அரசரான ஜீயஸின் மனைவி. ஆதீனா, அறிவிற்கான பெண் தெய்வம். அஃப்ரோடைட் காதல், மற்றும் அழகிற்கானப் பெண் தெய்வம்.
இந்த மூன்று பெண் தெய்வங்களுள் யார் அழகானவர் என்ற தீர்ப்பு சொல்ல கடவுள்களுக்குத் தலைவரான ஜீயஸ் மறுத்து விட்டார். ட்ராய் நகர இளவரசன் பாரிஸ் இதற்கு விடை அளிப்பான் என்று கூறி ஒதுங்கிவிட்டார். அதனால், ட்ராய் நாட்டு இளவரசன், பாரிஸ், மூன்று தெய்வங்களில் பேரழகி யார் என்று முடிவு செய்வதற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
மனித மனதை புரிந்து வைத்திருந்த மூன்று தெய்வங்களும், சாதகமான தீர்ப்பிற்கு இளவரசன் பாரிஸிற்கு அவன் விரும்புவதை லஞ்சமாகக் கொடுத்து, பேரழகி பட்டத்தை அடைவது என்று முடிவு செய்தனர்.
ஹேரா, பாரிஸை ஆசியா மற்றும் ஐரோப்பாவின் அரசராக ஆக்குவதாகக் கூறினாள்.
ஆதீனா, ட்ரோஜன் நாட்டவர், கிரேக்க நாட்டை வெல்வதற்கு உதவி செய்வதாக உறுதியளித்தாள்.
ஆனால் அஃப்ரோடைட், திருமண வயதில் இருக்கும் இளவரசனுக்கு, பூமியில் பேரழகியான ஹெலனை மணம் செய்து வைப்பதாக வாக்களித்தாள். ஆனால், ஹெலன் ஸ்பார்டா நாட்டு மன்னரை மணந்த செய்தியைச் சொல்லாமல் மறைத்தாள்.
ஹெலனின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த பாரிஸ், அவளை மனைவியாக அடையும் ஆசையில், “அஃப்ரோடைட் பேரழகி” என்று தீர்ப்பு சொன்னான். சொன்னது போல அஃப்ரோடைட், ஹெலன் மனதில், பாரிஸ் மீது மோகத்தை விதைத்தாள்.
ஹெலன், கடவுள்களின் அரசரான ஜீயஸ் மற்றும் லெடா என்ற தேவதைக்குப் பிறந்தவள். அவளின் வளர்ப்புத் தந்தை மானிடரான டின்டேரியஸ். ஹெலன் முட்டையிலிருந்து பிறந்ததாகக் கூறுவர். ஹெலனுக்கு காஸ்டோர், பாலிடியூசஸ் என்ற சகோதரர்களும், கிளைடெம்னெஸ்ட்ரா என்ற சகோதரியும் உண்டு. சகோதரி அரசர் அகமெம்னோன் மனைவியானாள்.
ஹெலன் சிறு வயது முதலே பேரழகியாக அறியப்பட்டாள். அவளுக்குப் பத்து வயது இருக்கும் போது, அவளது அழகினால் கவரப்பட்ட கிரேக்க வீரன் தீசியஸ், அவளைக் கடத்திச் செல்ல முயற்சி செய்தான். ஆனால், ஹெலனின் சகோதரர்கள், அவளை மீட்டு வந்தனர்.
இளைஞர்கள் முதல் வயதானவர் வரை பலரும் அவளைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பினர். அவளின் பேரழகு வளர்ப்புத் தந்தை டின்டேரியஸூக்குப் பலத்த பிரச்னையை உண்டு பண்ணியது. அவளை அவர் விருப்பப்படி மணம் செய்து வைத்தால், மற்றவர்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று பயந்தார். புத்திசாலியான ஒடிசியஸ், இதற்கு ஒரு தீர்வு அளித்தான்.
ஹெலன் விரும்பும் நபரை அவள் கணவனாக தேர்ந்து எடுக்க வேண்டும். இதற்கு மற்றவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். ஹெலன் கணவனுக்கு உதவி தேவைப்பட்டால், மற்ற கிரேக்க அரசர்கள் உதவிக்கு வர வேண்டும். ஹெலன், ஸ்பார்டா நாட்டு மன்னர் மெனலாஸைக் கணவனாகத் தேர்ந்தெடுத்தாள்.
ஹெலன், ஸ்பார்டா நாட்டின் மன்னர் மனைவி என்று கேள்விப்பட்ட பாரிஸ், அவளைக் கவர்ந்து வரும் முடிவோடு ஸ்பார்டா சென்றான். அங்கு ஹெலனை சந்தித்துத் தன் காதலை எடுத்துரைத்தான். ஹெலனின் சம்மதத்துடன் பாரிஸ், அவளைக் கூட்டிக் கொண்டு ட்ராய் சென்று விட்டான். தன்னுடைய மனைவியை மீட்பதற்கு மெனலஸ் மற்ற கிரேக்க அரசர்களின் உதவியைக் கோரினார். இதனால், கிரேக்கர்களுக்கும், ட்ரோஜன் இனத்தவர்களுக்கும் போர் மூண்டது.
சுமார் பத்து வருடங்கள் இந்தப் போர் நீடித்தது. கடைசியில் பாரிஸைக் கொன்று தன் மனைவியை மீட்டார் அரசர் மெனலஸ்.
மூன்று கடவுள்களுக்கு இடையே ஏற்பட்ட அழகுப் போட்டி, பல இலட்சம் வீரர்களின் இறப்பிற்கு காரணமாக இருந்தது.
இந்தப் போரை முன்னிலைப்படுத்தி “இலியட்”, மற்றும் “ஓடிசி” என்று இரண்டு காவியங்களைப் படைத்தார் ஹோமர்.