

வாசல் திண்ணையில் உட்கார்ந்து அன்றைய செய்தித்தாளை நான்காவது முறையாகப் புரட்டிக்கொண்டிருந்தார் 62 வயது ஸ்ரீநிவாசன். திடீரென்று வீட்டிற்குள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்கவே, குழப்பத்துடன் எழுந்து உள்ளே வந்தார்.
‘அலமு யாருகிட்ட பேசறா? ஆத்துல என்னையும் அவளையும் தவிர யாரும் இல்லையே. வழக்கம்போல ஆத்துல இருக்கற ஏதாவது சாமான்செட்டோட பேசறாளா? அன்னிக்கு இப்படித்தான், ஏதோ பேசறாளே… என்னன்னு கேட்லாம்னு பார்த்தா ஃப்ரிட்ஜ்கூட பேசிண்டிருந்தா. இப்போ எது மாட்டிண்டுதோ…’
ஆர்வத்துடன் சமையல் அறையை நோக்கி பூனை நடை நடந்தார் ஸ்ரீநிவாசன். அலமு என்ன பேசுகிறார் என்பதை அறியும் ஆவல் அவர் மனதில் படபடத்தது. இதற்கு முன் இதேபோல் ஒன்றிரண்டு முறை அலமு தனியாகப் பேசுவதைக் கேட்டிருக்கிறார். முதன்முறையாகக் கேட்டபோது பயமும் கவலையும் அவரை ஆட்டுவித்தன. ஆனால் அலமுவின் சம்பாஷணை சுவாரசியமாகவும், சிரிப்பை வரவழைக்கும் விதமாகவும் இருந்தது. மௌனமாக ரசித்தவர், அலமுவிடமே இது குறித்து வினவினார்.
“தனியாப் புலம்பறேனா? வேற என்ன பண்ண முடியும் சொல்லுங்கோ. பொழுதன்னிக்கும் இந்த சாமான்களோடதானே நான் இருக்கேன். எல்லாரும் படிப்பு, வேலைன்னு வெளில போயிடறேள். நேக்கு அலுப்பு தெரியாம இருக்க இப்படிப் பேசிப்பேன். மனசு பாரம் குறைஞ்சாப்போல இருக்கும். ஆத்துல நான் தனியா இருக்கற கவலையும் வராது. வேலை செய்யற அலுப்பும் பஞ்சாய்ப் பறந்துடும்.”
அலமுவின் இந்த பதில் அவர் கவலையைப் போக்கியது. அன்றிலிருந்து அலமுவின் இதுபோன்ற புலம்பல்களைக் கேட்கும்போதெல்லாம் ஸ்ரீநிவாசனுக்கும் மனம் லேசானது என்னவோ உண்மைதான்.
சமையற்கட்டில், துலக்கிய பாத்திரங்களை எடுத்து துடைத்து வைத்துபடியே பேசிக் கொண்டிருந்தார் 58 வயது அலமு.
“ஏ செல்லக் கோண்டு, ஆத்துல எது இல்லைன்னாலும் சமாளிச்சுடுவேன். ஆனா நீ இல்லேன்னா நேக்கு கை உடைஞ்ச மாதிரி இருக்கும். நான் யாரையும் லேசுல அடுப்படியில் விடமாட்டேன் தெரியுமா? ஆனா நோக்குன்னு ஒரு இடத்தைக் கொடுத்து அடுப்படியில வச்சுண்டிருக்கேன்னா, அந்த அருமை நோக்குத் தெரியவேண்டாமோ?
ஆனா நீ அதெல்லாம் தெரிஞ்சுண்ட மாதிரியே இல்லையே. தேமேன்னு இருக்கியா? காலங்கார்த்தால, என் ஆத்துக்காரர் காஃபிக்கு ஆலாப்பறக்கற நேரம் பார்த்து பொசுக்குன்னு உன் வேலையைக் காட்டறே. இல்லையா, ராத்திரி பலகாரத்துக்கு என் சீமந்த புத்திரன் உட்கார்ந்திருக்கற நேரத்துல காலியாப் போறே.
காலைல இருந்து மணிக்கணக்கா நின்னு எல்லா வேலைகளையும் முடிச்சு, சமையலையும் முடிச்சு, ஆச்சுன்னு நாலு வடாத்தைப் பொரிச்சுட்டு, போய் அஞ்சு நிமிஷம் கையைக் காலை நீட்டிண்டு உட்காரலாம்னு அடுப்புல எண்ணெய் வச்சா, அது காயறதுக்குள்ள காலை வாரறே.
எல்லாத்தையும் பொறுத்துண்டு, உன்னை அனுசரிச்சுண்டு காலத்தைக் கடத்தறேன். உனக்கு நான் இவ்வளவு செஞ்சும் நோக்கு கொஞ்சம்கூட விசுவாசம் இல்லை. என்ன, எதுவுமே தெரியாத மாதிரி சிவனேன்னு உட்கார்ந்துண்டு இருக்கே?”
மேடைக்கு அடியில் ‘கம்’ என்று இடம்பிடித்திருக்கும் சிலிண்டரைப் பார்த்து கையை ஆட்டினார் அலமு. தன் மனைவி எதைக் குறித்துப் பேசுகிறார் என்பது ஸ்ரீநிவாசனுக்கு இப்போதுதான் புரிந்தது.
“நேத்து உன்னைப் புதுசா எடுத்து மாத்தினப்போ புசுபுசுன்னு சீறினியே, என் மேல என்ன கோபம் நோக்கு? சித்த நேரம் நேக்கு கைகால் எல்லாம் வெலவெலன்னு ஆயிடுத்து.
சமையல்கட்டு பூரா ஒரே நாத்தம். மூச்சு போய் மூச்சு வந்தது தெரியுமா. பகவான் புண்ணியத்துல பக்கத்தாத்து புள்ளையாண்டான் ஆபத்பாந்தவனா வந்து சரி பண்ணிக் குடுத்தான். இன்னிக்கு வரைக்கும் நோக்கு ஏதாவது கெடுதல் நினைச்சிருப்பேனா நான், சொல்லு.
மணைல புதுப்பொண்ணை உட்கார வைக்கறாப்போல உனக்குன்னு ஒரு பலகையைப் போட்டு உட்கார வச்சிருக்கேன். வேளை கெட்ட வேளைல நீ காலியாப் போனா, எங்காத்து கடைக்குட்டியா நினைச்சுண்டு நாலு வார்த்தை வைவேன். அது ஒரு குத்தமா? சும்மா நல்ல பாம்பாட்டம் சீறினியே. இனிமே அப்படி எல்லாம் கோவிச்சுண்டு சீறாதே, கேட்டியா.
'ஏண்டீ அலமு, நான் ஊருக்குப் போனாக்கூட நீ இவ்ளோ தவிச்சுப் போவியான்னு தெரியல. ஆனா இந்த சிலிண்டர் காலியாச்சுன்னா இப்படிப் புலம்பறியே. அதுக்கு இருக்கற மதிப்பு எனக்கு இல்லையே' அப்படின்னு என் ஆத்துக்காரர் கேலி பண்ணுவார்னா பார்த்துக்கோ. நான் உன் மேல அவ்வளவு பாசம் வச்சிருக்கேன். நீ என் செல்லக் கோண்டு தெரியுமோ.”
ஸ்ரீநிவாசன் முகத்தில் புன்சிரிப்பு பரவியது. ஒவ்வொரு நாளையும் ரசனையுடன் நகர்த்துவதாலேயே அலமு இன்னும் இளமையாக இருப்பதாக நினைத்தார் அவர். சாதாரண சிலிண்டர் உபயோகிப்பதில் வரும் இடைஞ்சல்களை இத்தனை ரசனையாகச் சொல்ல முடியுமா? ஆச்சரியமாக இருந்தது அவருக்கு.