

தற்காலத்தில் அனைவருக்குமே ஏதாவது ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கு இருக்கிறது. மாதச்சம்பளம், அரசு வழங்கும் நலத்திட்டங்கள் முதல் எல்லாவிதமான தொகைகளும் வங்கியில் வரவு வைக்கப்படுகின்றன. காலை நேரங்களில் வங்கிகளில் கூட்டம் நிரம்பி வழிவதைப் பார்க்கிறோம். ஒரு டீ குடித்தால் கூட அதற்கான சொற்ப தொகையை நமது மொபைல் மூலமாக கடைக்காரருக்குச் செலுத்தும் நிலை தற்போது நிலவுகிறது.
நாற்பது வருடங்களுக்கு முன்னால் வசதி படைத்த ஒரு சிலரே வங்கிகளில் கணக்கை வைத்திருந்தார்கள். அந்த காலத்தில் தற்போது உள்ளது போல இத்தனை வங்கிகள் இல்லை. மக்களும் எப்போதாவதுதான் வங்கிக்குச் செல்லுவார்கள். சம்பளம் கூட ஒவ்வொரு மாதமும் நேரடியாக ரொக்கமாக வழங்கப்பட்டன.
பெரும்பாலும் பலருடைய சம்பளம் என்பது சொற்ப தொகைதான். ஆயிரத்தைத் தாண்டாது. ஆயிரத்தைத் தாண்டி சம்பளம் வாங்கினால் அவர் மிகவும் பெரிய ஆளாகக் கருதப்பட்ட காலம் அது.
என் அப்பா தாசில்தாராகப பணியாற்றியவர். அவரே ஓய்வு பெறுவதற்கு முன்னர்தான் வங்கியில் ஒரு கணக்கைத் துவங்கினார். இந்த சூழ்நிலை ஏன் என்றால் அக்காலத்தில் வாங்கும் சம்பளத் தொகையானது இருபது தேதிகளிலேயே செலவாகிவிடும். கடைசி பத்து நாட்கள் பெரும்பாலோருக்கு இழுபறி நிலைமைதான்.
எழுபத்தி ஐந்து சதவிகிதம் பேர் வாடகை வீட்டில் வசிப்பவர்களாக இருந்தார்கள். அந்த காலத்தில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் கூட எழாத சூழ்நிலை. சொற்ப தொகையில் அதாவது மாதம் ஐம்பது ரூபாயில் பெரிய வீடு வாடகைக்குக் கிடைத்து விடும்.
பெண்கள் வீட்டுச் செலவுகளுக்குத் தரப்படும் மாதாந்திரத் தொகையை பார்த்து பார்த்து செலவு செய்து சொற்ப தொகையை மிச்சம் பிடித்து சமையலறையில் மளிகை டப்பாக்களில் போட்டு சேமித்து வைப்பார்கள். இதை சிறுவாடு பணம் என்பார்கள். இப்படியாக ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் தங்களுக்கான வங்கியை தாங்களே நிர்வகித்தார்கள். பணத்தை சமையலறையில் சேமித்து வைப்பதும் அவசரத் தேவைகளுக்கு எடுத்துப் பயன்படுத்துவதுமாக இருந்தார்கள். வீட்டில் திடீரென்று பணத்தேவை ஏற்படும் போது தாங்கள் சேமித்த பணத்திலிருந்து சிறு தொகையை எடுத்துக் கொடுத்து உதவுவார்கள்.
அக்காலத்தில் நேரடியான பணப்பரிமாற்ற முறையே பயன்பாட்டில் இருந்தது. பெரும்பாலான பணப்பரிமாற்றங்கள் தபால் நிலையங்கள் மூலம் மணியார்டர் செய்யப்பட்டு கையாளப்பட்டன. தற்காலத்தில் எல்லாமே ECS முறையிலேயே நேரடியாக வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படுகின்றன.
வங்கிகளில் நேரடியாக வாங்கப்படும் பணம் நமது கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட அக்காலத்தில் எல்லாமே லெட்ஜர்களில் கைகளால் எழுதப்பட்டன. வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகங்களில் பணம் எடுத்தாலும் பணம் போட்டாலும் கையால்தான் எழுதித் தருவார்கள்.
தற்காலத்தில் நாம் பாடுபட்டு சேமித்து வங்கியில் வைத்திருக்கும் பணத்தை சிலர் ஏமாற்றி நமது வங்கிக் கணக்கிலிருந்து அபகரித்துக் கொள்ளுகிறார்கள். ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை இப்படியாக அபகரிக்கப்படுகிறது. நமக்குச் சொந்தமான பணம் நம்மிடம் நிரந்தரமாக இருக்குமா அல்லது சைபர் குற்றவாளிகளால் (Cyber Criminals) அபகரிக்கப்பட்டுவிடுமா என்று கவலைப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை அக்காலத்தில் இல்லை.
தற்காலத்தில் தினம் தினம் இப்படியாக தங்களையறியாமல் பணத்தை இழக்கும் சம்பவங்களைப் பற்றி செய்தித்தாள்களில் படிக்கிறோம். இதைப் படிக்கும் நமக்கும் ஒருவித பயம் மனதில் ஏற்பட்டு விடுகிறது.
ஆனால் அக்காலத்தில் இத்தகைய பயம் ஏதுமில்லை. ஏனென்றால் அன்றாட செலவுக்கே பணம் போதாதநிலை இருக்கும் போது இல்லாத பணத்தை பிறர் எப்படி அபகரிக்க முடியும்.
தற்காலத்தில் எல்லாமும் இருக்கிறது. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறார்கள். ஏராளமான பணம் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் நிம்மதி இல்லை. போதும் என்ற மனநிலை இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும்.
அக்காலத்தில் வங்கிக்கணக்கும் இல்லை. போதிய வரவும் இல்லை. ஆனால் நிம்மதியான வாழ்க்கை. இதுவே அக்காலத்திய நிலைமை. ஒரு மாதத்தின் கடைசி பத்து நாட்களை எப்படிக் கழிப்பது என்று திட்டமிடுவது ஒரு வித்தியாசமான சிலிர்ப்பூட்டும் அனுபவமாக பலருக்கும் இருந்தது.