
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். முகம் என்பது மனதில் இருப்பதை காட்டும் கண்ணாடி. மகிழ்ச்சி, சோகம் என எந்த உணர்வாக இருந்தாலும் முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதாவது ஒருவருடைய மனநிலை, உள்ளம் மற்றும் குணாதிசயங்கள் முகத்தில் வெளிப்படும். ஒருவருடைய முகபாவனை அவர்களுடைய மனநிலையை வெளிப்படுத்திவிடும். இதை வைத்து அவர்களுடைய மனதில் என்ன ஓடுகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
கள்ளங்கபடம் இல்லாத குழந்தைகளின் முகத்தை பார்க்கும் பொழுதே நமக்கு அவர்களது உள்ளத்து உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும். பெரியவர்களுக்கு அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல அவர்களுடைய சொல்லிலும், செயலிலும் கூட வெளிப்படும். எவ்வளவுதான் இயல்பாக இருப்பது போல் நடித்தாலும் அவர்களுடைய உண்மையான எண்ணங்கள் ஒரு நாள் வெளிப்பட்டே தீரும்.
ஒருவரின் முகத்தை வைத்தே பேந்த பேந்த விழிக்கிறான் பார்! திருட்டுப் பார்வை பார்க்கிறான் என்பார்கள்! சிலரைப் பார்த்தாலோ 'கள்ளம் கபடம் இல்லாதவன்' என்று பாராட்டுவார்கள். குற்றம் செய்த மனம் குறுகுறுக்கும் என்று சொல்வார்கள். மன ஓட்டத்தை முகம் காட்டிக் கொடுத்துவிடும் என்று கூறப்படுகிறது. தவ வாழ்க்கையில் திளைத்த ஆன்மீகப் பெரியோர்களின் முகம் தேஜஸ் நிரம்பி பிரகாசிக்கும். முகத்தில் அமைதி ததும்பும் என்பார்கள்.
'அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்' -
தனக்கு அடுத்து இருக்கும் பொருளை பளிங்கு காட்டுவது போல் ஒருவருடைய மனதில் இருப்பதை அவர்களது முகம் காட்டிக் கொடுத்துவிடும் என்பதுதான் இந்த குறளுக்கான விளக்கம்.
நம்முடைய இதயம் நல்ல எண்ணங்களால் நிரம்பி இருப்பின் முகம் ஒளியுடன் பிரகாசமாக விளங்கும். நெஞ்சம் முழுக்க தீய எண்ணங்களும், அழுக்கும் நிறைந்திருந்தால் முகத்தைப் பார்த்ததுமே தெரிந்துவிடும் என்று கூறுகிறார். ஆனால் இன்றைய காலத்தில் முகத்தை வைத்து எதையுமே முடிவு பண்ண முடிவதில்லை.
வசீகரமான தோற்றமும், அழகான உடையணிந்தும், பேச்சிலும் கம்பீரம் தொனிக்க ஏமாற்றுபவர்கள் அதிகம் அதிகரித்துவிட்ட காலம் இது. இந்த காலத்தில் யாரையும் அவ்வளவு இடத்தில் எடைபோட முடிவதில்லை. எனவே எந்த நேரத்திலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பார்கள். ஆனால் இப்பொழுதோ சிசிடிவி உதவியால் உடனுக்குடனே அகப்பட்டு விடுகிறான். இன்றைய உலகம் போலிகளால் நிறைந்தது. எனவே முகத்தை வைத்து எதையும் முடிவு செய்ய முடிவதில்லை. அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு பின்னால் குழி பறிப்பவர்கள் அதிகம். கொஞ்சம் அசந்தால் போதும் குழி தோண்டி புதைத்து விடுவார்கள்.
எங்கும் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இணையத்தில் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகள் நடப்பது அனைவரும் அறிந்ததுதான். பெரும்பாலும் இவர்களின் நோக்கம் பணத்தை சுரண்டுவதிலேயே உள்ளது.
தோற்றத்தை வைத்து இனம் கண்டு கொள்வது எல்லாம் இப்பொழுது மிகவும் கடினமாக உள்ளது. எங்கும் எதிலும் போலிகள் பெருகி உள்ளன. முகமூடி அணிந்து திரியும் மனிதர்கள் நிறைந்துவிட்ட இந்த காலத்தில் நல்லவர்கள் யார் தீயவர்கள் யார் என்பதை இனம் கண்டு கொள்வது மிகவும் கடினமான காரியமாக உள்ளது.
கண்காணிப்பு கேமராக்களும் காவல்துறையும் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் புதிது புதிதாக குற்றங்கள் முளைக்கின்றன. எனவே எவ்வளவு எச்சரிக்கையாக நம்மால் இருக்க முடியுமோ அவ்வளவு எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
என்ன நான் சொல்லுவது உண்மைதானே நண்பர்களே!