
'செய்யும் வேலையில் முழு ஈடுபாட்டுடன் கவனம் பிசகாமல் செய்வது என்பது, வயதாக வயதாகக் குறைந்துகொண்டே வருகிறதே, ஏன்?' என்ற கேள்வி நீண்ட நாட்களாக என் மனத்துள் இருந்தது. அண்மையில் படித்த ஓர் அமெரிக்க மூதாட்டியின் ஒருநாள் அனுபவம் - அதற்கு விடை தந்துவிட்டது.
என் தோட்டத்துச் செடிகளுக்கு நீர் பாய்ச்சலாம் என்று தீர்மானித்தேன். கார்ஷெட் அருகிலிருந்த குழாயிலிருந்து ஹோஸ் பைப்பை மாட்டலாம் என்று சென்றவுடன், என் காரைக் கவனித்தேன்.
அட, இந்தக் கார்கூட மேற்புறம் கழுவ வேண்டுமே!
கார் கராஜை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் அங்கிருந்த சிறிய மேசையின் மேல் அன்றைய தபால் கடிதங்கள் கண்ணில் பட்டன. 'ஓ! முதலில் தபாலைப் பார்த்துவிட்டு காரைக் கழுவிக் கொள்ளலாம்.
கார் சாவிகளை அந்தச் சிறிய மேசையின் மேல் வைத்துவிட்டு கடிதங்களைக் கையிலெடுத்தேன். பெரும்பான்மையானவை ‘அதை வாங்கு, இதை வாங்கு' என்னும் விளம்பர நோட்டீஸ்கள்தான். 'சரி, இவற்றைக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டு பிறகு கடிதங்களைப் படிக்கலாம்' என்று குப்பைக் கூடையிடம் போனேன். குப்பைக் கூடை நிறைந்திருந்தது. 'சரி, முதலில் குப்பையைக் கொட்டிவிட்டு, பிறகு கடிதங்களைப் படிக்கலாம்' என்று குப்பைக் கூடையைக் கையில் எடுத்தேன். 'அடச்சே! இதைக் கொட்ட தெருவுக்குத்தானே போகணும்? கடிதங்களுக்குப் பதில் எழுதிவிட்டு, பில் கட்ட வேண்டியவற்றுக்கு செக் அனுப்ப வேண்டும் இல்லையா. அதை போஸ்ட் செய்ய வேண்டிய தபால் பெட்டி அங்குதானே இருக்கிறது ? அப்போது குப்பையைக் கொட்டிக் கொள்ளலாம்?'
சரி, முதலில் செக் அனுப்ப வேண்டியவற்றைப் பார்க்கலாம். வீட்டினுள் போனேன். ஒரே ஒரு தாள்தான் செக் புத்தகத்தில் இருந்தது. வேறு செக் புக் உள்ளே இருக்கிறதா பார்க்கலாம் என்று என் அறையில் நுழைந்தேன். 'அடடா! பாதி குடித்து முடித்த நிலையில் பெப்ஸி பாட்டில் இருக்கிறதே. இதை ஏன் இங்கே வைத்தேன்? குளிர்பானம் சூடு பானமாகிவிட்டதே. சரி, இதைக் கொண்டுபோய் ஃப்ரிஜ்ஜில் வைத்துவிட்டு வரலாம்!' என்று சமையலறையை நோக்கி நடந்தேன்.
'ஃப்ரிஜ்ஜிக்கு சமீபத்திலிருந்த பூ ஜாடியிலிருக்கும் பூக்கள் ஏன் வாடினாற் போலிருக்கின்றன? பாவம். முதலில் இதற்கு சிறிது நீர் ஊற்றலாம் என்று பெப்ஸி பாட்டிலை அங்கேயே வைத்துவிட்டு சமையலறை குழாயை நோக்கி நடந்தேன். அங்கே சமையல் மேடை மேல் இருந்த என் மூக்குக் கண்ணாடி என் கண்ணில்பட்டது. ஹை! காலையிலிருந்து இந்த மூக்குக்கண்ணாடியைத்தானே தேடிக் கொண்டிருக்கிறேன்.
சரி. இது படிக்கும் போதுதானே தேவைப்படும். இப்போது பூ ஜாடிக்கு நீர் ஊற்றலாம் என்று குழாயிடம் போனேன். அதனருகில் டீ.வியின் ரிமோட் இருந்தது. இதை யார் இங்கே வைத்தது? இரவு டீ.வி போடும்போது ரிமோட் தேடும் வேலை மும்முரமாகிவிடுமே இந்த ரிமோட்டைப் பிறகு அதனிடத்தில் வைக்கலாம்.
இப்போதைக்கு பூஜாடிக்கு நீர் ஊற்றலாம் என்று தண்ணீர்க் குவளையை பூஜாடியின் மேல் கவிழ்த்தேன். நிறைய நீர் தரையெல்லாம் சிந்திவிட்டது. இதை முதலில் துடைத்துவிடலாம் என்ற துடைக்கும் துணியைக் கையிலெடுத்தபடி சாய்வு நாற்காலியில் அமர்ந்தேன்.
இந்த ஒரு நாளின் முடிவில் இதுதான் நடந்தது:
* தோட்டத்துக்கு நீர் ஊற்றவில்லை.
* கார் கழுவப்படவில்லை.
* கார் சாவிகளை எங்கே வைத்தேன் நினைவில்லை.
* குப்பைக்கூடை காலியாகவில்லை
* செக் அனுப்பவேயில்லை. கடிதங்களைப் படிக்கவுமில்லை. .
* சூடேறிய பெப்ஸி ஃப்ரிஜ்ஜுக்குள் போகவில்லை.
* செக்புக் புதியது எடுக்கவில்லை.
* ரிமோட் அதன் இடத்துக்குப் போகவில்லை.
* பூ ஜாடிக்கும் நீர் ஊற்றப்படவில்லை
* தரையில் நீர் துடைக்கப்படவில்லை...
நான் இன்று முழுவதுமே சுறுசுறுப்ப இயங்கிக் கொண்டிருந்தேனே தவிர எதுவுமே செய்யவில்லை. குழப்பமடைந்து சோர்வாகவும் இருக்கிறேன். இப்போ புரிகிறது. இது தீவிரமான கவனக்குறை. இது பற்றி யாரிடமாவது ஆலோசிக்கலாமா? சரி, சரி அதற்கு முன் இன்று எனக்கு என்ன ஈமெயில் வந்திருக்கிறது என பார்க்கட்டுமா...
இப்படிப் போகிறது இந்தக் கட்டுரை. இதைப் படித்தவுடன் இதேபோல் நமக்கும் நடக்கிறதே என உங்களில் சிலர் நினைக்கிறீர்கள்தானே!
நன்றி: 'எல்டர்ஸ்'
மொழி பெயர்ப்பு: சுந்தராம்பாள் சுந்தரம்,
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் ஜூலை 2010 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியி ருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்