
கடவுள் நம்பிக்கையேயில்லாத தத்துவப் பேராசிரியர் ஒருவர் இருந்தார். கடவுளுக்கும், விஞ்ஞானத்துக்கும் உள்ள பிரச்னையைப் பற்றி, ஒருநாள் தனது வகுப்பில் விளக்கிக்கொண்டிருந்தார். வகுப்பில் உள்ள புதிய மாணவர்களில் ஒருவரை எழுப்பினார்.
பேராசிரியர்: உனக்குக் கடவுள் நம்பிக்கை உள்ளதா? என்று கேட்டார்.
மாணவன்: கண்டிப்பாக இருக்கிறது.
பேராசிரியர்: கடவுள் நல்லவரா?
மாணவன்: கண்டிப்பாக.
பேராசிரியர்: கடவுளுக்கு எல்லா சக்தியும் இருக்கிறதா?
மாணவன்: ஆம்.
பேராசிரியர்: என்னுடைய சகோதரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டான். கடவுளிடம் தான் பிழைக்க அதிகப் பிரார்த்தனை செய்தான். இருந்தாலும் பிழைக்கவில்லை. பிறகு எப்படி கடவுள் நல்லவராக இருக்க முடியும்?
மாணவன்:........................
பேராசிரியர்: உன்னால் பதில் கூற முடியவில்லை இல்லையா? மறுபடியும் ஆரம்பிக்கலாம். கடவுள் நல்லவரா?
மாணவன்: ஆம்.
பேராசிரியர்: சாத்தான் நல்லவனா?
மாணவன்: இல்லை.
பேராசிரியர்: சாத்தான் எங்கிருந்து வந்தான்?
மாணவன்: கடவுளிடமிருந்து.
பேராசிரியர்: சரி, உலகில் தீயசக்தி என்று ஒன்று இருக்கிறதா?
மாணவன்: ஆம்.
பேராசிரியர்: தீயசக்தி எங்கும் இருக்கிறது. கடவுள் எல்லாவற்றையும் படைத்தார். அப்படியென்றால் தீயசக்தியைப் படைத்தது யார்?
மாணவன்: ……………..
பேராசிரியர்: இந்த உலகில் வியாதிகள், மரணம், வெறுப்பு, அழுக்காறு எல்லாம் இருக்கின்றன. இவற்றையெல்லாம் உண்டாக்கியது யார்?
மாணவன்: ……………..
பேராசிரியர்: நம்மிடம் ஐம்புலன்கள் இருக்கின்றன என விஞ்ஞானம் சொல்கிறது. இதனால் உலகிலுள்ள பொருள்களை அறியலாம். இப்போது சொல்லு தம்பி நீ கடவுளைப் பார்த்திருக்கிறாயா?
மாணவன்: இல்லை ஐயா... கண்டிப்பாக இல்லை.
பேராசிரியர்: இன்னமும் நீ கடவுளை நம்புகிறாயா?
மாணவன்: ஆம்.
பேராசிரியர்: விஞ்ஞானப்படி நிரூபிக்க முடியாததால், விஞ்ஞானம் கடவுள் இல்லை என்கிறது. என்ன சொல்கிறாய் தம்பி?
மாணவன்: நம்பிக்கை மட்டும் என்னிடம் இருக்கிறது.
பேராசிரியர்: ஆமாம். நம்பிக்கை... விஞ்ஞானத்தின் பிரச்னையே அதுதான்.
மாணவன்: ஐயா, உஷ்ணம் என்று ஒன்று இருக்கிறதா?
பேராசிரியர்: இருக்கிறது.
மாணவன்: குளிர்ச்சி என்று ஒன்றுண்டா?
பேராசிரியர்: ஆம்.
மாணவன்: அப்படி ஏதும் கிடையாது ஐயா.
(அந்த அரங்கு நிசப்தமாக இருந்தது)
மாணவன்: ஐயா, நீங்கள் உஷ்ணத்தை உணரலாம். அதிகமான உஷ்ணம், சூப்பர் உஷ்ணம், மெகா உஷ்ணம், சிறிது உஷ்ணம் அல்லது உஷ்ணமில்லாமை. ஆனால் குளிர்ச்சி என்பது கிடையாது. பூஜ்யத்துக்குக் கீழே 458 டிகிரி லெவலுக்குப் போகலாம். அதற்குக் கீழே போக முடியாது. உஷ்ணம் இல்லாத தன்மையை விளக்க, நாம் குளிர் என்பதை உபயோகிக்கிறோம். அது ஒரு வார்த்தை மட்டும்தான். குளிரை அளக்க முடியாது. உஷ்ணம் என்பது சக்தி. அதனால் குளிர், உஷ்ணத்துக்கு எதிர்ச்சொல் இல்லை. உஷ்ணம் இல்லாத தன்மையை குளிர் என்கிறோம். (அரங்கிலிருந்து எந்தவொரு சப்தமும் எழவில்லை.)
மாணவன்: ஐயா, இருட்டு என்றால் என்ன? அப்படி ஒன்று இருக்கிறதா?
பேராசிரியர்: இருட்டு இல்லாவிட்டால், இரவு எப்படி வரும்?
மாணவன்: மறுபடியும் தப்பு ஐயா. இருட்டு என்பது ஏதோ ஒன்று இல்லாமை. சிறிய வெளிச்சம், அதிக வெளிச்சம், சராசரி வெளிச்சம், மிகப் பிரகாசமான வெளிச்சம் எல்லாம் இருக்கின்றன. ஆனால் தொடர்ந்து வெளிச்சம் இல்லாவிடில் அதை இருட்டு என்கிறோம். ஆகையால் இருட்டு என்பதே இல்லை. இருட்டு என்று ஒன்று இருந்தால், அதை இன்னும் அதிகமாக்கலாம் இல்லையா?
பேராசிரியர்: தம்பி, நீ என்ன சொல்ல வருகிறாய்?
மாணவன்: நீங்கள், உலகில் இரண்டு தன்மைகள் என்கிறீர்கள். வாழ்வு மரணம், நல்ல கடவுள் - கெட்ட கடவுள், கடவுளை எல்லைக்கு உட்பட்டவராகவும், அவரை அளவிட முடியும் என்கிறீர்கள். விஞ்ஞானத்தினால் எந்த உண்மையையும் விளக்க முடியாது.
மின்சாரம், காந்தம் இவற்றை யாரும் முழுமையாக உணர்ந்ததில்லை . வாழ்வுக்கு எதிராக மரணத்தைக் கூறுவது அறியாமை. மரணம் என்பது ஒரு பொருளல்ல; உயிர் இல்லாத்தன்மைக்கு மரணம் என்கிறோம். இப்போது சொல்லுங்கள் ஐயா! உங்கள் மாணவர்களுக்கு மனிதர்களாகிய நாம் குரங்கிலிருந்து வந்தவர்கள் என்று போதிக்கிறீர்களா?
பேராசிரியர்: ஆம், இயற்கையின் பரிணாம வளர்ச்சியின்படி அப்படித்தான் போதிக்கிறேன்.
மாணவன்: இயற்கையின் பரிணாம வளர்ச்சியை, உங்களது கண்களால் கண்டதுண்டா ஐயா?
(பேராசிரியர் புன்னகையுடன் தன் தலையை ஆட்டிக்கொண்டு விவாதம் எதை நோக்கிச் செல்கிறது என அறிந்துகொள்கிறார்.)
மாணவன்: இயற்கையின் பரிணாம வளர்ச்சியை யாரும் கண்டதில்லை. இது தொடர்ந்து நடக்கும் இயற்கையின் வேலைக்கிரமம் என்பதை உங்களது எண்ணத்தைப் போதிப்பதில்லையா? நீங்கள் ஒரு விஞ்ஞானி... தத்துவஞானி இல்லையா? வெறும் போதகர் மட்டும்தானா?
(மாணவர்கள் ஆரவாரம் செய்தார்கள்)
மாணவன்: இந்த வகுப்பில் யாராவது பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா? தொட்டுப் பார்த்ததுண்டா? யாரும் அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை. அப்படியானால் உங்களை நம்பி நாங்கள் எப்படிப் பாடங்கள் கற்க முடியும் ஐயா?
பேராசிரியர்: தம்பி, அப்படியானால் நீ நம்பிக்கையுடன்தான் செயல்பட வேண்டும்.
மாணவர்: அதுதான் ஐயா சரி. கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள இணைப்பு நம்பிக்கைதான். அதனால்தான் உலகில் எல்லாம் நடக்கின்றன. உலகமும் உயிருடன் இருக்கிறது.
இது இன்டர்நெட்டிலிருந்து எடுக்கப்பட்ட உண்மைக்கதை. அந்த மாணவர் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான வி.ஐ.பி. ஏபிஜே. அப்துல் கலாம்தான்.
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் ஜனவரி 1 2010 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்