
தங்கத்தின் விலை அதிகரிக்க அதிகரிக்க அதை வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் மதுக்கடைகளுக்கு அடுத்தபடியாக நகைக்கடைகளில் தான் கூட்டம் அலைமோதுகிறது. இது தங்கத்தின் மீதான போதை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதை காட்டுகிறது. தங்கம் விலை ஏற்றத்தால் அதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது, ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் தங்கத்தை ஒரு முதலீடாக கருதி வாங்கி வருகின்றனர். ஆனால் இது உயர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களிடையே காணப்படும் ட்ரெண்ட்
தங்கம் என்ற நான்கு வார்த்தைக்கு மயங்காத பெண்களே இல்லை என்று சொல்லலாம். இந்தியப் பெண்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தங்கம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது ஒரு பெண்ணின் குழந்தை பருவம் தொடங்கி திருமணம் வரை தங்கம் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மேலும் பெண்கள் திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் குடும்ப சடங்குகள் போன்ற பல்வேறு விழாக்காலங்களில் தங்கம் அணிந்திருந்தால் மட்டுமே இந்த சமூதாயத்தில் மரியாதையாக பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து கொண்டே வருவதால் ஏழை பெண்கள் தாலிக்கு கூட தங்கம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏழை - எளியவர்கள், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்து தங்க நகைகளை வாங்குவார்கள். அப்படி சிறுக சிறுக சேர்த்த பணத்தின் மூலம் குறிப்பிட்ட அளவு தங்கத்தை வாங்கலாம் என்று நினைக்கும் போது இது போன்ற திடீர் விலை ஏற்றத்தால் அவர்கள் நினைத்த அளவு தங்கத்தை வாங்க முடியாமல் ஏமாற்றமடைய செய்துவிடுகிறது. அதுமட்டுமில்லாமல் தங்கத்தின் விலை ஏற்றத்தால் ஏழை பெண்களின் திருமணம் கானல் நீராக மாறி வருகிறது.
2020-ம் ஆண்டுக்கு பிறகு தான் தங்கத்தின் விலை அதிகளவு உயரத்தொடங்கியது என்றே சொல்ல வேண்டும். தற்போது தங்கம் ரூ.60 ஆயிரத்தை கடந்து விற்பனையாவதை பார்க்கும் போது, தங்கம் கூலி வேலை செய்பவர்களுக்கும் எட்டாக்கனியாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.
தங்கத்தின் விலை ஏற்றத்தால், வீட்டில் வைப்பதற்கும், கழுத்தில் போட்டுக்கொண்டு வெளியில் செல்வதற்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது. திருமணமான தமிழ் பெண்களின் அடையாளமே தாலிச் சங்கிலிதான். ஆனால், விலை ஏற்றம் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக, வேலை பார்க்கும் பெண்கள் தாலியை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு வேலைக்கு போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா காலத்திற்கு பின்பு வேலைவாய்ப்பும், வருமானமும் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை இப்படி அதிகரித்துக் கொண்டே போனால் சாதாரண மக்கள் தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு எப்படி தங்கம் வாங்கி சேமிக்க போகிறார்கள் என்றே தெரியவில்லை. ஏதேனும் குடும்பச் செலவுகளுக்காக தங்கத்தை விற்ற பெண்கள் தற்போதைய தங்கத்தின் விலை ஏற்றத்தை பார்த்து நாம் விற்ற தங்கத்தை இப்போது வாங்க முடியாத நிலையை நினைத்து கண்ணீர் வடிக்கின்றனர். இதனால் நம்மை போன்றவர்கள் தங்கம் வாங்க முடியாத நிலையில் ஏதோ காதில், மூக்கில், கழுத்தில் கிடப்பதை போட்டுக்கொண்டு காலத்தை ஓட்ட வேண்டியதுதான்.
கடந்த ஜனவரி 22-ம் தேதி தங்கம் விலை ரூ.60,000 ஐ தாண்டியது. அன்று முதல் தங்கத்தின் விலை குறையாமல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனைதொடர்ந்து கடந்த 29-ம்தேதி தங்கம் விலை புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.60,760-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் தற்போது தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.7,730-க்கும், சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.61,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்திருப்பது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.