
- எஸ்.சாந்தா, சென்னை
பழங்களைச் சாப்பிடுவது நல்லது என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் அவற்றை எப்போது, எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதும் மிக முக்கியம், பழங்களை வெறும் வயிற்றில் அதாவது காலி வயிற்றில் சாப்பிடுவதுதான் சரியான முறை. இந்த முறையில் சாப்பிடுபவர்களுக்கு அதிசயத்தக்க முறையில் உடல் எடை குறைகிறது.
நாம் ஆகாரத்துடன் அல்லது சாப்பிட்டு முடித்தவுடன் பழம் சாப்பிட்டால் செரிமானம் பாதிக்கப்படுவதோடு வாயு, நெஞ்சு எரிச்சல், ஏப்பம், சரியாக மலம் கழிக்க இயலாமல் போவது போன்ற கோளாறுகள் ஏற்படும். பழங்கள், சீக்கிரத்தில் வயிற்றில் இருந்து சிறு குடலுக்குள் போய்விடும். அதை நாம் சாப்பாட்டுடன் அனுப்பும்போது அந்த அமிலமும் பழங்களும் ஒன்றுக்கொன்று கலந்து மொத்தமும் கெட்டுவிடும். பிறகு வாயு, ஏப்பம், அஜீரணம் எல்லாம் ஏற்படும்.
நிறையப் பேர் பழங்கள் பற்றிக் குறைசொல்வதை நாம் கேட்டிருக்கலாம். "தர்பூஸ் சாப்பிட்டால் எனக்கு ஒத்துக்கொள்வதே இல்லை. என் வயிறு கெட்டு விடுகிறது. "பலாப்பழமா, எனக்கு வயிறு உப்புசம் வந்துவிடும்", "வாழைப்பழமா, எனக்கு பாத்ரூம் எங்கேன்னு தேடணும்!" இந்தக் குறைபாடுகள் உண்மையில் பழங்களைக் காலியான வயிற்றில் சாப்பிடுபவர்களுக்கு வராது. இளநரை, வழுக்கை, நரம்புத் தளர்ச்சி, கண்ணின் கீழ் கருவளையம் இவையும் ஏற்படாது.
பழங்கள் சாப்பிட்டு முடித்து சுமார் ஒரு மணி நேரம் சென்றபிறகு, நமது அன்றாட ஆகாரம் சாப்பிடலாம் - இந்த வழக்கத்தை மேற்கொண்டால் நமக்கு ஒத்துழைக்காத பழங்கள்கூட கெடுதல் செய்யாது. டாக்டர். ஹெர்பெர்ட் ஷெல்டன், என்பவர் இதை ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார்.
பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடுவதைவிட, அப்படியே நறுக்கிச் சாப்பிடுவதுதான் நல்லது. நம்முடைய வாயில் ஊறும் உமிழ்நீரைக் கலந்து நன்றாக மென்று சாப்பிட்டால் பலன் அதிகம்.
மூன்று நாட்கள் வெறும் பழங்கள் மட்டும் சாப்பிடுவது என்று விரதம் கடைப்பிடிப்பவர்களுக்கு, உடம்பில். உள்ள நச்சுத்தன்மை அனைத்தும் வெளியேற்றப்பட்டு குடல் சுத்தம் அடைகிறது. ஆச்சரியத்தக்க முறையில் நீங்கள் ஒளிர்வதை, உங்கள் நண்பர்களே சொல்வார்கள்.
நெல்லிக்கனி: ஆரஞ்சுப் பழத்தைவிட மூன்று மடங்கு சக்தி பெற்றது. இதைப் பச்சையாகப் பச்சடி செய்து சாப்பிடலாம்.
ஆப்பிள்: எல்லாருக்கும் ஒத்துக்கொள்ளும் விருப்பமான பழம்.
சாத்துக்குடி, ஆரஞ்சு: ஜலதோஷம் வராமல் பாதுகாக்கும். சிறுநீரகம் நன்றாக செயல்படும். வயிற்றில் புற்றுநோய் வராது.
தர்பூஸ்: தாகத்தைத் தணிக்கவல்லது குளுமையானது. நீர்ச்சத்து நிறைந்தது. இதில் முக்கிய சத்துக்கள் நிறைய இருக்கிறது. புற்றுநோயைத் தடுக்க வல்லது. வைட்டமின் 'பி'யும் பொட்டரியம் சத்தும் உள்ளடக்கியது.
கொய்யா: நார்ச்சத்து நிறைய இருப்பதால், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம்.
பப்பாளி: இதில் உள்ள (கரேட்டின்) சத்து கண்ணுக்கு மிக நல்லது.