உங்களுக்காகவும் கொஞ்சம் வாழுங்கள்!

Live for yourself
Live for yourself
Published on

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள் ஆன்றோர்கள். குடும்பம் சிறக்க சமுதாயம் சிறக்கும், சமுதாயம் சிறக்க நாடும் சிறக்கும். ஒரு நாடு நலம் பெற வேண்டுமென்றால் முதலில் தனி மனித வாழ்க்கை சிறப்பானதாக இருக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் தங்கள் விருப்பு, வெறுப்புகளுக்கும் கொஞ்சமாவது மதிப்பு கொடுக்க வேண்டும். 

பெரும்பாலும் திருமணம் ஆகி குழந்தை பிறந்து ஐந்து ஆண்டுகளுக்குள்ளாகவே குடும்ப வாழ்க்கையில் ஒரு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு என்ன காரணம் என்று உளவியல் ரீதியாக ஆராய்ந்தோமானால் ஒவ்வொருவரும் தனக்கான விருப்பு வெறுப்புகளை தொலைத்ததும் ஒரு காரணமாகும். 

படித்து, வேலைக்குப் போய் திருமணம் ஆகும் வரை பெரும்பாலும் வாழ்க்கையைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்கள் ஒருவருக்கு அதிகம் வருவதில்லை. ஆனால் திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தந்தையாகவோ தாயாகவோ மாறும் போது எதிர்மறை எண்ணங்கள் மெதுவாக தலைகாட்டத் தொடங்குகின்றன. 

நம்முடைய குழந்தைகளை நாம் எவ்வளவு கவனித்து பொறுப்பாக வளர்க்கிறோமோ, அதைப்போல நாம் நம்முடைய வாழ்க்கையை கவனித்துக் கொள்வதும் மிகவும் அவசியம். பெரும்பாலான அம்மாக்கள் சமைக்கும்போது கூட என் பையனுக்கு பிடிக்கும், என் கணவருக்கு பிடிக்கும் என்றே சமைக்கிறார்கள். அதைத் தாண்டி இது எனக்கு பிடிக்கும் என்று ஒரு நாளாவது சமைத்துப் பாருங்கள். உங்கள் விருப்பு வெறுப்புகளையும் உங்கள் குடும்பத்தினர் முழுமையாக அறிந்து கொள்ளட்டுமே.

உங்களுக்கு குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களை இந்த சமூகத்தில் நல்ல ஒரு மனிதனாக வளர்த்து ஆளாக்குவது உங்களுடைய கடமை தான். ஆனால் அதற்காக உங்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதையும் நீங்கள் மறந்து விடக்கூடாது. எப்பொழுது ஒரு வீட்டில் கணவன் மனைவிக்காகவும் மனைவி கணவனுக்காகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அப்பொழுதுதான் குழந்தைகளுக்கும் தனது தாய்க்கோ தந்தைக்கோ முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வளரும். 

இதையும் படியுங்கள்:
உங்க மனைவியை மகிழ்விக்க சிம்பிளான 5 வழிகள்!
Live for yourself

குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதை போல உங்களுக்குள்ளும் சிறிது நேரம் செலவழிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய தேவைகள், மனவருத்தங்கள், வலிகள், சந்தோசங்கள் இவற்றை முழுமையாய் பரிமாறிக் கொள்ளுங்கள். உங்கள் மனதும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் போது தான் உங்களது குழந்தைகளை உங்களால் சிறப்பாக வளர்த்தெடுக்க முடியும். இதை நீங்கள் ஒருபோதும் சுயநலம் என்று எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதற்கேற்ப உங்களது உறவு பாலம் நன்றாக இருந்தால்தான் உங்களால் குழந்தைகளுக்கு முழுமையாக வழி காட்ட முடியும். 

இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் குடும்பங்களில் சிக்கல்கள் அதிகமாகி, தற்கொலைகள், கொலைகள், தகாத நடவடிக்கைகள் என குடும்பங்கள் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிக்காததே! 

சிறு சிறு பூசல்கள் தானே, என அலட்சியம் செய்தால் எல்லாம் வெடித்து ஒரு நாள் எரிமலையாய் சிதறக்கூடும். அதன் வெட்கையில் அதிகமாய் பாதிக்கப்படுபவர்கள் உங்கள் குழந்தைகளாகவே இருப்பார்கள்! எனவே பிரச்சனைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுங்கள்! ஒருவருக்கொருவர் நம்பிக்கை பாராட்டுங்கள், பரஸ்பர  உணர்வோடு ஒருவருக்கொருவர் மதிப்பளித்து, நட்பு பாராட்டி நல்ல நண்பர்களாக வாழுங்கள். 

இதையும் படியுங்கள்:
குடும்பம் என்பது கோவில். அதை தாங்கி நிற்கும் அஸ்திவாரம்?
Live for yourself

பெற்றோர்களாகிய நீங்கள் இருவரும் ஒன்றை மட்டும் உறுதியாக மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் கல்விக்கான அறிவை உலகில் எந்த மூலையிலும் உங்களால் தேடிக் கொண்டு வந்து கொடுக்க முடியும். ஆனால், வாழ்வியலுக்கான அறிவை உங்கள் இருவரால் மட்டுமே கொடுக்க முடியும். தன் தகப்பன் தன் மனைவியை எப்படி நடத்துகிறாரோ, அதைப் பார்த்து தான் தன் மகனும் நாளை வரப்போகும் மனைவியை வழிநடத்த காத்திருக்கிறான்!

நீங்கள் வாழும் வாழ்க்கையானது கண்ணாடியில் தோன்றும் பிம்பங்களைப் போன்றது. நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை அவர்களுக்கு எதிரொலிக்கிறீர்களோ, அதையே அவர்களும் பின்பற்றுவார்கள். 

எனவே முடிந்தவரை சண்டையை தவிர்த்து சமரசம் செய்து வாழ்க்கையை அமைதியாய் வாழ பழகுங்கள்! நாளைய உலகம் புதிதாய் மலரும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com