Interview: "காயங்கள் ரணங்கள் ஏற்பட்டு, கை கால் அடிப்பட்டாலும் எங்க இதயம் மட்டும் இந்த பனை நுங்குடன்தான்..."
கே.கே.நகர் நெசபபாக்கம் ஜங்ஷனில் பனை நுங்கு விற்பவரிடம் பத்து கேள்விகள் கேட்டு பத்து பதில்கள் பெற்றேன். அதை இங்கு பதிவிடுகிறேன்.
வணக்கம் நாகப்பன், சிவசங்கரன் மற்றும் அய்யனார் அவர்களே. நுங்கு காலம் எப்போ ஆரம்பிக்கும் ? எத்தனை மாதம் வரை இந்த வியாபாரம் நீடிக்கும்?
பொதுவா ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஜூலை முதல் வாரம் வரை நீடிக்கும். இது தான் Peak சீசன். இந்த மாதங்களில் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சூரியனுக்கும் நுங்குக்கும் நெருங்கிய உறவு இதனால் தான்.
நுங்குக்கு அதிக டிமாண்ட் வரும் இடம் எது?
பேருந்து நிலையம், ஜாம் ஆகும் சாலைகள், மார்கெட், பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ள இடங்கள்... வெயிலின் கொடுமை தாங்காதவர்கள் குளிர்ச்சி தரும் இந்த நுங்கை சாப்பிட்டு குளிர்ந்த மனதோடு போவார்கள். இப்போது கூட இந்த வேனில் வந்தவாசியிலுருந்து காய்கள் கொண்டு வந்து இங்கு விற்பனை செய்கிறோம்.
ஒரு நாள் எவ்வளவு நுங்கு விற்பனையாகும். தினமும் வருவீர்களா?
சீசன் டயத்தில்1000 நுங்கு வரை விற்பனை போகும். வியாபாரம் சூடு பிடிக்கும் நேரம் காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை. நாங்கள் மூவரும் பங்காளிகள். செவ்வாய் ,வியாழன் ஞாயிறு மூன்று தினங்கள் மட்டும் வருகிறோம். காய்கள் அதிகம் கிடைத்தால் தினமும் வருவோம்.
ஒரு நுங்கு நல்லதா கெட்டதா என்பதை எப்படி ஒரு நுகர்வோர் கண்டு பிடிப்பது?
நுங்கில் மூணு கண் இருக்கணும் . வட்டமா, மிருதுவாக, இளசா, கலர் சுத்தமா இருக்கணும். வெட்டி கொடுத்த பிறகு நம் கை விரல்கள் அந்த கண் உள்ளே போய் வழிச்சு எடுத்து சாப்பிட ஏதுவாக இருக்கணும். ஆனா சில பேர் அவசர அவசரமா சுளைகள் மட்டும் கேட்கும் போது அவர்களிடம் வெட்டிய இளசு நுங்குடன் கொஞ்சம் முற்றிய நுங்கையையும் கலந்து கொடுத்து விடுவோம். வேறு வழியில்லை.
ஒங்க வாழ்வாதாரம் எப்படி?
இந்த மூணு மாசம் தான் எங்க சம்பாத்தியம். மத்த நாட்களில் வேறே வேலை செஞ்சு பொழைப்பை நடத்தனும்.
ஒங்க வாழ்க்கையில் நுங்கு தவிர வேறு ஏதாவது நெருக்கமா இருக்க முடியுமா?
நுங்கு கிடைக்கும் பனங்காடு கடவுள் எங்களுக்கு கொடுத்த வரம். பனையேறியாக நாங்கள் படும் அவஸ்தை காயங்கள் ரணங்கள் கை கால் அடிப்பட்டலும் எங்க இதயம் மட்டும் இந்த பனை நுங்குடன் மட்டும் தான். இது எங்களை வாழ வைக்கும் தெய்வம். பனை மரம் மூலம் எல்லா பொருள்களும் கிடைக்கும். கற்பக விருட்சம் அது.
பனை நுங்கு இப்போ மார்கெட்டிங் பண்ண வேண்டிய நேரமா?
பொதுவா இந்நாள் வரைக்கும் மார்கெட்டிங் பண்ண வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. மூத்த தலைமுறைகள் இதன் உபயோகத்தையும் பலனையும் உணர்ந்து இருந்தார்கள். ஆனா இப்ப இளம் தலைமுறைகளுக்கு இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக யூ ட்யூப் டிவிட்டர் போன்றவற்றில் வீடியோ போடாறாங்கா. இது ஒரு விதத்தில் எங்களுக்கு நன்மை தான். வியாபாரம் நன்கு நடக்கும்.
நுங்கு சாப்பிட அல்லது சுளையாக எது அதிகம் விரும்பபடுகிறது?
இப்ப ட்ரெண்ட் குடிக்கக் கூடிய இளம் நுங்குகள் தான். மக்கள் அவற்றை வாங்கிக் கொண்டு ஜூஸ், பாயாசம், குல்பி போன்றவைகள் தயார் செய்து பட்டையை கிளப்பாறாங்கா ?
இந்த வியாபாரத்தில் நீங்கள் சந்திக்கும் சவால்கள், சிக்கல்கள் என்னன்ன?
நிறையவே உண்டு ...
இடை தரகர்கள் மூலம் காய்கள் கொள்முதல் செய்து அது வாடகை வண்டி மூலம் கடை போடும் இடத்துக்கு கொண்டு வர வேண்டி உள்ளது. காயின் விலையை அவர்கள் நிர்ணயம் செய்கிறார்கள். வருடா வருடம் இந்த நுங்கின் விலை ஏறிக்கொண்டு தான் போகிறது.
ஒவ்வொரு முறையும் பனங்காயை வெட்டும் போது கைகளில் வெட்டு காயம் பலமாக பட்டு விடுகிறது.
எங்கு விற்கலாம் என்கிற பொது வான இடம் கிடையாது.
சாலையோரம் கடையை போட சொல்வார்கள். தப்பி தவறி குளிர் பான கடை அருகில் கடை போட்டால் அவர்களின் அடாவடி தனம் அரசியல் பின் புலத்துடன்.
பிறகு போலீஸ் தொந்திரவு மாமூல்.
இதையும் மீறி இந்த மூணு மாசமும் எங்களுக்கு நரக வேதனை தான்.
இந்த தொழில் செய்ய என்ன தான் தீர்வு வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்தால், காயகளின் விலை கணிசமாக குறையும். இடை தரகர்கள் அடிக்கும் கொள்ளை தடுக்கப்படும்.
வியாபார பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் பற்றி நுங்கை வெட்டிக்கொண்டே பேட்டி கொடுத்தமைக்கு நன்றி கூறிவிட்டு விடைபெற்றோம்.