
சனிபகவானை ஆயுள்காரகன் என்று கூறுகிறோம். இவர் சூரியன் மற்றும் சாயாதேவியின் புதல்வன். புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சனீஸ்வரன் பிறந்தார்.
நவகிரகங்களில் ஒருவரான சனிபகவான் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஒருவனது ஆயுட்காலம் அமைகிறது. சனியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் பெருமாளே சனிக்கு அதிபதியாக இருப்பவர்.
கடவுளுக்கு விரதம் இருப்பது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காகதான். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானதும், அவசியமானதும் ஆகும். இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம்.
சனிக்கிழமை பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் விசேஷமான கிழமையாக இருந்து வருகிறது. சனிக்கிழமையில் இவர்களை வழிபடுபவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சனிக்கிழமை உகந்த நாளாக மாறிய கதை:
ஒருமுறை சனிபகவான் கலியுகத்துக்கு முதன் முதலாக வருவதற்கு ஆயத்தமானார். அப்போது எதிரே வந்த நாரதரைச் சந்தித்தார். அப்போது தான் கலியுகத்துக்கு செல்வதாக கூற.. அப்படியானால் சரி.. ஆனால் நீங்கள் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று, யாரை வேண்டுமானாலும் துன்புறுத்தலாம். ஆனால் தவறிகூட திருமலை பக்கம் சென்றுவிடாதீர்கள். ஏன் உங்கள் பார்வை கூட அங்கு படாமல் இருப்பதே நல்லது என்று மறைமுகமாக தெரிவித்தார் நாரதர்.
நான் சனிபகவான்.. நான் பிடித்தால் யாராக இருந்தாலும் எனக்கு கட்டுப்பட வேண்டியதுதான் என்று, திருமலையில் பாதம் பதித்த அடுத்த நொடியில் தூக்கியெறியப்பட்டார். மற்றவரை துன்பப்படுத்தி இன்பம் காணும் உனக்கு திருமலையில் இருப்பது யார்? என்று தெரிந்தும் உன் திருவிளையாடலை என்னிடம் காட்டுகிறாயா? என்று சினம் கொண்ட வேங்கடவனைக் கண்டு நடுங்கினார் சனிபகவான். எல்லோரையும் துன்பப்படுத்தி மகிழும் என்னை வழிநடத்தும் பரம்பொருளே, என்னை மன்னித்தருள வேண்டும் என்று அவர் பாதம் பிடித்து மன்னிப்பு கேட்டார்.
என்னை நினைத்து வாழும் பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார். அப்போது சனிபகவானின் விருப்பத்துக்கிணங்க அவர் பிறந்த தினமான சனிக்கிழமையன்று பெருமாளை வழிபட்டால், பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார் வேங்கடவன். அன்று முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக ஆயிற்று.
பக்தர்களின் வேண்டுதல், செல்வம், ஆயுள், ஆரோக்கியம் போன்ற இவை அனைத்தும் குறைவின்றி கிடைக்க, ஒவ்வொரு சனிக்கிழமையும் வேங்கடவனை வழிபடுவோம்.
சனிக்கிழமை விரதமுறை:
அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் உங்கள் வீட்டின் பூஜையறையில் அரிசி மாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும். பின்பு அக்கோலத்தின் நடுவில் ஒரு கலசத்தில் நீரை நிரப்பி வைக்கவேண்டும்.
திருப்பதி திருமலை வெங்கடாசலபதியின் படத்திற்கு வாசமுள்ள பூக்களை சூட்டி, புது நீல நிற துணியை வைத்து, எள் கொண்டு செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியம் வைக்க வேண்டும்.
மேலும் நெய் தீபங்கள் ஏற்றி, சந்தன மணம் கொண்ட தூபங்கள் கொளுத்தி சனிபகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து பூஜைகள் செய்ய வேண்டும்.
சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை விரதம் மேற்கொள்ள வேண்டும்.
காலையில் சிறிது உணவை காகங்கள் உண்ண வைக்கவேண்டும்.
மாலை அருகில் உள்ள பெருமாள் ஆலயம் சென்று துளசி மாலை சாற்றி வழிபாடு செய்யலாம்.
மாலையில் பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் உங்களால் இயன்ற தானங்களை அளிப்பது மிகுந்த நன்மையை தரும்.
விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்:
நவகிரகங்களில் சனிபகவான் ஆனவர் மனிதர்களுக்கு நீண்ட நாள் வாழும் ஆயுள் தரும் ஆயுள்காரகனாக இருக்கிறார். எனவே சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனீஸ்வரனின் அருள் பெற்று நீண்ட நாட்கள் வாழும் ஆயுளை பெறுகிறார்.