பொதுவாகவே முப்பது வயதைக் கடந்த பெண்களுக்கு தைராய்டு பிரச்னை அதிகளவில் வருகின்றது. தைராய்டு பிரச்னை, பல உடல்நலக் கோளாறுகளுக்கு மூலமாக உள்ளது. தைராய்டு நோயை பொறுத்தமட்டில் இது பெரும்பாலும் பெண்களை மட்டுமே அதிகளவில் பாதிப்பது என்பதால், இது பெண்கள் சார்ந்த நோயாகவே கருதப்படுகிறது.
தைராய்டு சுரப்பி பாதிப்பால், பெண்களின் மாத சுழற்சியில் ஒழுங்கற்ற தன்மை ஏற்படுகிறது. மேலும் அவர்களின் மனநிலையில் மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. உடல் எடையையும் கணிசமாக அதிகரிக்க வைக்கிறது. இது போன்ற அறிகுறிகள் தோன்றும்போதே பெண்கள் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்து, அதற்குரிய மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும்.
முப்பது வயதை கடந்த பின்னர், பெண்களுக்கு திருமணம் மற்றும் குடும்பம் சார்ந்த பொறுப்புகளால் வாழ்க்கையில் ஒரு அழுத்தம் உண்டாகிறது. கணவர் , குழந்தைகள் , குடும்பம் என அனைத்திற்கும் இவரே பொறுப்பாக இருப்பதால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதனால் ஹார்மோன்கள் சமநிலையற்று சுரக்கின்றன. ஹார்மோன்கள் மாற்றம் அடைவது உடலின் உள்ளுறுப்பு செயல்பாடுகளையும் பாதிக்கும். இதன் காரணமாக அதிக பசியும் , சில நேரங்களில் பசியின்மையும் மாறி மாறி வரலாம்.
இதனால் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் உணவு உட்கொள்ளலில் சமநிலையை கடைப்பிடிக்க முடியாது . ஒழுங்கற்ற உணவு முறையால் உடல் எடை தொடர்ச்சியாக கூடத் தொடங்கும். மேலும் ஹார்மோன் கோளாறுகள் பெண்களின் மாதசுழற்சி நாட்களில் ஒழுங்கற்ற தன்மையை ஏற்படுத்தும். கர்ப்பம் தரிக்கும் செயலில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
மேலும் , தினசரி உணவில் அயோடின், வைட்டமின் டி, செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் இல்லாததும் தைராய்டு பிரச்னையை உருவாக்குகிறது. பலருக்கு தைராய்டு மரபணு சார்ந்த பிரச்னையாகவும் இது இருக்கிறது. ஒரு குடும்பத்தில் முன்னோர் யாருக்காவது தைராய்டு பிரச்னைகள் இருந்தால், அவர்களின் குடும்பத்தில் வரும் பெண்களுக்கு தைராய்டு பிரச்னை வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
தைராய்டு பிரச்னையின் அறிகுறிகள்:
பெண்கள் அடிக்கடி சோர்வுடன் காணப்படுவார்கள், மிகவும் பலவீனமாக உணர்வார்கள். திடீரென்று உடல் எடை கணிசமான அளவில் அதிகரிக்கலாம். இந்த சோர்வுகள் மனதளவில் சில பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இது மட்டுமல்லாது மன அழுத்தம், பதட்டம், நினைவாற்றல் குறைவு, உணர்வு மாற்றம் ஆகியவை ஏற்படும். மாத சுழற்சி நாட்களில் அதிகளவில் இரத்தப்போக்கு அல்லது மிகக் குறைவான அளவில் இரத்தப்போக்கு ஏற்படலாம். சருமம் ஈரப்பதம் இன்றி வறண்டு காணப்படும் , தலைமுடியும் பலவீனமாகி உதிர தொடங்கும்.
அடிக்கடி வயிறு வலி, செரிமானம் சார்ந்த தொந்தரவுகள் , மலச்சிக்கல் பிரச்சனையும் வரலாம். தூக்கமின்மை, குரல்களில் சிறிய மாற்றங்கள் கூட இதன் அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன. இந்த அறிகுறிகள் தென்படும்போது முதலிலே மருத்துவரின் பரிந்துரையில் பரிசோதனை செய்துக் கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
முப்பது வயதைக் கடந்த பெண்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து மன அழுத்தத்தில் சிக்கும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும் . நல்ல சரிவிகித உணவு , நிறைவான தூக்கம் ஆகியவை ஆரோக்கியத்தை சீராக வைக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)