

இந்தியாவில் 'மந்திரா பேடியை (Mandira Bedi) தெரியாத யாரும் இருக்க முடியாது' என்பது ஒரு காலம். 90களில் இந்தியாவில் டிடி சேனல் மட்டுமே முன்னணியில் இருந்த போது, இந்தியாவின் முதல் மெகா தொடரான ‘சாந்தி’யில் நாயகியாக நடித்து புகழ் பெற்றவர். அன்றைய தொலைக்காட்சி யுகத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் மந்திரா பேடி மட்டும் தான். ஷாருக்கான் நடித்த மெகா ஹிட் திரைப்படமான ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ திரைப்படத்தில் பிரீத்தி சிங்காக நடித்து அனைவரையும் கவர்ந்து இருப்பார். பின்னர் ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளின் தொகுப்பாளராக மாறி மீண்டும் தொலைக்காட்சியில் தன் அந்தஸ்தை நிரூபித்தார். சமீபத்தில் மகளிர் கிரிக்கெட் அணிக்கு அவர் செய்த உதவிகளை பற்றி பலரும் மனம் திறந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியை தோற்கடித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய மகளிர் அணிக்கு 80 கோடிகளை தாண்டி பரிசுத் தொகையும் அன்பளிப்புகளும் குவிந்து கொண்டே வருகிறது. டாடா நிறுவனம் இன்னும் வெளியாகாத தனது புதிய மாடல் டாடா சியாரா காரை மகளிர் அணியை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் பரிசளிக்க உள்ளது.
தற்போதைய மகளிர் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும், ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ₹15 லட்சம், ஒரு நாள் போட்டிக்கு 6 லட்சம், டி20 போட்டிக்கு 3 லட்சம் வரை சம்பளமாக பெறுகின்றனர். இது தவிர அவர்களின் அதிகாரப்பூர்வ போக்குவரத்துகள், 5 நட்சத்திர தங்கும் விடுதி செலவுகள், இதர செலவுகள் அனைத்தையும் பிசிசிஐ ஏற்றுக்கொள்கிறது. இன்று மகளிர் அணிக்கு உரிய அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கிறது. ஆனால், சில காலம் முன்பு இந்த வசதிகள் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆண்கள் அணிக்கும், பெண்கள் அணிக்கும் இடையே மிகப் பெரிய பாரபட்சம் நிலவியது.
2005 உலகக் கோப்பையில், இந்திய மகளிர் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்த போது ஒவ்வொரு வீராங்கனைக்கும் ஒரு போட்டிக்கு ₹1,000 என்று அந்த தொடரில் விளையாடியதற்கு மொத்தமாக ₹8000 கிடைத்ததாக, இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார். அப்போது போட்டிகளுக்கு ரயிலில் பொது பெட்டியில் பயணம் செய்ததையும், ஏசி வசதியற்ற ரும்களில் தங்க வைக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.
அப்போதெல்லாம் மகளிர் அணியினர் தங்கள் சொந்த செலவில் பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது. அதை அவர்கள் கிரிக்கெட் மீதான அன்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வினால் செய்துள்ளனர். சில சமயம் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் செலவுகளுக்கு மற்ற வேலை செய்து சம்பாதிக்க வேண்டியும் இருந்துள்ளது என்றும் மிதாலி கூறியுள்ளார்.
2003-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு தொடரில் பங்கேற்க இந்திய மகளிர் அணியினர், இங்கிலாந்து செல்ல விமான டிக்கெட் வாங்க பணம் இல்லாமல் சிரமத்தில் இருந்துள்ளனர். இதையறிந்த மந்திரா பேடி, அப்போது ஒரு வைர நகை விளம்பரத்தில் நடித்திருந்தார். அந்த விளம்பரத்தில் தான் பெற்ற மொத்த ஊதியத்தையும் மகளிர் அணிக்கு கொடுத்து இங்கிலாந்து பயணம் செல்ல டிக்கெட் வாங்க உதவியுள்ளார்.
மந்திரா பேடி ஒருமுறை அல்ல பலமுறை மகளிர் அணிக்கு நன்கொடை கொடுத்து உதவியுள்ளார். பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்த மேலும் நிதி திரட்டுவதற்காக, அவர் பல நிறுவனங்களையும் அணுகி, வெற்றிகரமாகப் பணம் திரட்டி கொடுத்துள்ளார். 2003-ல் இருந்து 2006-ம் ஆண்டு வரை மகளிர் அணிக்கு அறிவிக்கப்படாத ஸ்பான்சராக மந்திரா பேடி இருந்துள்ளார்.
சுனில் கவாஸ்கரின் தங்கையான, மகளிர் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த நூதன் கவாஸ்கரும் மகளிர் கிரிக்கெட் அணியின் வளர்ச்சியில் மந்திரா பேடியின் உதவியை நினைவு கூர்ந்தார்.
ஒரு முறை, நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது மகளிர் அணியினருக்கு ஹோட்டலில் தங்க பணம் இல்லை. அப்போது நூதன் அங்குள்ள இந்தியர்களிடம் பேசி அணியினரை இந்தியர்களின் வீடுகளில் தங்க வைத்துள்ளார். பிசிசிஐ இந்திய மகளிர் அணியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்னர் தான் மகளிர் அணியின் துயரங்கள், பண சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்தது.
பணமில்லா நாட்களிலும், வீராங்கனைகளின் கனவுகளைக் நனவாக்க மந்திரா பேடியின் விளம்பரம் இல்லாத உதவிகள், இன்று இந்திய மகளிர் அணியை வெற்றிகரமான அணியாக மாற்றியுள்ளது.