

13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரைஇறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இவ்விரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 20-ல் இந்தியாவும், 13-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் (7 புள்ளி) 4-வது இடம் பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்துடன் 341 ரன்கள் குவித்து 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது.
பெண்கள் ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச சேசிங் (341)இது தான். இதற்கு முன்பு இதே உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான லீக்கில் 331 ரன் இலக்கை ஆஸ்திரேலியா துரத்திப்பிடித்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை முறியடித்ததுடன், அந்த தோல்விக்கும் இந்தியா சுடச்சுட பதிலடி கொடுத்து இருக்கிறது. இதன்மூலம் பெண்கள் உலகக் கோப்பையில் தோல்வியையே சந்திக்காமல் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் வீறுநடைக்கு இந்தியஅணி முடிவு கட்டியது.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் கோதாவில் குதிக்கின்றன.
இதனிடையே மழை பெய்ததன் காரணமாக 3 மணிக்கு தொடங்க வேண்டிய இன்றைய ஆட்டம் ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் கால தாமதமாக தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்தியா முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கியது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா மற்றும் ஷபாலி வர்மாவும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சாமர்த்தியமாக எதிர்கொண்டதுடன் பொறுப்பாக ஆடி எதுவான பந்துகளை பவுண்டரிக்கு ஓட விட்டனர். இவர்களின் பார்ட்னர்ஷப்பை உடைக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி தடுமாறியது.
இந்நிலையில் 17.4 ஓவரில் இந்த ஜோடி 104 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது. மந்தனா 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அதனை தொடர்ந்து வந்த இந்திய வீராங்கனைகள் நிதானமாக விளையாடி ரன் வேகத்தை சீராக உயர்த்தினார். கடைசியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 298 ரன்கள் அடித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா காக்கா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இதனையடுத்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய வீராங்கனைகளின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொரு விக்கெட்டும் சரிய, ரன் ரேட்டும் சரியத்தொடங்கியது. 30 ஓவர்களின் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.இறுதியில் 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது.
கடைசியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளையும், ஷெஃபாலி வெர்மா 2 விக்கெட்டும் எடுத்திருந்தனர்.
2005, 2017-ம் ஆண்டு இறுதி போட்டியில் இருமுறை சாம்பியன் பட்டத்தை தவற விட்ட இந்திய மகளிர் அணி இம்முறை சாதித்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு அடுத்து மகளிர் உலகக்கோப்பையை வென்ற அணியானது இந்தியா.