
மீனாவுக்கு என்னைவிட அட்ஜஸ்ட் பண்ணிப்போற புருஷன் கிடைக்கமாட்டான் என்று இந்நேரம் புரிந்திருக்கும்.
இருந்தாலும் எதற்கும் ஒரு அளவு உண்டல்லவா? எல்லை மீறிப்போகிறாள்.
பஸ் ஸ்டான்டில் மூனு மணி நேரமாய் கொளுத்தும் வெயிலில் காத்திருக்கிறேன்.
அசால்ட்டாக சொல்கிறாள் “பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன். மாலை பஸ்ஸை பிடித்து ராத்திரி வரேன். நீங்களும் வீட்டுக்கு போயிட்டு ராத்திரி வாங்க” என்று.. பதினாறு கிலோமீட்டர் போயிட்டு ராத்திரி வரனும்.
பல்லைக்கடித்துக்கொண்டு திரும்பினேன்.
இப்படித்தான் போனவாரம் மீனாவின் கஸின் பிரதர் வரான்னு “ரயில்வே ஸ்டேஷனில் மாலை மூணு மணிக்கு பிக்கப் பண்ண வரமுடியுமா?” என்று அன்பொழுக கேட்டாள்
“ஆபீஸ் டைம்டி.. எப்படி?” என்று கேட்டதற்கு “எனக்காக அரை நாள் லீவு போடுங்க” என்ற ஆர்டரை, 'ப்ளீஸ்' என்ற சொல் சேர்த்து வேண்டுகோளாக்கினாள்.
மேனேஜரிடம் அடி வாங்காத குறையாக திட்டு வாங்கி, லீவு போட்டு, கஸின் பிரதரை பிக்கப் செய்தால், அவன் கொடுத்த தொல்லையிருக்கே, அப்பப்பா! சொல்லி மாளாது.
என்னவோ எலிஸெபத் ராணியின் பேரன் போல் என் பைக்கில் ஏறமாட்டேன் என்று அடம் பிடித்து, “டொயோட்டா கார் வாடகைக்கு எடுங்க” என்று தானே என் பேரில் புக் செய்தான்.
அதில் மூன்று நாள் ஊரைச்சுற்றி பார்க்கி்றேன் என்று ஒரு முக்கு முட்டுச்சந்து பாக்கியில்லாமல் கண்ட இடமெல்லாம் காரை விட்டு, மூன்று முறை டயரை பஞ்ச்சராக்கி… அவன் அடித்த கூத்து இருக்கே ... அப்பப்பா சொல்லி மாளாது.
நாலாம் நாள் காலையில் ஊருக்கு புறப்படுகையில் “காரை கட் பண்ணிடுங்க” என்றான்
“பணம்?”
“பணமா? விருந்தாளிகிட்டே பணம் கேட்கறீங்களா? நான் மீனாவின் விருந்தாளி. ஒழுங்கா 19500ரூபாயை கட்டுங்க.” என்றவன் “வழிச்செலவுக்கு 5000ரூபாய் இருக்குமா?” என்று வேறு கேட்டான்.
கடுப்பாகி மாடிக்குப் போய், மீனாவை செல்ஃபோனில் பிடித்து விபரத்தை சொல்லி “ரொம்ப படுத்தறான்” என்றேன்.
“உங்க பிச்சைக்கார புத்தியை காட்டாதீங்க” என்று திட்டி்யவள் “பேச்சலர் பையன். ஆயிரம் செலவிருக்கும். எல்லாத்தையும் சொல்ல முடியுமா? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க” என்றாள்.
உரலில் மாட்டியவன் உலக்கைக்கு தப்ப முடியுமா? தண்டம் அழுதேன்.
இப்ப பஸ் ஸ்டாண்டுக்கு ரெண்டாவது டிரிப். எதிர்க்கடையில் ஒரு டீ குடித்தேன்.
அதற்குள் ஃபோன்
“என்ன?”
“ஏன் அலுத்துக்கறீங்க?. என்னைக்கண்டாலே பிடிக்கலை உங்களுக்கு. ஏன் நான் ஃபோன் பண்ணக்கூடாதா?” ஃபோனிலேயே காய்ச்சினாள்.
“என்னனு கேட்டது தப்பா?”
“அந்த என்ன வா? சரி, ராத்திரி வர லேட்டாகும் வந்து டிஃபன் செய்ய முடியாது. செவ்வாய்க்கிழமை விரதம் வேற. ஓட்டலில் சாப்பிட முடியாது அதனாலே ஒரு 25 சப்பாத்தியும் டாலும் பண்ணிவைச்சிடுங்க. நாளைக்கு காலையிலும் சாப்பிடலாம்,” என்றாள்
“ஏன்டி நான் என்ன வேலை பாக்கறதுனு கணக்கு கிடையாது?”
“சும்மா பிகு பண்ணாதீங்க. டிராவல் பண்ணிட்டு டயர்டா வருவேன். சப்பாத்தி செய்ய கஷ்டமாயிருக்கும்னுதானே சொல்றேன். தினமுமா உங்களை சிரமப்படுத்தறேன்? குடும்பம்னா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும். செய்வீங்க. செய்யறீங்க” என்றாள்
வேறு வழி? உடனே ஆட்டா மாவு வாங்கி, பைக்கில் பறந்தேன். வீட்டுக்கு வந்தவுடன் தான் தெரிந்தது. உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் ஒண்ணுமில்லை.
மறுபடி பைக்கை கிளப்பி, மார்க்கெட்டுக்கு ஓடினேன்.
ரெண்டு மணி நேரம் வியர்க்க வியர்க்க 30 சப்பாத்தியிட்டு சைட் டிஷ்ஷும் ரெடி செய்தேன்.
மணியைப்பார்த்தேன். 8.00 அட,நேரமாச்சு! 10.மணிக்கு பஸ் வந்துடும்.
மறுபடி பஸ்டான்டுக்கு பறந்தேன். பஸ் வந்தாச்சு. மீனாவைக் காணோம். எனக்கு பகீரென்றது. செல்ஃபோனில் மீனாவை பிடித்தேன்.
“ஹலோ” என்றவள், “ராத்திரி 10மணிக்கு யார் ஃபோனிலே?” என்றபடி எடுத்தவள் “அட நம்மாளு.. திடீர்னு எங்க அக்கா வந்துட்டாங்க. அவங்களோட ரெண்டு நாளிருந்துட்டு ஊருக்கு வரேன். குட்நைட்” என்றாள்.
“ஃபோனிலே சப்பாத்தியும், டாலும் பண்ணி வையுங்கனு சொல்லத் தெரியுதுல்லே, ஊருக்கு வரலைனு ஒரு ஃபோன் பண்ணியிருக்க கூடாது?”
“ஸாரிங்க. அக்காவோட பேசினதில் அதை மறந்துட்டேன்”
“என்ன சிம்பிளா சொல்றே? நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? எவ்வளவு அலைச்சல்? என்னென்ன வேலை? நானும் மனுஷன்தானே! “
“ஸாரிங்க. இந்த முறை கொஞ்சம் பொறுத்துக்கப்படாதா? இப்படி ராத்திரி சண்டை போடனுமா? அக்காவெல்லாம் பாக்கறாங்க. ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க” கெஞ்சினாள்.
“சரி. முக்யமான விஷயம் உனக்கு சொல்லனும். பொங்கல் போனஸ் வந்திடிச்சு”
“வெரிகுட். அதை செலவு பண்ணிடாதீங்க”
“அது வந்து….”
“என்ன இழுக்கறீங்க? செலவு பண்ணிட்டீங்களா?” அதிகாரமாய் கேட்டாள்.
“ஆமாம். என் நண்பன் கோபாலிடம் கடன் வாங்கியிருந்தேனில்லே...”
“ஆமாம்.”
“அந்த கடனை இப்ப அடைச்சிட்டேன்.”
“இதுதான் நேரமா?”
“ஆமாம். கோபாலுக்கு ஆக்ஸிடென்டாகி கால் உடைஞ்சு ஆஸ்பிடலிலிருக்கான். அவனுக்கு பணம் தேவைப்படுதுன்னான் அதனாலே.. “
“அதனாலே?”
“இந்த பொங்கலுக்கு உனக்கு பட்டுப்புடவை இல்லை. அடுத்த பொங்கலுக்கு கட்டாயம் வாங்கித்தரேன்...” மென்று விழுங்கினேன்.
“இப்படி சொல்ல உங்களுக்கு வெட்கமாயில்லே? எனக்கு தெரியாது பட்டுப்புடவை வந்தாகணும்.” அடிக்குரலில் கத்தினாள்.
“எப்படி வரும்? குடும்பம்னா திடீர் செலவு வரும். இந்த வருடம் அட்ஜஸ்ட் பண்ணிக்க. அடுத்த பொங்கலுக்கு சத்யமா வாங்கித்தரேன்.”
“இந்த அட்ஜஸ்ட் பண்ற வேலையெல்லாம் உங்களோட வைச்சுக்கங்க. நான் சொன்னா சொன்னதுதான். இந்த பொங்கல் செலவை அட்ஜஸ்ட் பண்ணி நீங்கதான் பட்டுப்புடவை வாங்கியாகணும். நல்லா யோசிங்க. யெஸ்னு சொன்னா பொங்கலுக்கு ஊருக்கு வரேன். இல்லைனா பொங்கலுக்கே நான் ஊருக்கு வரலை. நாளை காலை வரை உங்களுக்கு டயம்” என்றாளே பார்க்கலாம்!
வேறு வழி? மறுபடி கடன்தான்... நண்பர்களா இல்லை?