
ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்களின் பங்கு:
பெரும்பாலான காளைகளை வளர்ப்பது பெண்கள் தான் என்பது ஆச்சரியமாக இருந்தாலும், அதுவே உண்மை. ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பது சாதாரணமான விஷயம் அல்ல. ஆனால், பெண்கள் மிகவும் அன்போடு காளைகளை பழக்குகின்றனர். அவர்கள் இந்தக் காளைகளை தம்பியாக நினைத்து மிகுந்த பாசத்துடன் வளர்க்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜல்லிக்கட்டு போட்டியில் அனைவரையும் கதி கலங்க வைத்தது இராவணன் காளை. காவல் ஆய்வாளர் அனுராதாவிற்கு அண்ணன் பரிசாக கொடுத்த அன்புக் காளை இது. வெள்ளை நிறத்தில் கருப்பு புள்ளிகளைக் கொண்ட இராவணன் காளை வாடிவாசலை தாண்டி கம்பீரமாக மைதானத்திற்குள் நுழைந்து நிமிர்ந்து பார்த்ததும், காளையர்கள் எல்லாம் கம்பிகளை பிடித்து மேலே ஏறிக் கொண்டு நின்றனர். இராவணன் நின்ற 15 நிமிடங்கள் எவருக்கும் கீழே இறங்க துணிவில்லை. அலங்காநல்லூரில் இரண்டாம் பரிசு பெற்ற இராவணன், முரட்டுசோழகன்பட்டி ஜல்லிக்கட்டில் வெற்றியும் பெற்றது.
மதுரை, நத்தம் இடையபட்டியை சேர்ந்த ரேணுகா தனது 7 வயதிலிருந்தே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். வறுமையான குடும்பத்தை சேர்ந்த ரேணுகா முதலில் தன் காளைக்கு தீனி வைத்து விட்டுதான் உணவு உண்ண செல்கிறார். தாங்கள் உண்ணும் உணவை விட காளைக்கு அதிக சத்துமிக்க உணவுகளை தருகிறார். போட்டிகளில் இவரே நேரடியாக வாடிவாசலுக்கு சென்று தனது காளையை அவிழ்த்து விடுகிறார்.19 வருடங்களாக 174 முறை வாடிவாசல் கண்டுள்ள இவரது காளைகள் இதுவரையிலும் யார் கையிலும் சிக்கியதில்லையாம். ரேணுகாவின் சாதனையை பாராட்டி மூன்று முறை ஜல்லிக்கட்டு வீர தமிழச்சி விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1-15, 2018 தேதியிட்ட நமது மங்கையர் மலர் இதழில், ரேணுகாவுடனான பேட்டி இடம்பெற்றுள்ளது. அந்த கட்டுரையை கல்கி குழும archivesலிருந்து எடுத்து மீண்டும் பிரசுரித்துள்ளோம். படித்து மகிழ click here:
மதுரை மாவட்டம் மேலூர், சென்னகரம்பட்டியைச் சேர்ந்த செல்வராணி தனியாக காளைகளை வளர்த்து வருகிறார். இவரது குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக காளைகளை வளர்த்து வந்துள்ளனர். இவரது காளைப் பெயர் ராமு, பெரும்பாலான போட்டிகளில் இவரது காளைகள் வெற்றி வாகை சூடியுள்ளன.
மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த மேனகா காந்தி பல தலைமுறைகளாக ஜல்லிக்கட்டுக் காளை வளர்க்கும் குடும்பத்தினை சேர்ந்தவர். ராமு என்ற தனது காளையை அதிகம் நேசிக்கும் இந்த பெண, காளை வளர்ப்பிற்காக சுத்த சைவமாக மாறியுள்ளார்.
மதுரை விளாச்சேரியைச் சேர்ந்த வவிஷ்ணா, ராமு என்ற காளையை வளர்த்து வருகிறார் கடந்த 3 ஆண்டுகளாக அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இவரது காளை ராமு, இதுவரை தோற்றதே இல்லை.
மதுரை ஐராவத நல்லூரை சேர்ந்த யோகதர்ஷினி சிறுமியாக இருந்த காலத்தில் இருந்தே ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறார். நேரடியாக வாடிவாசலுக்கு சென்று காளையை அவிழ்த்து விடும் இவர், பல இடங்களில் வெற்றி பெற்று பல பரிசுகளை வென்றுள்ளார். ஒரு முறை தனது காளை பிடிபட்ட உடன், அமைச்சர் தனக்கு கொடுத்த பரிசை வேண்டாம் என்ற மறுத்த பெருமைக்கு உரியவர்.
லாவண்யா என்ற பெண் மண்வாசம் என்ற பெயரில் யூ ட்யூப் சேனல் வைத்துள்ளார். இவர் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு காளைகளை ஆவணப்படுத்தி வருகிறார்.
வரலாற்றில் முதல் முறையாக மகளிர் ஜல்லிக்கட்டு:
கடந்த சில வருடங்களாகவே ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்கள் காளை அடக்க பங்கு கொள்ள வேண்டும் என்ற முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைவரும் முடிவு செய்துள்ளனர். இதற்கான முயற்சியை மதுரா சுற்றுலா நிறுவன தலைவர் வி.கே.டி.பாலன் செய்துள்ளார். மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க பெண் போலீஸார், கபடி வீராங்கனைகள், கல்லூரி மாணவிகள் ஆர்வமாக முன் வந்துள்ளனர். அவர்களுக்கு 3 மாத காலம் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்தப் போட்டியில் இலங்கை தமிழ் பெண்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் , அதற்காக ஆகும் செலவை தான் ஏற்பதாகவும், பல வருடங்களாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து போட்டிக்கு அனுப்பி வரும் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் கூறியுள்ளார்.