
இந்தியப் பெண்கள் உடல் மற்றும் மனரீதியாக எதிர்கொள்ளும் மெனோபாஸ் சிக்கல்கள் யாவை? (உளவியல் மருத்துவரின் பார்வையில்)
மெனோபாஸ் எனப்படும் மாதவிலக்கு நிற்கும் காலகட்டம் பெண்களின் வாழ்வில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மேலைநாட்டுப் பெண்களோடு ஒப்பிடும் போது இந்தியப் பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படுத்தும் உடல் மற்றும் மன ரீதியான சிக்கல்கள் அதிகம். அவை என்னென்ன? அவற்றை எவ்வாறு சிறப்பாக எதிர்கொள்ளலாம்? என்பதைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்...
மெனோபாஸ் என்பது உலகின் அனைத்து பெண்களுக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை தானே? இதில் இந்தியப் பெண்கள் மட்டும் என்ன ஸ்பெஷல் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் குடும்பக் கட்டமைப்பு, கலாச்சாரம், சமூக அழுத்தம் போன்றவை இந்தியப் பெண்களை அதிகம் பாதிக்கின்றன.
ஹார்மோன் மாறுபாடுகளால் உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் விளைவுகள் ஒரு புறம்; பெண்கள் தங்கள் கோப தாபங்களை, உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற சமூக எதிர்பார்ப்பு மறுபுறம்.
இவற்றுக்கு இடையே இந்தியப் பெண்கள் மெனோபாஸ் சிக்கல்களை எதிர்கொள்வது மிகவும் சிரமமான காரியம் என்கிறார் அலோக் குல்கர்னி என்கிற மூத்த உளவியல் ஆலோசகர். இவர் கர்நாடகா, ஹூப்ளியில் உள்ள மனஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெண்டல் ஹெல்த் அண்ட் நியூரோசயின்ஸ் சேர்ந்த சீனியர் மருத்துவர்.
மெனோபாஸ் உண்டாகும் சிக்கல்கள்:
பெரி மெனோபாஸ் எனப்படும் மாதவிலக்கு நிற்கும் காலகட்டத்திற்கு முந்தைய பருவத்திலும், மாதவிலக்கு நின்ற பிறகும் பெண்களுக்கு உடல்ரீதியான தொல்லைகளும் மனநிலை மாறுபாடுகளும் ஏற்படும்.
ஹாட் ஃப்ளாசஸ் (hot flashes), தூக்கம் இல்லாத இரவுகள், காரணம் தெரியாத பயம், இதுவரை மகிழ்ச்சியைக் கொடுத்து வந்த விஷயங்கள் கூட மன அழுத்தம் தருவது போல மாறிப் போவது, எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை, உணவுப் பழக்கங்களில் ஏற்படும் மாறுபாடுகள், ஆர்வமின்மை, உடலும் மனமும் அடிக்கடி சோர்ந்து போதல், சிறிய விஷயத்திற்கு கூட அழுதல், குற்ற உணர்வு, பிரியமானவர்கள் மீது நம்பிக்கையின்மை, மதிப்பில்லாத உணர்வு, திடீர் கவலை, கடந்த காலத்தை நினைத்து மனச்சோர்வு அதிகரித்தல், அறிவாற்றல் சிரமங்கள், மூளை மூடுபனி, நினைவாற்றல் குறைபாடு, கடுமையான மன அழுத்தம் போன்றவை ஏற்படும்.
சிலருக்கு தற்கொலை எண்ணங்கள் கூட தென்படலாம். இந்தக் காலகட்டங்களில் ஒரு பெண் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வாள். தேவைக்கு அதிகமாக கத்துதல், பிரியமானவர்களிடமிருந்து விலகி இருத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
மெனோபாஸ் சிக்கல்கள் ஏற்பட காரணங்கள்:
மாதவிடாய் என்பது மாறிவரும் தடைகளைக் கொண்ட ஒரு மன ஓட்டமாகும். 40% மரபியல் காரணங்களாலும் 60% சுற்றுப்புறக் காரணிகளாலும் மெனோபாஸ் சிக்கல்கள் ஏற்படுகின்றன. உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைவதால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் செரட்டோனின் பாதைகளை தடுமாறச் செய்வதால் மாதவிடாய் நிறுத்தத்தின்போது பதட்டம் அதிகரிக்கிறது.
நடுத்தர வயதில் பெண்களுக்கு தங்கள் பிள்ளைகள் படிப்பு அல்லது திருமணம் போன்ற காரணங்களால் வீட்டை விட்டு வெளியே இருப்பது மனதிற்கு சுமையாக அமைகிறது. எம்ப்டி நெஸ்ட் எனப்படும் வெற்றுக்கூடு நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள். மேலும் அவர்களுக்கு வயதான பெற்றோரை பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் வந்து சேருகிறது. இதனால் அவர்களது மன அழுத்தம் அதிகரிக்கிறது. முன்பு போல அவர்களால் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத தன்மையும் சேர்ந்து மனநிலையை மேலும் சிக்கலாகுகிறது.
மருத்துவ உதவி:
தி லான்செட் சைக்கியாட்ரியின் உலகளாவிய மதிப்பீடின்படி, 25லிருந்து 30 சதவீத மேலைநாட்டுப் பெண்கள் மருத்துவ உதவியை நாடுகிறார்கள். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் பத்திலிருந்து 20 சதவீதப் பெண்கள் கூட மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள தயங்குகிறார்கள்.
மெனோபாஸ் மனநிலை மாறுபாடுகளை எதிர்கொள்ள உதவும் வழிமுறைகள்:
உண்மையில் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது பெண்களின் மனநிலைதான். இந்திய பெண்கள், குடும்பம் குழந்தைகள் என்று தன்னைவிட பிறருக்கு அதிக கவனிப்பு தருகிறார்கள். தன்னுடைய உடல் மற்றும் மனநல மாறுபாடுகளை கவனிக்க தவறும் போது அல்லது புறக்கணிக்கும் போது அது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.
சுய கவனிப்பு:
போதுமான தூக்கம், ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
குடும்பத்தினரின் கவனிப்பு:
கணவர் மற்றும் குடும்பத்தினர் மெனோபாஸ் நிலையில் இருக்கும் பெண்ணை ஆதரிக்க வேண்டும். வீட்டு வேலைகளில் உதவுதல், சமைத்தல், குழந்தைகளைப் பராமரித்தல் போன்றவற்றை செய்ய வேண்டும்.
அந்தப் பெண்களின் கருத்துக்களை கவனமாக கேட்க வேண்டும். அன்போடு பேச வேண்டும். குறிப்பாக கணவர் மிகவும் அக்கறையுடன், நேசத்துடன் மனைவியை நடத்தும் போது அவரால் மிக எளிதாக இந்த மன ரீதியான சிக்கல்களை சமாளிக்க முடியும்.
மெனோபாஸ் பற்றிய தவறான புரிதல்கள்:
50 வயதிற்கு மேல்தான் பெண்களுக்கு மெனோபாஸ் வரும் என்கிற தவறான புரிதலும், அது முழுக்க முழுக்க உடல் சார்ந்த பிரச்சனை என்றும் எண்ணுகிறார்கள். ஆனால் உண்மை அப்படியல்ல. இப்போதைய காலகட்டத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மெனோபாஸ் வருகிறது. மேலும், அது உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.