

குப்புசாமி காதைத் தீட்டிக்கொண்டு உற்றுக் கவனித்தார். (Tamil short story)
‘யாருடன் கமலா கிச்சனில் பேசறா?’
கமலா குரல், "தேங்காய் துருவி வச்சிட்டு கீரையை ஆயணும், குளிச்சிட்டு வந்து சாமி ரூம் கிளீன் பண்ணனும். நாளைக்காவது பெட்ஷீட் தலையணையைத் துவைக்கணும். இந்த மனுஷனை வாஷிங்சோடா வாங்கி வரச் சொல்லணும்..." மெதுவாக எட்டிப் பார்த்தார். கிச்சனில் யாருமில்லை. "ஓ...தனக்குத்தானே பேசறா. எத்தனை நாளாக இப்படிப் பேசறாளோ?" யோசித்தார்...
இப்போதெல்லாம் குப்புசாமி மனைவியுடன் அதிகம் பேசுவதில்லை. "சரி, ஓகே..., ம்..." அவ்வளவுதான்.
75 வயதில் பேசுவதற்கு அதிக எனெர்ஜி தேவைப்பட்டது. மவுனம்தான் சௌகரியம். தன்னைப்போல் அவளால் கம்மென்று இருக்கமுடியாது என்று உணர்ந்தார். போனில் மகளுடன் வாட்ஸ்அப் உரையாடல்... வேலைக்காரி வந்தால் கதைகள்... அவள் மாமியார் செய்யும் அட்டகாசங்கள்... எப்போதாவது எதிர்வீட்டு பெண் வந்தால் அரட்டை...எல்லாம் போதவில்லை அவளுக்கு.
பையன் லீவில் வந்தால் அவனிடம் நீள நீளமாகப் பேசுவாள். அவனும் ஃபோன் பார்த்தபடி, "ம்...சரிம்மா" என்பான் அப்பாவை மாதிரி. நண்பர் டாக்டர் சைக்கியாட்ரிஸ்ட்ரிடம் இது பற்றி விசாரித்தார்.
"இது வியாதி இல்லை. மன அழுத்தம் குறையும். இது பொதுவாக குழந்தைகளிடமும் பெண்களிடமும் இருக்கும் ஒரு பழக்கம்தான்."
"வெள்ளிக்கிழமை சர்க்கரைப் பொங்கல் செஞ்சு படைக்கணும். ஏலக்காய் வாங்கி வரச் சொல்லணும்." இப்படி எதேதோ பேசுவது காதில் விழுந்தது.
'நமக்கும் மனச் சோர்வு நீங்க இதை முயற்சி செய்தால் என்ன?' என்று நினைத்தார்.
"பாங்க் போகணும்....சோமு மகன் கல்யாணத்துக்குப் போக கார் சொல்லணும்... ஸ்கூட்டி இன்சூரன்ஸ் புதுப்பிக்கணும்" என்று உரக்க சொல்லிக்கொண்டார்.
கமலா, "என்னங்க யார் கூடப் பேசறீங்க?"
"இல்லே கமலா எனக்கு நானே சொன்னேன் ஞாபகத்துக்கு..."
"அதை மனசுக்குள் சொல்லணும்....பார்க்கிறவங்க லூஸுன்னு நினைச்சுக்கப்போறாங்க...!"
குப்புசாமி கூர்ந்து கவனித்தார்.
‘நாம் பிறந்தது முதல் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.... யாருடன்... ஆத்மா பேசுகிறதா....நான் என்ற தன் முனைப்பின் வெளிப்பாடா.. சிந்தனை மனதுக்குள் சொல்லாகிறதா.... அதுவும் தாய் மொழியில்தான்.. நான் தமிழில் மனதுக்குள் பேசறேன்... அமெரிக்கா போனாலும் தமிழில்தான் அந்த உள்ளார்ந்த உரையாடல் நடக்கும். அதுபோல் ஒரு ஜப்பானியர் ஜப்பானிய மொழி மூலம்தான் பேசுவார் மனதுடன். அந்த மனம்தான் எங்கே இருக்கு?’
மறுபடி, "என்னங்க தூக்கத்தில் உளறுறீங்க...ஜப்பான் சீனான்னு?"
‘ஓ...மைண்ட் வாய்ஸ்ன்னு சத்தமா பேசிட்டனோ...’ வேலையில்லாப் பட்டதாரி தனுஷ், விவேக்கிடம் பேசும் காமெடி நினைவுக்கு வர, பலமாய்ச் சிரித்தார் குப்புசாமி.
"என்ன ஆச்சு உங்களுக்கு... தானா சிரிக்கறீங்க... டாக்டரிடம் போய்க் காட்டலாமா?" என்றாள் கமலா.