இரவில் கொசுக்கள் தொல்லையா? இயற்கையான முறையில் விரட்டுவது எப்படி!

கொசுத் தொல்லை நீங்க இயற்கை வழிமுறைகள் மற்றும் மூலிகை கொசு விரட்டி தயாரிப்பு முறை
கொசுக்கள் | Mosquito
கொசுக்கள் | MosquitoImage credit: Gemini AI
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on
MM strip
MM strip

கொசுக்கள் வாசனை, பார்வை, வெப்பம் மூலமாக மனிதர்களை இலக்காகக் கொண்டு ரத்தம் உறிஞ்சும் விதம், குழந்தைகள் மற்றும் பெண்களை அதிகம் கடிக்கும் காரணங்கள், ‘ஓ’ வகை இரத்தமுள்ளவர்களின் அபாயம், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் அவை சுறுசுறுப்பாக இரை தேடும் தன்மை, சுற்றுச்சூழல் சீர் கேட்கும் போது கொசுக்கள் பெருகி பல நோய்களை பரப்பும் சூழல் ஆகியவை விரிவாக கூறப்படுகின்றன.

இந்தியாவின் ஆபத்தான உயிரினங்களில் மூன்றாம் இடத்தில் இருப்பது 'கொசு'. இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 10,000 பேர் இறந்து போகிறார்கள் என்கிறது புள்ளி விவரங்கள். மெல்லிய உடல், ஒரு ஜோடி இறக்கைகள், மூன்று ஜோடி நீண்ட கால்கள் மற்றும் துளையிடும் குழல் போன்ற வாய் உறுப்பைக் கொண்டுள்ள குலிசிடே (Culicidae) குடும்பத்தைச் சேர்ந்த சிறிய பூச்சியே 'கொசு'. ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீசிய மொழிகளில் 'கொசு' (Mosquito) என்றால் 'சிறிய ஈ' என்று பொருள்.

கொசுக்கள் தமது உணவுகளை சாமர்த்தியமாக தேடிப் பிடிக்கின்றன.

கொசுக்கள் உணவைத் தேடிச் செல்லும் போது வாசனையை நுகர்தல், நேரடியாக பார்த்தல், பின்னர் இறுதியாக வெப்பத்தை உணர்தல் ஆகிய மூன்று நடைமுறைகளை வரிசையாக பின்பற்றுகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உயிரினங்கள் வெளியிடும் மூச்சுக் காற்றிலிருந்து வரும் கார்பன் டை ஆக்சைடு நுகரும் கொசுக்கள், முதலில் அந்த இடத்தை தேடிச் செல்லும். 50 மீட்டர் தூரத்திற்குள் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடை நுகரும் ஆற்றல் கொசுக்களுக்கு உண்டு என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.வாசனையை நுகர்ந்து அருகில் செல்லும் கொசுக்கள்.

இதையும் படியுங்கள்:
பிரசவித்த பெண்கள் தலைக்கு குளித்ததும் சாம்பிராணி பயன்படுத்துவது ஏன்?
கொசுக்கள் | Mosquito

அங்கு 5 முதல் 15 மீட்டர் தூரத்திற்குள் தங்களின் உணவு கிடைக்கக்கூடிய இடங்களை நேரடியாகப் பார்த்து உறுதி செய்து கொள்கின்றன. அதன் பின்னர் இங்கு தான் உணவை உறிஞ்ச வேண்டும் என்று உறுதி செய்து கொண்ட இடத்திற்கு ஒரு மீட்டர் தூரத்திற்கு சென்று அங்கிருந்து வரும் வெப்பத்தையும் உணர்ந்து அதை உறுதி செய்து கொண்டு பின் ரத்தத்தை உறிஞ்சும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மனிதர்கள் அனைவரையும் கொசுக்கள் ஒன்று போல் கடிப்பதில்லை. கொசுக்களின் உறிஞ்சும் பகுதியை 'ரங்' என்கிறார்கள்.

குழந்தைகளின் சருமம் மிருதுவாக இருப்பதால், ரங் என்ற பகுதியை எளிதாக பதித்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. ஆண்களை விட பெண்களின் சருமம் மிருதுவாக இருப்பதால், பெண்களை கொசுக்கள் அதிகம் கடிக்கின்றன. சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகளவில் இருப்பதால் அவர்களை கொசுக்கள் நன்றாக கடிக்கும்.

கொசுக்கள் சிலரை அதிகமாக கடிக்கும், சிலரை மிகக் குறைவாகவே கடிக்கும். மனிதர்களின் இரத்த வகை, உடல் வெப்பநிலை, வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு, உடலில் இருந்து வெளிப்படும் கொசுக்களை ஈர்க்கும் ஒருவகையான வாசனையின் அளவு போன்றவற்றைப் பொருத்து கொசுக்கள் தனது இலக்கை தீர்மானிக்கின்றன. ‘ஓ’ வகை இரத்தமுள்ளவர்களை மற்ற இரத்த வகைகளைவிட கொசுக்கள் அதிகம் கடிக்கும். எந்த இரத்த வகையாக இருந்தாலும், உடல் வாசனை மற்றும் உடல் வெப்பம் அதிகமிருப்பவர்களையும் கொசுக்கள் கடிக்கும். பெண்கள் கருவுற்றிருக்கும் போது அதிக கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுவதால், அவர்களை அதிகம் கடிக்கும்.

அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையும் மாலை 4 மணி முதல் 6 வரையும் கொசுக்கள் சுறுசுறுப்பாக இரை தேடும் நேரம் அந்த நேரத்தில் வீட்டில் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைத்திருந்தால் கொசுக்கள் கடியிலிருந்து தப்பிக்கலாம்.

கொசுக்கள் |Mosquito
கொசுக்கள் | Mosquito

சுற்றுச்சூழல் சீர் கேட்டினால் கொசுக்கள் பெருகுகின்றன. அதனால் கொசுக்கள் மலேரியா, டெங்கு, யானைக்கால் போன்ற வியாதிகளை உருவாக்குகிறது. கொசுக்கள் கடியிலிருந்து தப்பிக்க கொசு விரட்டிகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதனால் பல உடல் நலக் குறைவு ஏற்படுகிறது என்கிறார்கள். இதனை தவிர்க்க இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் மூலிகை சாறுகள் கொண்ட கொசுவிரட்டிகளை பயன்படுத்தி வரலாம்.

கற்பூரவள்ளி இலையையும், சோற்றுக் கற்றாழையையும் சம அளவில் சேர்த்து மிக்ஸியில் போட்டு மாவு போல அரைத்து, அவற்றை நைலான் வடிகட்டியில் வடிகட்டினால் எண்ணெய் போன்ற திரவம் கிடைக்கும். இந்த திரவத்தில் ஊதுபத்திகளை அரைமணி நேரம் ஊற வைத்து, வெயிலில் காய வைத்து இரவு நேரங்களில் பயன்படுத்தி வர கொசுக்களின் கடியிலிருந்து தப்பிக்கலாம். ஒரு ஊதுபத்தி ஒன்றரை மணி நேரம் எரியும்.

கொசு விரட்டும் ஆல் அவுட் பாட்டிலில் உள்ள கார்பன் குச்சி மீது இந்த மூலிகை சாற்றை 5 சொட்டுகள் விட்டு சுவிட்ச் ஆன் செய்தால் கொசுக்கள் கடியிலிருந்து தப்பிக்கலாம். இது எட்டு மணி நேரம் வேலை செய்யும். இது தவிர இந்த மூலிகை சாற்றை ஸ்பிரே பாட்டிலில் அடைத்து வீட்டு சுவர்களில் 'ஸ்பிரே' செய்தால் இரண்டு நாட்கள் கொசுக்கள் வராது.

வீட்டில் கொசுக்களை இயற்கையாகவே விரட்ட சில தாவரங்கள் உள்ளன. இதை வீட்டிற்குள் வளர்க்கலாம். கொசுக்களை விரட்டும் இயற்கை தாவரங்களின் வலுவான வாசனை கொசுக்களை அந்த இடத்திலேயே இருக்க விடாது. மீறி இருந்தால் கொசுக்கள் மயங்கி விடும். இதற்கு பயந்து கொசுக்கள் அந்த இடத்திற்கு நெருங்காது. அப்படியான தாவரங்கள்..

லெமன் கிராஸ்: இந்த புற்களில் இருந்து வரும் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது. இதனால் இந்த செடிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் வராது.

இதையும் படியுங்கள்:
The Layers of Life: சிசேரியன் அறுவை சிகிச்சையை குறிக்கும் 7 அடுக்குகளை கொண்ட கவுன்!
கொசுக்கள் | Mosquito

லாவெண்டர்: லாவெண்டரில் ஒரு இயற்கையான வாசனை உள்ளது. இதனை வாசனை திரவியங்களிலும் பயன்படுத்துவார்கள். இந்த வாசனை கொசுக்களை மயங்க செய்யும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.

கதவுகள் மற்றும் உள் முற்றங்களுக்கு அருகிலுள்ள தொட்டிகளில் இவை செழித்து வளரும். வீட்டில் அதிக கொசுத்தொல்லை இருந்தால் இந்த செடியை வளர்ப்பது நல்லது.

துளசி: குறிப்பாக எலுமிச்சை துளசி அல்லது சுண்ணாம்பு துளசி வகைகள் ஒரு வலுவான நறுமணத்தை வெளியிடுகிறது. இந்தநறுமணம் கொசுக்களின் எதிரியாகும். இந்த செடிகளை அதிகமான கொசுத்தொல்லை இருக்கும் வீட்டின் நுழைவாயில்களுக்கு அருகில் வெயில் நிறைந்த இடங்களில் வைப்பது நல்லது.

சாமந்திப்பூக்கள்: சாமந்தி பூக்களில் பைரெத்ரம் என்ற இயற்கை பூச்சிக்கொல்லி உள்ளது. வீட்டின் நுழைவாயில்கள் அல்லது உட்காரும் பகுதிகளுக்கு அருகில் இதை நட்டால் கொசுத்தொல்லை இருக்காது. இது கொசுக்களை மட்டுமல்ல மற்றைய பூச்சி இனங்களையும் விரட்டுகிறது. இதனால் வீட்டில் பூச்சி கொசுக்களின் தொல்லை இருக்காது.

நச்சுத்தன்மையற்ற மாற்று வழிமுறைகளைக் கற்றுக்கொள்வதன் மூலமாக, உங்கள் இல்லத்தை எப்போதும் நறுமணம் நிறைந்த பாதுகாப்பான பகுதியாக மாற்றிட முடியும்.

logo
Kalki Online
kalkionline.com