
தோல்வி வரும்போது அதோடு சேர்ந்து ஒருவித வருத்தமும் நம்மை தொத்திக்கொள்ளும். ஆனால், அதே தோல்வி தொடர்ந்துகொண்டே இருந்தால் சிலர் அதை சகஜமாக எடுத்துக்கொள்ள பழகிடுவார்கள். சரி, அவர்களுக்குப் பழகிவிட்டது. அவர்களின் நலம் விரும்பி (Well wishers) களுக்கு?
என்னென்ன தாக்கங்களை இந்த நலம் விரும்பிகள் எதிர்கொள்கிறார்கள்? தொடங்கும் எல்லா காரியத்திலும் இழப்பு, தோல்வி என்று காணும் நபருக்கு அந்நிலை தொடர்ந்து கொண்டிருந்தால், இதை ஒரு பழக்கப்பட்ட விஷயமாகவே அவர்களுக்குத் தோன்ற வைக்கும். ஆனால், அதுதான் அவர்களைச் சுற்றியுள்ள நலம் விரும்பிகளின் உணர்ச்சி சூழலை நுட்பமாகப் பாதிக்கிறது.
இந்த ஆதரவான நபர்கள் அவர்களின் குடும்பத்தினராகவோ, நெருங்கிய நண்பர்களாகவோ, வாழ்க்கை வழிகாட்டிகளாக இருந்தாலும் சரி, முதலில் தனக்குப் பிடித்த நபர் சந்திக்கும் தோல்வியை முடிந்தவரை சகித்துக்கொண்டு உள்வாங்கிக் கொள்கிறார்கள். அதுவே மீண்டும் மீண்டும் அந்த நிகழ்வு தொடரும்போது அவர்களின் நம்பிக்கையைக் குறைத்து விரக்தியை வரவைக்கலாம்.
‘நாம் செய்த உதவிக்கு பலனில்லையே’ என்று ஒருவித குற்ற உணர்வைத் தூண்டலாம் (induce a quiet guilt). குறிப்பாக எந்த முன்னேற்றமோ அல்லது மாற்றத்திற்கான பாதையே தெரியவில்லை என்றால் காலப்போக்கில் அவர்களுக்கும் ஒரு சோர்வை வரவைக்கும்; பின் அவர்களுடன் இருக்கும் உறவுகள் இடையே இறுக்கமும் உண்டாகலாம்.
நலம் விரும்பிகள் அவர்களுக்குப் பிடித்த ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து சம்பவங்களிலும் முதல் ஆளாய் வந்து நிற்பார்கள். அப்படிப்பட்ட நபர் தொடர்ந்து தோல்வியடையும் போது பொருள் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் ஒருவித ஏற்றத்தாழ்வை அவர்களுக்குள் உருவாக்குகிறது. இது கவலையாக மாறி அவர்களின் அன்றாட வாழ்விலும் குழப்பத்தை அதிகரிக்கலாம். இந்த நிலைமை அவர்களுக்கு எல்லாவற்றிலும் வெறுப்பை வரத்தூண்டும்.
தோல்வியில் இருப்பவர் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? நலம் விரும்பிகளுக்கு இதனால் ஏற்படும் உணர்ச்சிப்பூர்வமான பாதிப்பை சம்மந்தப்பட்டவர்கள் உணரும்போது அவர்களுக்குள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். முதலில் இது அவர்களின் சுய பரிசோதனைக்கு அழைப்பு விடுக்கிறது. அதோடு ‘வெற்றி’ என்பது உண்மையில் என்ன அர்த்தம் என்பதைப் பற்றியும் அறிய அவர்களைப் பயணிக்க வைக்கிறது.
தனிப்பட்ட ஆதாயத்திற்காக மட்டுமல்ல, கடினமான காலங்களில் நம்மோடு இணைந்து பயணிக்கும் உறவுகளின் நலனைப் பாதுகாப்பது பற்றி யோசிப்பதுகூட தோல்வியிலிருந்து ஒருவரை ஓர் உறுதியான வெற்றி மனப்பான்மைக்குக் கொண்டு செல்லும்.
வெற்றி என்று வரும்போது ஒருவர் எப்படி அந்தச் சந்தோஷத்தைத் தனக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்துகொள்கிறாரோ அதேபோல் தோல்வி நேரும்போதும் ஒருவர் தன்னை சுற்றியிருக்கும் நலம் விரும்பிகளைப் பற்றி யோசித்தாலே, வரும் எல்லா தடைகளையும் வென்று வெற்றிக்காண முடியும்.