

சின்னக்கருப்பன் சாகும் தருவாயில் கிடந்தார். கட்டிலில் படுக்கப்போட்டு இரண்டு மாதங்கள் ஒடிவிட்டன. எல்லாமே கட்டிலோடேயே.
அவரது மகன் உத்தமன்தான் இடுப்புத்துணியை மாற்றுவான். மாற்றிய கொஞ்ச நேரத்திலேயே இடுப்புத் துணியில் ஈரமும் அழுக்குமாகிவிடும்.
ஒருநாளைக்கு ஒருமுறைத்தான் துடைத்துவிடுவான் உத்தமன். மேல்தோல் மிகவும் மெலிதாகி, துடைத்து விடும்போது மேற்தோல் உரித்துக்கொண்டு வந்துவிடக் கூடாதென்பதால்.
காலையில் அரை இட்லி. மதியம் தயிர்சோறு இரண்டு கவளம். ராத்திரி எதுவுமே தருவதில்லை.
ஒவ்வொரு சமயம், அவர் குறைவாக உட்கொள்ளுவது கூட ஒரு வகையில் நல்லதுதான் என்று தோன்றும் அவனுக்கு. இல்லையென்றால் இடுப்புத் துணியை அடிக்கடி மாற்றவேண்டி வருமே. யார் பராமரிப்பது...?
அவரைப் பார்க்க வருபவர்கள் அவர் மேல் இரக்கப்பட்டு தாங்களாகவே இட்லி, தோசை என்று ஏதாவது செய்து எடுத்துக்கொண்டு வருவார்கள். ஒருசிலர் அவருக்கு என்ன தேவை என்று முன்னதாகவே கேட்டு, அதை வீட்டில் செய்து எடுத்து வருவார்கள். அவருக்குப் பிடித்ததைக் கேட்டு, இவனிடமே செய்து கொடுக்கச் சொல்லுபவர்களும் உண்டு.