படவுங் பெண்கள் படும் பாடு! இது என்ன கொடுமை?

Padaung Tribe Women
Padaung Tribe Women

வடமேற்கு தாய்லாந்து மற்றும் தென்கிழக்கு மியான்மர் மலைப்பகுதிகளில் வசிக்கும் படவுங் (அல்லது கயான்) பழங்குடியினப் பெண்களிடம் (Padaung Tribe Women) மிக நீளமான மனிதக் கழுத்து காணப்படுகிறது. உலகச் சாதனைப் புத்தகமான கின்னஸ் புத்தகத்தில், “உலகில் நீளமான கழுத்துகளை உடைய பெண்கள் - படவுங் பெண்கள்” என்ற சாதனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

படவுங் பெண்களின் கழுத்து மற்றும் தோள்களின் வடிவத்தை மாற்றும் வகையில் அவர்களது கழுத்தில் கனமான பித்தளை வளையங்கள் அணிவிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. ஓட்சுமா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்த வளையங்கள் அணிந்த பெண்களின் மேல் தாடையிலிருந்து கீழ் தாடை வரையிலான நீளம் அதிகரிதக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

படவுங் பெண்களுக்கு 5 முதல் 9 வயது வரையிலான காலத்தில் முதல் பித்தளை வளையச் சுருள்கள் பொருத்தப்படுகின்றன. தோராயமாக 1.5 செமீ (0.6 அங்குலம்) விட்டம் கொண்ட பித்தளைக் கம்பியில் இருந்து இவ்வளையங்கள் செய்யப்பட்டு அணிவிக்கப்படுகின்றன. அவர்கள் வளரும் போது, மேலும் சில சுருள்கள் கூடுதலாகச் சேர்க்கப்படுகின்றன. படவுங் பெண்களுக்கு 45 வயதாகும் போது, அவர்களது கழுத்தில் சுமார் 15 கிலோ எடையுடன் கூடிய 32 பித்தளை வளையச் சுருள்கள் இடம் பெற்றிருக்கும்.

பெண்கள் அணியும் இவ்வளையங்கள் விலா எலும்பில் அழுத்துவதன் மூலம் தசைகளைச் சிதைக்கிறது, கழுத்துப்பட்டி எலும்பு மற்றும் விலா எலும்புகளை வளைத்து, கீழ் தாடையை அழுத்துகிறது. அதன் மூலம் கழுத்தின் நீளம் அதிகரிக்கிறது.

இந்த நடைமுறையால், அவர்களுக்குச் சுவாசம் மற்றும் இருதய பிரச்சனைகள் அதிக அளவில் வருகின்றன. பல் வளர்ச்சியும் சிதைகிறது. இவர்களின் ஆயுட்காலமும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து போய் விடுகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இவ்வளையங்களை நீண்ட காலமாக அணிந்த பெண்கள், தற்போது வளையத்தை அகற்றி விட முடியாது. அப்படி அகற்றினால், அவர்களது தலையின் எடையைக் கூட அவர்களால் தாங்க முடியாமல் போவதுடன் கழுத்தும் சாய்ந்து போய்விடும்.

சாதாரண பெண்களை விட, இவ்வளையம் அணிந்த பெண்களின் மார்பெலும்புக்கு மேலுள்ள பள்ளம் முதல் கீழ் தாடை வரையிலான நீளம் சுமார் 8 முதல் 10 செ.மீ., வரி அதிகரிக்கிறது. கழுத்தின் நீளம் அதிகமாக இருந்தாலும், இவ்வளையம் அணிந்த பெண்களின் உயரம் சாதாரண பெண்களைப் போலவே இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பெற்ற ஆய்வில் 19.7 செ.மீ கழுத்து அளவிடப்பட்ட பெண்ணின் உயரம் 165 செ.மீ (5 அடி 4 அங்குலம்) மட்டுமே இருந்தது.

இதையும் படியுங்கள்:
இரக்கம் என்பது நீ உனக்காகச் சேர்த்துவைக்கும் சொத்து! எப்படி?
Padaung Tribe Women

இவ்வினப் பெண்களின் கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் பித்தளை வளையங்களை, கழுத்தைச் சுத்தம் செய்யும் போது மட்டும் சிறிது நேரம் கழற்றி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. மற்ற வேளைகளில் அவ்வளையங்களை அகற்ற அனுமதிக்கப்படுவதில்லை.

இவ்வினப் பெண்கள் கழுத்தில் வளையங்கள் அணிவதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவ்வளையங்கள் அடிமை வியாபாரிகளிடமிருந்து பெண்களைக் காப்பாற்றுவதற்காக, முதலில் அணிவிக்கப்பட்டது என்று சிலர் சொல்கின்றனர். பெண் குழந்தைகளைப் புலிகள் தாக்கும் போது, அதனிடமிருந்து பாதுகாக்க இவ்வளையங்கள் உதவுகின்றன என்று சிலர் சொல்கின்றனர். மற்ற பழங்குடியின ஆண்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவே இவ்வளையங்கள் அணிவிக்கப்படுவதாகவும் சிலர் சொல்கின்றனர்.

நகரமயமாக்கல் செயல்பாடுகள் அதிகரித்து வரும் இவ்வேளையில், இவ்வினத்து இளம் பெண்கள் பலர் கழுத்தில் வளையங்கள் அணிவதை எதிர்ப்பதுடன் அணிய முடியாது என்று மறுக்கவும் தொடங்கியிருக்கின்றனர். இதனால், வருங்காலங்களில் இப்பெண்களிடம் கழுத்தில் வளையம் அணிவிக்கும் வழக்கம் நின்று போவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com