
காஷ்மீரில் உள்ள மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் நாடு முழுவதும் உள்ள இந்தியர்களான நமது மனங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதில் இன்ப சுற்றுலா சென்ற நிலையில் தங்கள் இன்னுயிரை பறிகொடுத்தவர்கள் 26 அப்பாவிகள்... அவர்களில் திருமணமான 6 நாட்களில் தேனிலவு சென்ற கடற்படை அதிகாரி, தன் இளம் மனைவியின் கண்ணெதிரே சுட்டுக்கொள்ளப்பட்ட பரிதாபம், திருமண நாளைக் கொண்டாடிய தொழிலதிபரின் முடிவு, மனைவி கண் முன் பலியான இளம் தொழிலதிபர், ஈஸ்டர் கொண்டாட சென்றவர் துப்பாக்கி சூட்டில் பலியான பரிதாபம், கேரளா சுற்றுலா பிரியர் மரணம், குடும்பத்தினருடன் வசிக்க பல மாதங்களாக பணம் சேர்த்த குடும்ப தலைவரின் மறைவு என பல மனம் கலங்க வைக்கும் மரணங்கள் நம்மிடையே துயரை விதைத்து சென்றுள்ளன.
மரணம் என்பது எக்காலத்திலும் விதி இருந்தால் எந்த உருவத்திலும் வரலாம். இவர்களுக்கு தீவிரவாதிகளின் உருவில் வந்துள்ளது.
இந்த பயங்கர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்ட தடை செய்யப்பட்ட லஸ்கர் - இ - தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்று உள்ளதாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் ரெசிஸ்டன்ஸ் பிரண்டின் உறுப்பினர்கள் என்றும் செய்திகள் வந்துள்ளன.
இந்த நிலையில் இந்த நாட்டு மக்களான நம் பொறுப்பு என்ன?
எந்த செய்தி, எந்த தகவல் என்றாலும் வெகு வேகமாக இணையதளங்கள் மூலம் உலகின் எல்லா மூலைக்கும் பரவும். இந்த தாக்குதல் குறித்தான பல்வேறு கருத்துக்களும் விமர்சனங்களும் வலம் வந்தபடி உள்ளன.
பொதுவாக, நம் குடும்பத்தில் ஒரு மரணம் என்றாலே பல்வேறு கருத்துக்களை உறவுகளே பேசுவார்கள் என்பது அறிந்ததுதான். இது நம் நாட்டில் நடந்த சம்பவம், அதிலும் நம் நாட்டுக்குள் எதிரிகள் நுழைந்து நம் மக்களை அழித்துச் சென்ற இந்த மாபெரும் கொடூர நிகழ்வில், மக்களின் ஆறுதலான கருத்துகளுடன், பல்வேறு விவாதங்களும் பலவித முரண்பாடான கருத்துகளும் இணைய பக்கங்களில் வருகின்றன.
இதில் துயரை ஏற்றுக் கொள்ளும் சக மனிதரின் பரிவு போன்ற கருத்துக்களும் அதிகம் எவராலும் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் எதிர்மறையான கருத்துக்கள் நிச்சயம் அதிகம் கவனிக்கப்பட்டு பேசப்படுவதாக உள்ளன. மற்ற மனிதர்களிடையே வேறுபட்டு தெரிய வேண்டும், அதிக புகழ் பெற வேண்டும், நிறைய விருப்பக்குறிகள் வாங்கி கவனம் ஈர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் பல்வேறு விதமான மனசாட்சியற்ற தகாத கருத்துகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.
ஒரு முகநூல் பதிவில் "அவர்களுக்கு பண கொழுப்பு காஷ்மீர் செல்ல வேண்டுமா சுற்றுலாவுக்கு" என்னும் ரீதியில் ஒரு கருத்து வந்தது.
இதையெல்லாம் தாண்டி இந்த கொடூர நிகழ்வை அரசியலாக்கிப் பார்க்கும் அநாகரீகப் போக்கும் அதற்கான ஆதாரங்களற்ற பேச்சும் பலருக்கும் வேடிக்கையான பொழுதுபோக்காக உள்ளது; நம் மனதை பிழிகிறது.
திருமணமான 6 நாட்களில் கண் முன்னே இறந்து கிடக்கும் கணவருடன் தன் அத்தனை சுகங்களையும் புதைத்து தீராத வேதனையை சுமந்து அமர்ந்திருக்கும் இளம்பெண்ணின் புகைப்படம் மனதை வதைக்கிறது.
இணையதள வாசிகளுக்கு இது ஒரு வேண்டுகோள்...
தயவுசெய்து இது போன்ற வேதனையான நேரங்களில் முடிந்தால் சக மனிதராக ஆறுதல் அளிக்கப் பார்ப்போம். அல்லது வார்த்தைகளில் நாகரீகம் கொண்டு மனசாட்சியுடன் பதிவுகளை எழுதுவோம். இல்லை, அதுவும் வேண்டாம் ... அமைதி காத்து பிரார்த்திப்போம்.