பட்டு புடவையை பல வருடம் புதுசு மாதிரி வைக்க: சரியா மடிச்சு வைக்கும் முறை இதோ!

உங்கள் விலையுயர்ந்த பட்டுப் புடவைகளை பல ஆண்டுகள் புதுசு போல பாதுகாக்க உதவும் எளிய மற்றும் பயனுள்ள பராமரிப்பு டிப்ஸ் இதோ.
பட்டுப் புடவை பராமரிப்பு | a woman with her silk saree
பட்டுப் புடவை பராமரிப்பு | silk sareeImage credit: Chatgpt AI
Updated on
MM strip
MM strip

காலங்கள் மாறினாலும் பெண்களின் பேரழகையும், கம்பீரத்தையும் பறைசாற்றும் ஒரே உன்னத ஆடை – பட்டுப் புடவை மட்டுமே! தவறான மடிப்பு முறைகளாலும், சிறு கவனக்குறைவாலும் உங்கள் பிரியமான பட்டுப் புடவைகள் பாழாகிவிடாமல் காப்பது எப்படி?

உங்கள் பொக்கிஷமான பட்டுப் புடவைகளைத் தலைமுறைகள் தாண்டியும் பளபளப்பு குறையாமல் பத்திரமாகப் பராமரிக்க உதவும் 9 எளிய மற்றும் அருமையான பட்டுப் புடவை பராமரிப்பு வழிமுறைகள் இதோ உங்களுக்காக... தொடர்ந்து படியுங்கள்!

நவீன கால டிசைனர் சாரி மற்றும் ஜீன்ஸ் போன்ற உடைகள் உபயோகத்திற்கு வரும் முன், பழங்காலத்திலிருந்து பெண்கள் பட்டினாலான புடவைகளையே விரும்பி அணிந்து வந்துள்ளனர்.

பட்டாடை என்பது அழகு மட்டும் தருவதில்லை ஆடம்பரத்தையும் பறைசாற்றுவதாக இருந்துள்ளது.

பருத்திப் புடவைகளுக்கு செலவிடுவதை விட பட்டுப் புடவைகள் வாங்குவதற்கு செலவு கொஞ்சம் அதிகமாகவே ஆகும். ஏனென்றால், பட்டுப் புடவைகளில் தங்கம் மற்றும் வெள்ளி இழைகளால் பூக்கள், மயில், கோபுரம் போன்ற உருவங்கள் சேர்த்து நெய்யப்பட்டிருப்பதும், உண்மையான (original) பட்டு நூல் இழைகளை உற்பத்தி செய்வதில் உள்ள சிரமங்களுமே ஆகும்.

இவ்வகையில் உற்பத்தி செய்யப்பட்டு, கடைகளில் விற்பனைக்கு வரும் புடவைகளை அதிக விலை கொடுத்து வாங்கி அணியும் பெண்கள், அவற்றை நீண்ட கால பயன்பாட்டிற்கு உதவுமாறு பத்திரமாக வைத்துப் பராமரித்து வருவது அவசியமாகிறது. அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய வழி முறைகளை இப்பதிவில் பார்க்கலாம். 

பட்டுப்புடவை பராமரிப்பு முறையில் செய்ய வேண்டிவை:

1. பட்டுப் புடவைகளை பீரோ அல்லது அலமாரிகளில் ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கி வைப்பது அவற்றின் பாதுகாப்பிற்கு நல்லதல்ல. தனித்தனியாக கொக்கியுடன் கூடிய கோட் ஹேங்கர் (coat hanger) களில் மாட்டி தொங்க விடுவது நல்லது. 

இதையும் படியுங்கள்:
மாதாந்திர மின் கட்டணம் குறையணுமா? அப்ப உடனே உங்க பிரிட்ஜ்ல இத மாத்துங்க!
பட்டுப் புடவை பராமரிப்பு | a woman with her silk saree

2. அப்படி ஹேங்கரில் மாட்டும்போது புடவையின் மேல் பக்கம் உட்புறம் இருக்குமாறு (upside down) மடித்து போட்டு வைக்கலாம். இதனால் தூசி ஏதாவது படியுமானால், அது புடவையின் உட்புறத்தில் தங்கி, மேல்புற பள பளப்பு குறையாமல் பாதுகாக்க உதவும்.

3. பட்டுப் புடவைகளை நீண்ட நாட்கள் ஒரே மடிப்பில் போட்டு வைத்து, மறந்து விடாமல், அவ்வப்போது அதை எடுத்து வெவ்வேறு கோணங்களில் மடித்து ஹேங்கரில் தொங்க விடுவது அவசியம்.

இப்படி செய்வதால், முதலில் மடித்து வைத்த மடிப்பில் நூல் இழைகள் இற்றுப்போய் ஆங்காங்கே கிழிந்து போன தோற்றம் தருவதைத் தவிர்க்க முடியும்.

4. புதிதாக வாங்கிய பட்டுப் புடவையை ஒரு முறை உடுத்தியதுமே, தண்ணீரில் போட்டு துவைத்தெடுக்க வேண்டாம். அப்படி செய்யும்போது, ஒரு வேளை அதன் சாயம் கலைந்து திட்டுத் திட்டாய் புடவையின் பிற பகுதியில் ஒட்டிக் கொள்ளக் கூடும்.

பட்டுப் புடவை பராமரிப்பு | silk saree
பட்டுப் புடவை பராமரிப்பு | silk sareeImage credit: Gemini AI

அந்நிலையில் அந்தப் புடவையை அடுத்த முறை கட்டிகொள்ளவே முடியாமல் போய்விடும். அதனால், ஒரு முறை கட்டி அவிழ்த்த புடவையை, அதில் படிந்துள்ள வியர்வை காயும் வரை ஃபேன் காற்றில் உலர்த்தி எடுத்து வைத்து விடலாம். 

5. திருமணம் போன்ற விழாக்களில் உணவருந்தும்போது கூடிய வரை புடவையில் உணவுப் பொருள் சிதறி விழாமல் பார்த்துக் கொள்வது நலம். அப்படியும் சிறிது கூட்டோ பொரியலோ பட்டுவிட்டால், வீட்டிற்கு வந்ததும், அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் துளியூண்டு வாஷிங் பவுடர் வைத்து லேசா பிரஷ்பண்ணி, ஒரு கப் தண்ணீரில் முக்கி எடுக்க கறை மறைந்து விடும்.

பின் ஃபேன் காற்றில் உலர்த்தி, அயன் செய்து விட்டால் பள பளப்பு மீண்டும் திரும்பி விடும். மேக்கப் கறை போன்ற விடாப்பிடி கறை இருக்குமானால் silk specialist dry cleaner ஐ அணுகலாம்.

6. பட்டுப் புடவையை பல முறை அணிந்து விட்ட பின் அதில் அழுக்கு சேர்ந்திருக்கும் என்று தோன்றினால், சோப் காய்களின் கொட்டைகளை நீக்கி அவற்றை வெது வெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து அதில் பட்டுப் புடவையை நனைத்தெடுத்து சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
படுத்த படுக்கை, 70% பார்வை இழப்பு: தாயின் கைநோட்ஸால் ஐ.ஐ.டி வென்ற சாதனை மாணவன்!
பட்டுப் புடவை பராமரிப்பு | a woman with her silk saree

7. பட்டுப் புடவையை ஒரு போதும் வெயிலில் உலர்த்துவது கூடாது. எப்பவும் துவைத்த பின் நிழலில், கொடியில் ஒற்றையாக பிரித்துப்போட்டு காய வைப்பது நலம். அதே போல் வீட்டிற்குள் எரியும் அதிக சக்தி வாய்ந்த டியூப் லைட் வெளிச்சம் பட்டுப் புடவை மீது படுவதும் நல்லதல்ல. அப்படி ஆகும்போது புடவையின் நிறம் நிச்சயம் மங்கிவிடும்.

8. பட்டுப் புடவையை மெல்லிய வெள்ளை நிற காட்டன் துணியில் சுற்றி வைப்பதும் புடவைக்கு பாதுகாப்பு  அளிக்கும்.

9. பட்டு சேலையை இஸ்திரி செய்யும் போது அதன் மீது ஒரு மெல்லிய வெள்ளை நிற காட்டன் துணியை விரித்து இஸ்திரி செய்வதும் புடவைக்கு பாதுகாப்பு தரும்.

மேலே கூறிய முறைகளில் உங்கள் பட்டுப் புடவைகளை  பராமரித்து வந்தால் அவை புதுப் பொலிவு மாறாமல் நீண்ட நாள் உழைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் விலையுயர்ந்த பட்டுப் புடவைகள் எப்போதும் வாங்கிய நாளிலிருந்து புதுப்பொலிவுடன் மின்ன, இந்த எளிய பட்டுப் புடவை பராமரிப்பு முறைகள் உங்களுக்கு முழுமையான பலனைத் தரும். இதன் மூலம் புடவைகளின் ஆயுள் நீடிப்பதோடு, உங்களது பொன்னான பணமும் பல ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com