
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
இது கவிஞர் கண்ணதாசனின் மயக்கமா கலக்கமா என்ற பாடலில் வரும் வரிகள். இந்தப் பாட்டைக் கேட்டு விட்டு பாடல் வாய்ப்பு கிடைக்காது ஊருக்கே திரும்பி விடலாம் என தீர்மானித்த கவிஞர் வாலி அவர்களை சென்னையிலேயே நிறுத்தி வைத்த பாடல். தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்.
சோகம் வரும் பொழுது சிறு குழந்தையைப் பார்த்தால் சோகம் காணாமல் போய் விடும். அது போல நாம் கவலையாக இருக்கும் பொழுது கார்ட்டுன் படங்கள், நகைச்சுவை காட்சிகள் ஆகியவற்றை பார்த்தால் மனம் அமைதி பெறும் கவலைகள் பறந்தோடும்.
நகைச்சுவை உணர்வு நம்முடன் இருப்பது மிகப்பெரிய வரமாகும். அந்த உணர்வினால் மற்றவர்களை எளிதில் வசப்படுத்தலாம். எந்த கடினமான சூழலையும் மிக சுலபமாக எதிர்கொள்ளலாம். அந்த வகையில் சிறந்த நகைச்சுவை நடிகர்களான திருவாளர்கள் என்.எஸ். கிருஷ்ணன், சந்திரபாபு, டணால் தங்கவேலு, நாகேஷ், வடிவேலு மற்றும் விவேக் ஆகியோர் மற்றவர்களை சிரிப்பால் சிந்திக்க வைக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.
ஒரு கூட்டத்தில் இருக்கும் அத்துணைப்பேரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். உம்மணாமூஞ்சி ஒரு ரகம், கடுகடு சிடுசிடு ஒரு ரகம், மூடி டைப் ஒரு ரகம், இவர்களுக்கிடையே தனித்து இருப்பவர்கள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். அந்த கூட்டத்தையே நகைச்சுவை திறமையால், கலகலப்பான சூழலை உருவாக்கி பிறரையும் மகிழ்வித்து தாமும் மகிழ்வார்கள்.
ஒரு சிலர் இயற்கையாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருப்பார்கள். அது அவர்களின் ராசி என்று ஜோதிட வல்லுநர்கள் கூறி உள்ளனர். ராகங்கள் பதினாறு என்பது போல ராசிகள் பன்னிரண்டு என்பது அனைவரும் அறிந்ததே! அந்த பன்னிரெண்டு ராசிகளில் நகைச்சுவை உணர்வு அதிகமுள்ள 4 ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாமே!
1. மிதுனம்
இந்த ராசிக்காரர்கள் எந்தவித முயற்சியின்றி இயல்பாகவே மற்றவர்களை சிரிக்க வைக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்கள் இருக்குமிடம் மற்றவர்களை மகிழ்ச்சிகரமான சூழலக்கு இட்டுச் செல்லும். நகைச்சுவை பண்பாளர் ஆவார்கள். அந்தளவிற்கு நகைச்சுவையில் திறமைசாலிகள்.
2. சிம்மம்.
ஐயோ! சிம்ம ராசியா? என்று அலற வேண்டாமே! சிம்ம ராசிக்கு எதிர்த்த வீட்டில் இருப்பவரை இருக்க விடாது துரத்தி விடும் என்றும் சொல்வார்கள். ஆனால், சிம்ம ராசிக்காரர்கள் தம்மைத் தாமே தாழ்த்தி கொண்டு நகைச்சுவை உணர்வால் மற்றவர்களை மகிழ்விப்பார்கள். சர்க்கஸில் வேலை செய்யும் பபூன்கள் இந்த ரகமாக இருப்பார்கள்.
3. கன்னி
இந்த ராசிக்காரர்களின் கண்கள் கூர்மையாகவும், எதையும் எளிதில் கிரகிக்க கூடிய ஆற்றல் மிக்கதாகும். தேவையான நேரத்தில் மிகச் சரியான நறுக்கான நகைச்சுவை பேச்சின் வாயிலாகவும், அறிவுக்கூர்மையாலும் மின்னக்கூடியவர்கள். இவர்களை ஒரு சிலர் மட்டுமே புரிந்து கொள்ள இயலும் (ஓ! அதான் பெண்கள் மனது ஆழும் பாடல் வந்துச்சோ)
4. தனுசு
இவர்கள் மனதில் பட்டதை உண்மையாகவும், அதை நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்துவதில் வெட்கப்பட மாட்டார்கள். இவர்களுக்கு சின்ன விஷயத்தை சிறு எறும்பை யானையைப் போல பெரிதாக்கி நகைச்சுவை ஆற்றலைப் பயன்படுத்தி அடுத்தவர்களை மகிழ்விப்பார்கள்.
அட , இதில உங்க ராசி இருக்கா ! இருந்தால் அதிர்ஷ்டசாலிதானே!