அக்காலத்தில் பூலான் தேவியை (Phoolan Devi) பற்றி தெரியாதவர்களே இல்லை எனலாம். 1963 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பத்தாம் தேதி உத்தர பிரதேசம் ஜலால் மாவட்டத்தில் மல்லா எனப்படும் படகோட்டி இனத்தில் பிறந்தார். தனது பதினோராவது வயதில் தன்னைவிட வயது மூப்பு அதிகம் உள்ள ஒருவருக்கு குடும்பத்தார் திருமணம் செய்து வைத்தனர்.
அவரது கணவரும் கணவரின் சார்ந்த உறவினர்களும் பூலான் தேவியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்த தொடங்கினார்கள். நாளுக்கு நாள் பாலியல் துன்புறுத்தல் அதிகமானது. அவர்களை தாக்கி விட்டு மூன்று நாள் சிறைவாசம் அனுபவித்தார். சிறையிலும் காவலர்கள் பாலியல் தொல்லை கொடுத்தனர்.
1979 ஆம் ஆண்டு பண்டிட் இன கொள்ளை கூட்டத்தில் சேர்ந்தாள். இவர்கள் பணம் படைத்தவர்களிடம் கொள்ளையடித்து அதை இல்லாதவர்களிடம் கொடுத்து வந்தனர். சம்பல் பள்ளத்தாக்கை தங்கள் தலைமை இடமாகக் கொண்டு ராபின்ஹூட் போன்று தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
இந்தக் கொள்ளை கூட்டத்திலும் பாபு குச்சார் மற்றும் அவரது சகாக்கள் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளானார். விக்ரம் மல்லா என்ற மற்றொரு கொள்ளைக் கூட்டத் தலைவன் இவளை கைப்பற்றி தன் ஆசை நாயகியாக வைத்துக் கொண்டார். அந்தக் கூட்டத்தில் இருந்தபடியே பல கலைகளையும் கற்றார். கம்பு, சண்டை, வாள் சண்டை, குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் கைதேர்ந்தார். இவர்கள் ஒவ்வொரு கொள்ளை முடிந்த பின்னும் அங்குள்ள துர்கா தேவியை வழிபடுவது வழக்கம்.
விக்ரம் மல்லா, பூலான் தேவியை அனுபவித்து வந்த நிலையில், எதிரி கூட்டத்தில் உள்ள ராஜபுத்திரர்கள் விக்ரம் மல்லாவை தாக்கி, பூலான் தேவியை கடத்தி சென்றனர். ராஜபுத்திரர்கள் 22 நபர்கள் பூலான் தேவியை பாலியல் ரீதியாக பல வகைகளும் துன்புறுத்தினார்கள்.
பின்னர் அந்தக் கூட்டத்திலிருந்து தப்பி விக்ரம் மல்லாவின் தம்பி உடன் சேர்ந்து ராஜபுத்திரர்களை தாக்க திட்டம் போட்டார்கள்.
ராஜபுத்திரர்கள் தலைவர்கள் ஸ்ரீராம், லாலா ராம் ஆகியோர் தலைமையில் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஒரு திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
பூலான் தேவியும் விக்ரம் தம்பியும் மாறுவேடத்தில் இந்த திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்டு ராஜபுத்திரர்கள் 22 பேரை கைது செய்து கடத்திக் கொண்டு போய் சம்பல் பள்ளத்தாக்கில் வரிசையாக நிற்க வைத்தார்கள். பஹமாய் என்ற இடத்தில் அந்த 22 நபர்களையும் பூலான் தேவி தனி ஆளாக நின்று, சுட்டு வீழ்த்தினார்.
இது அந்த நேரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் உத்திரபிரதேசத்தில் வி பி சிங் முதல்வராக இருந்தார். இந்த செயலால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. வி பி சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் போலீஸ் படை இவரை தேடி சம்பல் பள்ளத்தாக்கு சென்றது, ஆனாலும் பிடிக்க முடியவில்லை.
ஒரு வழியாக தானே சரணடைய விரும்புவதாகவும் அதற்கு சில நிபந்தனைகளையும் விதித்தார். "நான் சரண் அடைந்தால் என்னை கொல்லக்கூடாது. எட்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்க கூடாது. என் உறவினர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும். மேலும் என்னை துர்கா தேவியின் முன்பாக கைது செய்ய வேண்டும்," என்று தூது அனுப்பினார்.
இந்தக் கோரிக்கைகளை போலீசார் ஏற்று அவரை துர்கா தேவி முன்பாக கைது செய்து 48 சாட்சியங்கள் மூலம் அவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முலாயம் சிங் யாதவ் முதல்வராக பொறுப்பேற்றார்.
இவரது ஆட்சி காலத்தில் பூலான் தேவி மீது உள்ள வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் முலாயம்சிங் யாதவ் நடத்திய சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து எம்பி ஆனார். தனது எம்பி பதவி காலத்தில் ஏழைப் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பேருதவி செய்தார். குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.
2001 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியே வரும் போது எதிர்க்கட்சி சார்ந்தவர்களால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1994 ஆம் ஆண்டு இவரது பெயரால் பண்டிட் குயின் "Bandit Queen" என்ற திரைப்படம், இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு சக்கை போடு போட்டது. கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் சம்பல் பள்ளத்தாக்கில் தவிர்க்க முடியாத கொள்ளைக்காரியாக செயல்பட்டார்.