

இத்தாலியின் பைசா (PISA) நகரிலுள்ள சாய்ந்த கோபுரத்தை இரண்டாவது முறையாகவும் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது!உலகத்தின் ஒன்பது அதிசயங்களில் ஒன்றான இதைக் கட்டும்போதே, மென்மையான களிமண் தளம் காரணமாக இது சாய ஆரம்பித்ததாம்!
கி.பி 1173 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இது, சாயும் பிரச்னை காரணமாகப் பல தாமதங்களைச் சந்தித்து, கி.பி 1372 ல் தான் முடிக்கப்பட்டதாம்.
சாய்ந்த கோபுரம் 56 மீட்டர் உயரமுள்ள இந்தக் கோபுரம் 14, 500 டன் எடையுள்ளது என்று கூறப்படுகிறது. அற்புதக் கட்டிடக்கலையின் சாட்சியாக நிற்கும் இது 1990 களில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து, தற்பொழுது 3.97 டிகிரி சாய்வுடன் கம்பீரமாக நிற்கிறது.
தினந்தோறும் நிறைய சுற்றுலாப் பயணிகள் உலகெங்கும் இருந்து வந்து இதனைக் கண்டு செல்கின்றனர். இதன் உச்சியை அடைய சுமார் 295 படிக்கட்டுகளும் உள்ளன. இதனை ஒட்டி பேராலயமும், எதிரே கலையழகு மிளிரும் மண்டபமும் உள்ளன.
பெரிய மைதானத்தில் பயணியர் சாவகாசமாக அமர்ந்து ரசிக்கலாம். சாய்ந்த கோபுரத்தின் உள்ளே சென்று பார்க்கக் கட்டணம் செலுத்த வேண்டும்.
என்ட்ரன்சிலிருந்து உள்ளே நடந்து செல்ல வேண்டும். உள்ளே போகும்போது வலது கைப் பக்கத்தில் நிறைய கடைகள் உள்ளன.
சுற்றுலாத் தளங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்தும் இந்தக் கடைகளில் கிடைக்கின்றன. இருப்பினும் ஒவ்வொரு சுற்றுலாத் தளத்திற்குமென்று சில தனிச் சிறப்பான பொருட்களும் உண்டு. அப்படி இங்கு கிடைக்கும் பொருள் என்னவென்றால் மரத்தால் செய்யப்பட்ட ஆங்கில எழுத்துக்களைக் கோத்து நம் பெயரை ரயில் போல் செய்வது!நிரந்தரக் கடைகளில் அவை கிடைக்குமென்றாலும், விலை சற்றே அதிகமாக இருக்கும்.
நம்மூர் பிளாட்பாரக் கடைகளைப் போல் சாலையின் ஓரத்தில் கடை விரித்து, அந்த எழுத்துக்களைப் பரப்பிப் போட்டிருப்பார்கள். பேப்பரும் பேனாவும் வைத்திருப்பார்கள். நாம் ஆங்கில எழுத்துக்களால் நம் பெயரை எழுதிக் கொடுத்தால், ரயிலின் எஞ்சின் போன்ற அமைப்புடன் நம் பெயர் எழுத்துக்களைக் கோத்து இறுதியாக கார்ட் வேன் (Guard Van) போன்ற அமைப்புடன் செய்து கொடுப்பார்கள். பைசா நகரின் சாய்ந்த கோபுரம் நினைவாக நம் வீட்டு ஷோ கேசில் இந்த ஆங்கில எழுத்து கம்பார்ட்மெண்ட் ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கும்.
சிலர் அலங்கார மேஜையிலும் இதனை அழகாக வைத்திருப்பார்கள். ஏற்கெனவே போனபோது ஒன்றிரண்டு வாங்கி வந்திருந்ததால், எல்லோர் பெயரிலும் வாங்க வேண்டுமென்ற ஆசையில் ஒரு சாலையோரக் கடையில் விலை பேசினோம். குடும்பத்திலுள்ள நான்கைந்து பேரின் பெயருடன், நெருங்கிய உறவினர்களுக்குப் பரிசளிக்க என்று இரண்டு மூன்று பெயர்களையும் சேர்த்து ஒரு பேப்பரில் வரிசையாக எழுதிக் கொடுத்தோம்.
கடைக்காரர் தன் உதவியாளரிடம் கொடுத்து எழுத்துக்களை எண்ணச் சொல்லி விட்டு, வேறொரு கஸ்டமருடன் பேசிக் கொண்டிருந்தார். மூன்று நான்கு கஸ்டமர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
உதவியாளர் எண்ணிச் சொன்னவுடன், உரிமையாளரும் ஒரு முறை சரி பார்த்து விட்டு 104 யூரோ வருகிறதென்றும்,100 யூரோ தருமாறும் வேண்ட, அதனைக் கொடுத்துமாயிற்று!
உரிமையாளர் வேறு கஸ்டமரைப் பார்க்க, உதவியாளர் எங்கள் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் அந்தப் போலீஸ் சைரன் சத்தம் கேட்க ஆரம்பித்தது!
நம்மூரைப் போலவே சாலையில் கடை போடுவது தப்பு என்பதால், சைரன் சத்தம் கேட்டவுடனேயே சாலைக் கடைக்காரர்கள் உஷாராகித் தங்கள் பொருட்களுடன் ஓட ஆரம்பித்தார்கள்.
எங்கள் கடைக்காரரும் விரிப்பைச் சுருக்கி, விரைவாகப் பொருட்களுடன் உதவியாளர் பின் தொடர்ந்து ஓடி வர, கண நேரத்தில் என்ட்ரன்ஸ் நோக்கி ஓடி, எங்கள் கண்களிலிருந்து மறைந்து விட்டார்கள். எங்களுக்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை.
ஓடியவர்களை எங்கு போய்த் தேடுவது? அவசரப்பட்டு ஏன் பணத்தைக்கொடுத்தோமென்ற எண்ணம் சுட, அவர்களைச் சரியாக அடையாளங்கூடக் காண முடியாதே என்ற நிதர்சனம் நிழலாட, இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம் ரூபாயை அனாமத்தாக இழந்து விட்டோமே என்ற ஆதங்கம் ஒவ்வொருவர் மனதிலும் நிழலாட, மௌனம் குடி கொண்டு விட்டது. சிறிது நேரத்திற்கு யாரும் எதுவும் பேசவில்லை!
சரி! போகட்டும்! என்ற மன நிலையை மெல்ல மனதில் ஊன்றிய படி திரும்பினோம்.
அவர்கள் எங்காவது கண்ணில் படுகிறார்களா என்று பார்த்தாலும், அவர்கள் முகம் மனதில் பதியாத காரணத்தால் யாரிடமும் கேட்க முடியவில்லை. என்ட்ரசின் கூட்ட நெரிசலில் மெல்ல நகர்ந்தபோது, ஒரு நபர் எங்களை அணுகி அழைத்தார்.
அவர் கையில் நாங்கள் எழுதிக் கொடுத்த பெயர்களின் லிஸ்ட் இருந்தது. அவர் அந்த உதவியாளர்தான்! எங்களுக்குச் சைகை காட்டிவிட்டு அவர் முன்னே நடக்க, அவரைப் பின் தொடர்ந்தோம்.
ஒரு சந்தின் சற்றே மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் ஆர்டர் செய்த அத்தனை ரயில்களையும் ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி எழுத்துக்களைச் சரிபார்த்த பிறகு, அழகாகப் பேக் செய்து கொடுத்தார்கள். அவ்வளவு நல்லவர்களை அவசரப்பட்டுச் சந்தேகித்ததற்காக எங்கள் மனதே எங்களைத் திட்டித் தீர்த்தது!
அதிசயங்களின் அருகில் வாழ்பவர்களும், வணிகம் செய்வோரும் அதிசயிக்கத் தக்கவர்களாகவே இருப்பார்களோ?!
இந்த அனுபவப் பகிர்வின் மூலம், வெளிநாட்டுப் பயணங்களின் போது நிலவும் அலைச்சல்கள் மற்றும் அச்சங்களுக்கு மத்தியில், மனிதநேயம் மற்றும் நேர்மை எவ்வாறு பயணத்தை மறக்க முடியாத இனிமையான நினைவாக மாற்றுகிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.