
பொங்கலோ பொங்கலென்று
புதுப்பானையில் புத்தரிசி
பொங்கிடும் வேளையிலே
பூக்கும் உற்சாகத்துடன்
கூக்குரல் இடும்போது
குவலயமே மகிழ்வினிலே
லயித்து உயிர்த்திடுமே
நலமெங்கும் பரவிடுமே!
உணவால்தான் உயிர்ப்பறவை
ஒவ்வொருநாளும் மேலெழும்பி
சிறகை விரித்துவிடும்!
சிறப்புக்கள் செய்துவரும்!
பிறவி நீண்டிடவும்
பெரும்பயனை அடைந்திடவும்
பொங்கலே உயிர்நாடி!
பொங்கிடுவோம் நலம்நாடி!
ஊருக்காய் உழைத்துநித்தம்
ஓடாகிப்போகும் உழவன்
பெயராலே ஒருதிருநாள்!
பெருகிடும் மக்களுக்கே
உதிரத்தை வியர்வையாக்கி
உறுபசி போக்கிடவே
தன்னையே வருத்திநிற்கும்
தகைமை சான்றவனுக்கு ஒருசல்யூட்!
இஞ்சியும் மஞ்சளும்
இனிதான நீள்கரும்பும்
இத்தைத் திருநாளில்
எல்லோருக்கும் கிடைத்திடவே
உழவனின் தோளோடுதோள் நின்று
தொண்டாற்றும் மாடுகளுக்கும்
விழாவெடுத்து மகிழ்ந்திடுவோம்
விழுமிய நன்றியுடனே!
காணும்பொங்கல் அன்றைக்குக்
கண்ணியம் மிகக்கொண்டே
உற்றார் உறவினரை
ஒருபோதும் மறவாது
அனைவரையும் சந்தித்து
மூத்தோரிடம் ஆசிபெற்று
மூத்தவர்கள்நாம் ஆசிவழங்கி
முகிழச்செய்வோம் உறவுகளை!
பொங்கட்டும் மகிழ்ச்சி எங்கும்!
பொங்கட்டும் அமைதி என்றும்!
பொங்கட்டும் நல்ல வாழ்வு!
பொங்கட்டும் புதுப் பொலிவு!
பொங்கட்டும் பெரு விளைச்சல்!
பொங்கட்டும் புதிய வாழ்க்கை…ஞ
என்றைக்கும் உழைக்கும் நமது
இனிய விவசாயிகள் வாழ்வில்!