நம் நாட்டை பொறுத்தவரை மசாலா கலந்த காரசாரமான உணவுகளை சாப்பிடுபவர்கள் அதிகம். மற்ற நாடுகளை காட்டிலும் நம் நாட்டில் அதிக அளவிலான மசாலா தயாரிக்கப்படுகிறது. மேலும் அவ்வாறு தயாரிக்கப்படும் மசாலாக்கள் நறுமணமுடையவை மற்றும் ஆரோக்கியமானவை. அந்தவகையில், இந்தியாவில் அசைவ உணவுகளை சமைக்கும் போது பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் கசகசா.
நம் வீட்டில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் நிச்சயம் கசகசாவிற்கு ஒரு இடம் உண்டு. இவ்வாறு நம் நாட்டில் சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் கசகசா ஒரு சில நாடுகளுக்கு எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்படுவதுடன், கடுமையான தண்டனையும் விதிக்கப்படும் என்றால் அதிர்ச்சியாக தான் இருக்கும்.
மேலும் நாம் பயன்படுத்தும் இந்த கசகசா ஒரு வகையான போதை பொருள் தயாரிக்கும் செடியில் இருந்து பெறப்படுகிறது என்றால், இது மேலும் ஆச்சரியத்தை கொடுக்கலாம். போதைப்பொருள் தயாரிக்கும் செடியில் இருந்து கசகசா பெறப்படுகிறது என்றால் இந்தியாவில் இதற்கு அனுமதி எப்படி கொடுத்தார்கள் என்பதையும், கசசாவில் உள்ள மருத்துவ பயன்கள் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
கசகசா
கசகசாவை பாப்பி விதைகள் (Poppy Seeds) என்று அழைப்பார்கள். பாப்பி செடியில் இருந்து கசகசா பெறப்படுவதால் இது பாப்பி விதைகள் என பெயர்பெற்றது. இந்த பாப்பி செடியில் உள்ள விதைப்பை முற்றிய பிறகு எடுக்கப்படுவது தான் கசகசா. இது இந்தியாவில் அனைத்து மளிகை கடைகளிலும் கிடைக்கும்.
கசகசா மற்ற நாடுகளில் ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது?
பாப்பி செடியில் உள்ள விதைப்பை முற்றிய பிறகு கசகசா பெறப்படுகிறது. ஆனால் விதைப்பை முற்றாமல் அதில் கீறல் போட்டால் அதிலிருந்து பால் போன்ற திரவம் வடியும். இது தான் ஓபியம். இந்த ஓபியம் என்பது கஞ்சா, புகையிலை,ஹெராயின் போன்ற போதைப்பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே இந்த செடியை மற்ற நாடுகளில் வளர்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த கசகசா விதையை பயன்படுத்தி பாப்பி செடிகள் வளர்த்து ஓபியம் எடுக்க நேரிடும் என்பதால் துபாய், கத்தார், குவைத், சிங்கப்பூர், அரேபியா போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மட்டும் பயிரிடப்படுகிறது. ஏன் இந்த நாடுகளில் மட்டும் பயிரிப்படுகிறது என்றால் கசகசாவில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன. மேலும் இந்தியாவில் அரசு அனுமதி வழங்கியுள்ள மாநிலங்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் கசகசா பயிரிடப்படுகிறது. மேலும் இது அரசின் கண்காணிப்பில் வளர்க்கப்படுகிறது.
கசகசா மருத்துவ பயன்கள்
கசகசாவில் ஒலிக் ஆசிட், லினோலிக் ஆசிட் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கிறது.
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும் செரிமானத்தை எளிதாக்குகிறது. செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.
கசகசா பேஸ்ட் செய்து சூடான பாலுடன் கலந்து குடித்து வர தூக்கமின்மை குணமாகும்.
மேலும் இதில் உள்ள லிக்னான்கள் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றன.
கசகசாவில் கால்சியம், இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. எனவே இது உடல் நலத்திற்கு சிறந்தது.
குறிப்பு: கசகசாவை குறைந்த அளவு உட்கொள்ளவே பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் விளையாட்டு வீரர்கள் போதையை கண்டறிய சிறுநீர் டெஸ்டுக்குச் செல்லும் முன் கசகசா கலந்த உணவை தவிர்ப்பது நல்லது.