

கருவறையில்
கனவாய் மலரும் உயிர்
கைகளில் உலகமாய்
உதிக்கும் குழந்தை
வலியை வரமாய் ஏற்று
புன்னகையால் தாய்மையை
நிரப்புபவள் தாய்
தாய்மை உறவு மட்டும் அல்ல
உயிரை உயிராய்
நேசிக்கும்
உன்னதமான வரம்..
ஆம்... தாய்மை என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மலரும் மிக உயர்ந்த ஆசீர்வாதம். ஒரு புதிய உயிரை தன் கருவறையில் சுமந்து அன்பால் அரவணைத்து உலகிற்கு அறிமுகப்படுத்தும் புனிதமான பயணம். கர்ப்பமான அந்த கணத்தில் இருந்து ஒரு பெண் தன்னை விட தன் குழந்தையின் நலனுக்கே முக்கியத்துவம் தருகிறாள். அவளின் ஒவ்வொரு சிந்தனையும் ஒவ்வொரு வேளை உணவும் ஏன் ஒவ்வொரு கனவும் கூட அந்த சிறு உயிரைச் சுற்றியே அமைகிறது.
தாய்மை என்பது ஒரு பெண் பெறும் மிக உயர்ந்த வரம். ஒரு புதிய உயிரை பத்து மாதங்கள் தன் கருவறையில் சுமந்து ஒவ்வொரு நொடியும் அன்பால் அரவணைத்து உலகிற்கு அறிமுகப்படுத்தும் அற்புதமான பயணம் இது. அந்த பயணம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைய ஒவ்வொரு கர்ப்பிணித் தாயும் தெரிந்து கொள்ள வேண்டிய சில எளிய பயனுள்ள குறிப்புகள் இதோ உங்கள் பார்வைக்கு...
கர்ப்பிணி பெண்கள் கேட்க கூடிய , சில கேள்விகளுக்கான பதில்கள் பார்ப்போம்...
1. கர்ப்பம் உறுதியானதும் முதலில் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவரைச் சந்தித்து தேவையான பரிசோதனைகள் செய்த பிறகு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் உதாரணமாக போலிக் அமிலம், இரும்புச்சத்து கால்சியம் போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்..
2. உணவில் என்னென்ன சேர்க்க வேண்டும்?
கீரைகள், பழங்கள், மற்றும் காய்கறிகள், பருப்பு வகைகள், முழு தானியங்கள், பால், தயிர் போன்ற சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீண்ட நேரம் பசியோடு இல்லாமல் சிறிய அளவில் அடிக்கடி உண்பது நல்லது.
3. நிம்மதியான உறக்கம் பெற என்ன வழி?
இனிமையான இசை கேட்கலாம். படுக்கும் போது இடது பக்கமாக உறங்க வேண்டும். வயிற்றிற்கு ஆதரவாக மற்றொரு தலையணையை வைத்து கொள்ளலாம். படுக்கும் முன் வெதுவெதுப்பான குளியல் அல்லது வெதுவெதுப்பான நீரில் ஒத்தடம் கொடுப்பது தசைகளை தளரச் செய்து நல்ல உறக்கம் வரச் செய்யும்.
4. உடற் பயிற்சி செய்யலாமா?
மருத்துவர் அனுமதித்தால் தினமும் 20-30 நிமிடங்கள் மெதுவாக நடக்கலாம். கர்ப்பிணிக்களுக்கான எளிய பயிற்சிகள் (மருத்துவர் ஆலோசனை படி) உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
5. சரி... மனநலத்தை எப்படி பாதுகாப்பது?
இனிமையான இசை மற்றும் ஸ்லோகங்கள் கேட்கலாம். நல்ல புத்தகங்கள் படிக்கலாம். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவழிக்கலாம். நல்ல எண்ணங்களும் நல்ல வார்த்தைகளும் வளரும் குழந்தைக்கு நேர்மறையான சூழலை உருவாக்கும்.
6. எந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யக் கூடாது?
குழந்தையின் அசைவு குறைதல், வயிற்று வலி கை கால் வீக்கம் இருந்தால் மருத்துவரை அணுகவும். இதெல்லாம் கர்ப்பகாலத்தில் வரக் கூடிய ஒன்று தான். பயப்படத் தேவையில்லை.
7. கர்ப்ப காலத்தில் கணவரின் பங்கு எவ்வளவு முக்கியம்?
மிக மிக முக்கியம். கர்ப்பம் என்பது மனைவி மட்டும் சுமக்கும் பொறுப்பு அல்ல. கணவனும் மனைவியும் அன்போடும் அக்கறையோடும் இணைந்து பயணிக்க வேண்டிய அழகான காலம். மனைவியின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு கணவன் உறுதுணையாக இருக்க வேண்டும்.
வீட்டுப் பணிகளில் உதவுவது, சத்தான உணவு மற்றும் மருந்துகள் எடுத்துக் கொள்ள நினைவூட்டுவது மனைவியின் பயங்களையும் கவலைகளையும் பொறுமையாக கேட்டு ஆறுதலாக பதில் அளிப்பது அன்பான வார்த்தைகள் மட்டுமே பேசி உற்சாகப்படுத்துவது ஆகியவை கர்ப்பிணி மனைவிக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும். கணவனின் அன்பும் ஆதரவும் அவர்களின் மன நிம்மதியை அதிகரித்து அந்த மகிழ்ச்சியை வளரும் குழந்தையை உணரச் செய்யும்.
இந்த பயணம் மகிழ்ச்சியுடன் அமைய சத்தான உணவு, போதிய ஓய்வு, நேர் மறை எண்ணங்கள், மகிழ்ச்சியான சூழ்நிலை குடும்பத்தினரின் அன்பு மற்றும் ஆதரவு மருத்துவரின் ஆலோசனை இவை அனைத்தும் மிக மிக முக்கியம்.. ஆரோக்கியமான தாயே ஆரோக்கியமான குழந்தையின் முதல் இல்லம். எனவே கர்ப்ப காலத்தை பயம் கொள்ளாமல் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் எதிர் கொள்ளுங்கள்.
மகிழ்ச்சியாக இருங்கள்.
ஆரோக்கியமாக இருங்கள்..
இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், கர்ப்ப காலத்தில் ஏற்படும் தேவையற்ற அச்சங்களைத் தவிர்த்து, உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்து, அந்தப் பொற்காலத்தை மனநிறைவுடன் கடக்க முடியும்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference