
சமீபத்தில் மறைந்த டாக்டர் கௌசல்யா தேவி தமிழ்நாட்டின் அன்னை தெரசா என்று போற்றப்படுகிறார். புகழுக்காகவும் செல்வத்திற்காகவும் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உண்மையான விருப்பத்தினால் கிராமப்புற ஏழை மக்களுக்கு அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய அயராத சேவை மூலம் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர். அவரது சிறப்புகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
காந்தீயக் கொள்கை:
கௌசல்யா தேவியின் தந்தை மகாத்மா காந்தியை தனது முதல் குரு என்று கருதி மற்றவர்களுக்கு நன்மை செய்வதன் முக்கியத்துவத்தை தன் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தார். பிறருக்கு உதவுவது அன்றாட வாழ்க்கையில் கடவுளை கண்டுபிடிப்பதற்கான ஒரு வழி என்று அவர் கூறியது சிறு வயதில் கௌசல்யா தேவியின் மனதில் ஆழப்பதிந்து விட்டது.
மருத்துவப் பட்டம் பெற்ற பிறகு கௌசல்யா தேவி நாகப்பட்டினம் பொது மருத்துவமனையில் பணிபுரிந்தார். பின்னர் டாக்டர் சௌந்தரத்தை சந்தித்தபின் பிறகு அவரது வாழ்வின் திசை மாறியது.
டாக்டர் டி. எஸ். சௌந்தரம் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் கஸ்தூர்பா மருத்துவமனையை நிறுவினார். காந்திய சமூக சீர்திருத்தவாதியான டாக்டர். சௌந்தரம் காந்திகிராமத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கம் குறித்தும் கிராமப்புற சமூகங்களுக்கு சேவை செய்ய கஸ்தூர்பா கிராமப்புற மருத்துவமனையில் பணிபுரிய டாக்டர் கௌசல்யா தேவியை அழைத்தார்.
1960 களின் முற்பகுதியில் கஸ்தூர்பா மருத்துவமனையில் டாக்டர் கௌசல்யா சேர்ந்த போது மின்சாரம் மற்றும் சாலைகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் கூட இல்லை. ஆனாலும் சவாலான அந்த சூழ்நிலையிலும் அவர் மிகச் சிறப்பாக பணியாற்றினார்.
மருத்துவ சேவை:
அன்னை தெரசாவைப் போலவே டாக்டர் கௌசல்யா தேவி திருமணம் செய்து கொள்ளாமல் தன் வாழ்நாளை ஏழை எளிய மக்களின் மருத்துவ சேவைக்காக அர்ப்பணித்துக் கொண்டார். மகளிர் மருத்துவ நிபுணராக 10,000 பிரசவங்கள் வரை நடத்தினார். மேலும் பாதுகாப்பான பிரசவம், குடும்பக்கட்டுப்பாடு மற்றும் குழந்தை நலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். தொலைதூர பழங்குடி கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கும் சேவை செய்தார். செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கான பயிற்சி திட்டங்கள் அளித்தார். குழந்தையின்மை சிகிச்சைகள், கைவிடப்பட்ட மற்றும் குழந்தைகளுக்கான தத்தெடுப்பு மையம், கிராமப்புற சுகாதாரத்திற்கான பிரச்சாரங்கள் போன்றவற்றை அவர் மேற்கொண்டார்.
மருத்துவத்தில் மறுமலர்ச்சி:
கீழ்வெண்மணி துப்பாக்கிச்சூடு கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட ஏராளமானவர்களுக்கு தொடர்ந்து 52 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தார். கும்பகோணம் தீ விபத்தில் தமது ஒற்றைக் குழந்தையை இழந்த சில தாய்மார்களின் துயர் நீக்க அவர்களுக்கு மறுபடியும் குடும்ப அறுவை சிகிச்சை செய்து மீண்டும் குழந்தைகள் கிடைக்க வழி செய்தார். விபத்து மற்றும் நீரிழிவு நோயினால் மக்கள் கால்களை இழந்து வருவதைப் பார்த்து வேதனைப்பட்ட மருத்துவர், ஜெய்ப்பூரில் செயற்கைக் கால் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டு தமிழ்நாட்டில் அந்த சேவைகள் கிடைக்க வழிசெய்தார். கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் பொருத்தி, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கினார்.
கௌரவங்களும் விருதுகள்:
ஸ்த்ரீ ரத்னா விருது, ஆர்.ஆர். கீதன் தங்கப் பதக்கம், அறம் விருது, ராணி லேடி மெய்யம்மை ஆச்சி விருது, மாநில விருது, அப்பல்லோ மருத்துவமனையின் விருது, உத்தமர் ஓமந்தூரார் விருது என தனது அசாதாரண சேவைக்காக ஏராளமான விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார். அவருக்கு பத்மஸ்ரீ விருது தரப்பட்ட போது, தனது சேவை தனிப்பட்டதல்ல, குழுப் பணி என்று அதை வாங்க மறுத்துவிட்டார். கஸ்தூர்பா மருத்துவமனை அவரது தலைமையின் கீழ், குடும்ப நல சேவைகளுக்கான பங்களிப்புக்காக 14 முறை மாநில விருதையும், இரண்டு முறை தேசிய விருதையும் வென்றது.
கஸ்தூர்பா மருத்துவமனையை வழிநடத்தி, காந்திகிராம அறக்கட்டளையின் ஆயுள் அறங்காவலராகவும் பணியாற்றினார். சமீபத்தில் வயது முதிர்வினால் அவர் மறைந்த போது, தமிழத்தின் அன்னை தெரசாவை இழந்துவிட்டோம் என ஏராளமான மக்கள் அவரது மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.