
"வர வர என் கணவர் எதிலும் நாட்டமின்றி எப்போதும் சோர்வாகவே உள்ளார். இதற்கு முன் இப்படி இருந்ததில்லை..ஏன் என்று புரியவில்லை"... என்று புலம்பும் நடுத்தர வயதுப் பெண்மணிகளைப் பார்த்திருப்போம். காரணம் என்ன?
பெரும்பாலும் பெண்களை நோக்கியே நமது ஆரோக்கிய சிந்தனைகள் நகர்கின்றன. ஏனெனில் பெண்ணின் உடல் அமைப்பு பல வகைகளில் பல மாறுதல்களுடன் ஆரோக்கிய சீர்கேடுகளை சந்திக்கிறது. அதே நேரத்தில் ஆண்களின் ஆரோக்கியம் குறித்தான விழிப்புணர்வு சற்று குறைந்தே இருக்கிறது எனலாம்.
ஒரு வயதுக்கு பின் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் ஆண்களுக்கும் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? அது என்ன ஆண்களுக்கு மெனோபாஸா? ஆம் இந்த பதிவில் அதைப் பற்றி காண்போம்.
டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்களின் விந்தணுக்களில் முதன்மையாகவும், பெண்களின் கருப்பைகளில் சிறிய அளவிலும் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஸ்டீராய்டு ஹார்மோன் ஆகும். இது ஆண் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு அவசியம், ஆனால் இது பெண்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக ஆண்களின் சிறப்பு ஹார்மோனாகக் கருதப்படும் டெஸ்டோஸ்டிரோன் சுமார் 55 அல்லது 60 வயதுகளில் குறையத் துவங்கும் அல்லது நின்று போகும். இதையே ஆண்களின் மெனோபாஸ் அதாவது ஆண்ட்ரோபாஸ் என்கிறோம். பெண்களின் மாதவிடாய் நின்று ஏற்படும் மெனோபாஸ் போலவே ஆண்களுக்கு இது இயற்கையாக ஏற்படும் ஒரு நிகழ்வு.
டெஸ்டோஸ்டிரோனின் செயல்பாடுகள்
முக முடி, ஆழமான குரல் மற்றும் தசை நிறை போன்ற ஆண் பாலியல் பண்புகளின் வளர்ச்சிக்கு டெஸ்டோஸ்டிரோன் பங்களிக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடமும் பாலியல் உந்துதல் மற்றும் லிபிடோவை பாதிக்கிறது. விந்து உற்பத்தி மற்றும் கருவுறுதலுக்கு அவசியமாகிறது. மேலும் எலும்பு அடர்த்தியை பராமரிக்கவும் ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. தசை வளர்ச்சி மற்றும் பராமரிப்பை ஊக்குவிக்கிறது.
டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் வயது, பாலினம் மற்றும் தனிநபரைப் பொறுத்து மாறுபடும். குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகள், ஹைபோகோனாடிசம் என்றும் அழைக்கப்படுகின்றன. இது சோர்வு, குறைந்த லிபிடோ மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் முகப்பரு, ஆக்கிரமிப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் வயதுக்கு ஏற்ப இயற்கையாகவே குறைகின்றன. உடல் பருமன், உடற்பயிற்சியின்மை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு போன்ற காரணிகள் டெஸ்டோஸ்டிரோன் அளவை எதிர்மறையாக பாதிக்கலாம். ஹைபோகோனாடிசம், பிட்யூட்டரி சுரப்பி பிரச்சினைகள் அல்லது டெஸ்டிகுலர் சேதம் ஆகிய பாதிப்புகளும் ஸ்டீராய்டுகள் மற்றும் சில மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் போன்ற சில மருந்துகளும் டெஸ்டோஸ்டிரோன் அளவை பாதிக்கலாம்.
இந்த டெஸ்டோஸ்டிரோன் குறைவதால் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்ட்ரோபாஸால் ஏற்படும் மாற்றங்களாக, அதிக களைப்பு, உடலில் சதைகளின் அளவு குறைவது, மறதி, சரியான தூக்கமின்மை, தாம்பத்திய உறவில் ஆர்வம் இல்லாதது, சரும வறட்சி, நடையில் தள்ளாட்டம், நெஞ்சம் படபடப்பு போன்றவைகளை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் அவரவர் மனம் மற்றும் உடல் நலம், உணவு முறை பொறுத்து இந்த பாதிப்புகளின் அளவு மாறலாம். இந்த அறிகுறிகள் கண்டு அச்சம் தேவையில்லை. சிகிச்சை தேவை என நினைப்பவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் ரத்தத்தில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவை பரிசோதித்து அதற்கு தகுந்த சிகிச்சை அல்லது வழிமுறைகளை பின்பற்றலாம்.
அதிக பாதிப்பு என்றால் மட்டுமே ஹார்மோன் சிகிச்சை தேவைப்படும் என்றும் மனம் வைத்தால் தியானம், உடற்பயிற்சி, உணவு முறை போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களினால் மருந்து இல்லாமலேயே உற்சாகமாக வாழ முடியும் என்றும் மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.