

40 ஆண்டுகால கனவு. என் ஆன்மாவின் ஏக்கம். லட்சிய தேடல்... இப்படி எந்த வார்த்தையை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.
1986 தர்மபுரி குமாரசாமி பேட்டை. பிளஸ் டூ படித்தபோது வீட்டில் எதிரில் ஐயப்பன் சன்னிதானம். கார்த்திகை மாதம் பிறப்பு முதல் சரண கோஷம் கேட்க கேட்க அவரை வாழ்வில் ஒரு முறையேனும் நேரில் பார்க்க வேண்டுமென்று ஆசை என்னும்.
ஆகஸ்ட் 17, 2026 இரவு 9:46 ஐயனின் சந்திப்பு
நெய்விளக்கு ஒளியில். கவலைகள் எல்லாம் பறந்து ஓடியது. அந்தப் புனிதமான வினாடியை என்னால் மறக்கவே முடியாது.
சபரிமலை சென்று ஐயனை தரிசிக்கவேண்டும் என்பது பலரும் கனவுகாண்பர். ஆனால் எப்படி போவது? நம்மால் போக முடியுமா நடக்க முடியுமா? இப்படி நிறைய நிறைய கேள்விகள்? மனதிற்குள் எழும். எனக்கும் எழுந்தது.
என் தோழி சரோஜா கொடுத்த உற்சாகமான தன்னம்பிக்கையான பேச்சு, ஐயனை நிச்சயம் தரிசிப்பேன் என்ற நம்பிக்கையைக்கொடுக்க மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் மாலை போட்டு வந்தேன்.
48 நாட்கள் விரதம்... ஒழுக்கத்தையும், மனக்கட்டுப் பாட்டையும் போதித்தது. மாலை அணிந்து விரதம் இருப்பது ... ஏதோ புதிதாய் பிறந்ததுபோல் உணர வைத்தது.
16ஆம் தேதி ஞாயிறு காலை அண்ணா நகர் ஐயப்பன் கோவிலில் இருமுடி கட்டு.
94 வயதான குருசாமியின் கரங்களால்வைக்கப்பட்ட இந்த இருமுடியை சுமப்பதே... இறைவனை நோக்கி சபரிமலை தரிசனம் செய்ய செல்லும் ஆன்மீகப் பயணத்தின் தொடக்கம் என புரிந்தது.
'யான் ' 'எனது' என்று அகந்தையை ஒழித்து தன் பாவ புண்ணிய மூட்டைகளை இறைவனின் பாதத்தில் சமர்ப்பிப்பதே இருமுடி கட்டின் தத்துவம் என குருசாமி கூறினார்.
அன்று மதியம் 3:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து பயணம்.
காலை இரண்டரை மணிக்கு எர்ணாகுளம் அங்கிருந்து சோட்டாணிக்கரை பகவதி அம்மன்,
பிறகு வைக்கம் சிவன்
மற்றும் ஏற்றமானூர் சிவன்
பார்த்துவிட்டு எரிமேலி வந்து
பேட்டை துள்ளல் செய்தோம்.
"சுவாமிதிந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம் என்று சொல்லி ஆடிய பேட்டைத் துள்ளலால். மனசு பேரானந்தம் அடைந்தது.
வாபர் மசூதியின் முன்னிருந்தே பேட்டை துள்ளல் துவங்கியது. (மத நல்லிணக்கம்)
பிறகு, நிலக்கலிலிருந்து கேரள அரசு பேருந்தில் ஏறி பம்பா வந்தடைந்தோம். பம்பா நதியின் பிரம்மாண்டத்தை என்னவென்று சொல்வது.
காடுகளின் நடுவே ஓடி வரும் பம்பாநதி... காண்பவர் நெஞ்சில் அமைதியைத் தருவதைச் (தந்ததைச்) சொல்லவா!
சபரிமலை ஐயப்பனின் பாதம் தொடும் நதி பக்தர்களின் பாவம் எல்லாம் போக்குகிறது என்று சொல்வதா?! எதைச் சொல்ல எதை விட?
ஆனந்தமாய் குளியல் போட்டு...
ஐயனை மனதில் நினைத்து மாலை 4 மணிக்கு சக சாமிகளுடன் ஏற ஆரம்பித்தேன்.
நம்மால் நடக்க முடியுமாங்கிற பயம் ஐயனின் பெயரைச் சத்தமாக சுவாமியே சரணம் ஐயப்பா ன்னு சொல்ல பயம் நீங்கி பாதங்கள் தானாய் மலையேறியது.
கடினமான மலைப்பாதை, சோர்வடைந்த நேரம்
'சுவாமி சரணம்' சொல்லி ஊக்கப்படுத்தியும், இருமுடி தாங்கி ஒன்றாக நடந்து கல்லும் முள்ளும் கால்களை குத்தும்போது கை கொடுத்தும், அழுதை ஏற்றம் ஏறியபோது, கரிமலை உச்சி கடந்த அந்த நேரம்,
சரணம் சொல்லி
'உங்களால் முடியும்''
என ஊக்கமளித்தும்
ஏற வைத்தனர்
உடன் வந்த சக சாமிகள்.
அந்த நேரத்தில் அவர்கள் எல்லாம் என் கண்களுக்கு ஐயனாகவே தெரிந்தார்கள்.
ஐயனின் பாதையில்...
இருமுடி சுமந்த களைப்பு தீர ஐயன் தந்த அமுதமான மூலிகை நீர்...
தாகம் தீர்த்து... உடலுக்கும், மனதுக்கும் தந்தது புதுத் தெம்பை !
ஆறரை மணிக்கு மேல் சன்னிதானம்சென்று அடைந்தோம்.
இருமுடி தாங்கி வரும் பக்தரை இமைக்காமல் காக்கும் இருள்நிற வேந்தன் 18ஆம் படி காவல் காக்கும்
கம்பீர தெய்வம்
கருப்பண்ணசாமியின் முன்..
கை கூப்பி நிற்க... விழிகளில் நீர் திரையிடுகிறது.
அங்கு தேங்காயை உடைத்து..
சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் விண்ணதிர முழங்க
18 படிகளின்முன்...நின்றபோது.....
மெய் சிலிர்த்தது
ஒவ்வொரு படியிலும் கால் வைக்கும்போது அகந்தை, பேராசை, பொறாமை போன்ற தேவையற்ற குணங்கள் மறைந்து ஐயனிடம் முழுமையாக சரணடையும் உணர்வு எழுந்தது.
மொத்தத்தில் இருமுடி தாங்கி
பதினெட்டு படி ஏறும் அந்தத் தருணம் ...
வெறும் மலை ஏற்றம் அல்ல
அது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையும் உன்னத பெருநிலை என்பது புரிந்தது.
18 படி ஏறியதும்
கருவறையில் ஒளிரும்
காந்த மலை ஜோதியை
தரிசித்த அந்த ஒரு நொடி
வார்த்தைகளில் விவரிக்க முடியாத
ஒரு தெய்வீகப் பேரனுபவம்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம்... எங்கும் சரண கோஷ முழக்கங்கள்... ஐயனின் முகத்தைப் பார்த்த
அந்த ஒரு நொடி...
' நான் 'என்ற அகந்தை முழுமையாக அழிந்து ஐயனின் பேரொளியில் கரைந்ததை உணரமுடிந்தது.
மறுநாள் காலை 3:30 மணி...
சரியான குளிர்... நெய் அபிஷேகத்தில் ஐயப்பனை தரிசித்தேன்.
நெய் அபிஷேக சுடரில் அழகாய் மின்னியது ஐயனின் முகம்.
உருகும் நெய்யில் ஐயப்பனை கண்டு அவன் பாதம் சரணடைந்தேன்.
மறுபிறவி எடுப்பதற்கு சமமான ஆன்மாவைத் தூய்மையாக்கும் ஒரு மாபெரும் காந்த சக்தியான ஐயனின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறோம் என்ற நம்பிக்கை.. எழ விழிகளில் ஆனந்த கண்ணீர்.
"இனிமேலும்
இன்னொரு ஜென்மம்
வேண்டாம் ஐயனே...
படைத்தாலுந்தன்
கோயில் மணியாய்
படைப்பாய் ஐயனே..."
சுவாமியே சரணம் ஐயப்பா! மனசு கெஞ்சியது
நிச்சயமாக எல்லாராலும் ஐயனை தரிசிக்க முடியும் அவரை ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற கனவு இருந்தால் அந்தக்கனவே அவரை நோக்கி அழைத்துச் செல்லும்.
நான் அதை அனுபவ பூர்வமாக சொல்கிறேன்.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...