

“அத்தை, எங்கே செல்கிறோம்?” - ராமநாதபுரம் சிறுமி சாய் தீப்தியின் கொலைச் செய்தியை வாசித்தபோது மனதில் ஆழமாகப் பதிந்த வரிகள் இவை. உலகையே நம்பாமல் இருந்தாலும், தன்னைத் தூக்கிச் செல்லும் அத்தையை நம்பிய ஒரு குழந்தையின் குரல் அது. அந்த நம்பிக்கை சில நிமிடங்களில் கிணற்றின் இருளில் மூழ்கடிக்கப்பட்டது என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது.
ஒரு குழந்தையின் உயிர் பறிக்கப்படுவது எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாத துயரமாகும். ஆனால் சில சம்பவங்கள் ஒரு குற்றச் செயலாக மட்டுமல்லாமல், மனித உறவுகளின் அர்த்தத்தையே மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன. உறவுகளின் அரவணைப்பில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஒரு குழந்தை, அதே உறவின் கைகளால் மரணத்தைச் சந்தித்திருப்பது அத்தகைய வேதனையான நிகழ்வாகும்.
நல்லதங்காள் வரலாறு முதல் சாய் தீப்தி வரை ... மாறாத துயரம்:
இந்தச் சம்பவத்தைப் படிக்கும்போது எண்ணங்கள் தமிழரின் நாட்டுப்புற நினைவுகளுக்குள் பயணிக்கின்றன. நல்லதங்காள் கதை இன்னும் இந்த மண்ணின் மனச்சாட்சியாக வாழ்கிறது. அண்ணியாரின் கொடுமையால் மனமுடைந்த நல்லதங்காள், தன் குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படும் அந்த வரலாறு, அன்பின்மையும் பொறுப்பின்மையும் எத்தகைய துயரங்களை உருவாக்கும் என்பதை தலைமுறைகளுக்குக் கற்றுக் கொடுத்தது.
இன்றும் அந்தக் கதையோடு தொடர்புடைய இடங்களில், “மூளி” என அழைக்கப்படும் அண்ணியாரின் சிலை உருவத்தை தாங்கள் காலால் மிதித்துச் செல்வதாக நேரில் அங்கு சென்றிருந்த போது மக்கள் கூறுவதைக் கேட்க இயன்றது. அது ஒருவரின் மீதான கோபமல்ல; மனிதநேயத்தை இழந்த மனநிலையின் மீதான சமூகத்தின் கண்டனம். தவறு செய்தவர்களைவிட, அந்தத் தவறிலிருந்து பாடம் கற்கவேண்டும் என்ற சமூக நினைவின் வெளிப்பாடு.
ஆனால் இன்று நடந்துள்ள சம்பவம், அந்த வரலாற்றையே மிஞ்சும் கொடுமையை நம் கண்முன் நிறுத்துகிறது. அங்கே துயரத்தால் ஒரு தாய் உயிரை மாய்த்துக் கொண்டாள். இங்கே பொறாமையும் வெறுப்பும் ஒரு குழந்தையின் உயிரைப் பறித்துள்ளன. இந்த வேறுபாடே நம்மை அதிகம் அச்சுறுத்துகிறது.
பொறாமை என்பது மனித இயல்பில் தோன்றக்கூடிய உணர்வு. ஆனால் அது கட்டுப்பாடின்றி வளரும்போது, அன்பையும் அறிவையும் அழித்துவிடுகிறது. பிறரின் மகிழ்ச்சியே தன் துயரத்தின் காரணமாகக் கருதும் மனநிலை உருவாகிறது. அப்போது உறவுகள் பகையாகத் தோன்றுகின்றன; குழந்தைகள்கூட எதிரிகளாகக் காட்சியளிக்கின்றனர். இதுவே மனப்பிறழ்வின் தொடக்கம்.
இன்று குடும்பங்கள் ஒன்றாக வாழ்ந்தாலும், மனதளவில் வெகுதொலைவில் நிற்கின்றன. உரையாடல்கள் குறைகின்றன. மன அழுத்தங்கள் பகிரப்படுவதில்லை. உள்ளுக்குள் தேங்கும் கோபம், வெறுப்பு, ஏமாற்றம் ஆகியவை ஒருநாள் வெடிக்கும்போது அதன் பலியாக நிரபராதிகள் மாறுகின்றனர். சமூகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் இதுதான்.
சாய் தீப்தி விட்டுச்சென்ற கேள்விகளும் சமூகத்தின் கடமையும்:
ஐந்து வயது சாய் தீப்தியின் மரணம் ஒரு குடும்பத்தின் துயரம் மட்டுமல்ல. அது நம் காலத்தின் சமூக நோய்க்கான எச்சரிக்கை மணி. மனநலம், குடும்ப உறவுகள், பரஸ்பர அன்பு, உணர்வுப் பகிர்வு ஆகியவற்றின் அவசியத்தை மீண்டும் சிந்திக்கச் செய்கிறது.
ஒரு குழந்தையின் உயிரை மீட்டுத் தர முடியாது. ஆனால் அந்த உயிர் விட்டுச் சென்ற கேள்விகளுக்கு நாம் பதில் தேட வேண்டும். உறவுகள் பாதுகாப்பின் அடையாளமாக இல்லாமல், அச்சத்தின் அடையாளமாக மாறத் தொடங்கினால் சமூகத்தின் அடித்தளமே குலைந்துவிடும்.
நாகரிகம் என்பது உயரமான கட்டடங்களாலும், புதிய தொழில்நுட்பங்களாலும் அளவிடப்படுவதில்லை. இந்த உலகில் ஒவ்வொரு குழந்தையும் அச்சமின்றி வாழவும், பாதுகாப்பாக வளரவும், தன்னைச் சுற்றியுள்ள பெரியவர்களின் அன்பையும் அரவணைப்பையும் நம்ப முடியும் சூழலை உருவாக்குவதில்தான் அதன் உண்மையான அளவுகோல் இருக்கிறது.
குழந்தைகளின் பாதுகாப்பு என்பது ஒரு குடும்பத்தின் பொறுப்பு மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையும் ஆகும். அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதே மனிதநேயமிக்க சமூகத்தின் அடையாளமாகும்.
ஒரு குழந்தையின் கண்ணீரைத் தடுக்கத் தவறிய சமூகம், தனது எதிர்காலத்தையே காக்கத் தவறுகிறது.
இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம், தற்காலக் குடும்பங்களில் மறைந்து வரும் பரஸ்பர உரையாடல்களின் அவசியத்தையும், நம்மைச் சுற்றியுள்ள குழந்தைகளின் மனநலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு சமூகமாக நாம் எடுக்க வேண்டிய அவசரக் கடமைகளையும் உணர்ந்து செயல்பட முடியும்.