

தேவதையான மேகலா, பித்து பிடித்தாற்போல் அமர்ந்திருக்க, தேற்ற முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தான் மோகன்.
அப்போது........!
செல்ஃபோனில் "அம்மா" என மின்ன, எடுத்து என்னம்மா..?சுரத்தில்லாமல் கேட்டான்.
"மோகன்! குலதெய்வம் கோவிலுக்கு போகாதது கூட காரணமா இருக்கலாம். அடிக்கடி ஏதோ தடை வரது. இந்த தடவை எப்படியாவது மேகலாவை சமாதானப்படுத்தி ஒரு நடை கூட்டிக்கிட்டு போய்ட்டு வா!"
"நாளாகலையே! பரவாயில்லையா? "
"பரவாயில்லை. எல்லாம் சரியாகும். கவலைப்படாதே!" மோகனைத் தேற்றி, கைபேசியை அணைத்தாள்.
அம்மா சொன்னது சரியெனப்பட, எப்படியோ இரண்டு மூன்று நாட்களில் மேகலாவிடம் பேசி சமாதானப்படுத்தி குலதெய்வமான ஆய்க்குடி பால முருகர் கோவிலுக்கு அவளுடன் கிளம்பினான். மதுரை ரெயில் நிலையம். ஃப்ளாட்பாரத்தில் ரெயில் தயாராக நின்று கொண்டிருந்தது.
மசால்வடை, காப்பி, டீ என விற்பனை நடந்து கொண்டிருந்தது. லேசான மழைத்தூறல் வேறு. பயணிகள் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தனர். இவர்கள் ஏறிய அன்ரிசர்வ்ட் பெட்டியில் கூட்டமிருந்தாலும், உட்கார. எப்படியோ இடம் கிடைத்து விட்டது.
"மதுரை சந்திப்பிலிருந்து, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டை செல்லும் பாசஞ்சர் இன்னும் சில விநாடிகளில் புறப்படும்" அறிவிப்பைக் கேட்டவுடன், இறங்கியிருந்தவர்கள் தப-தபவென பெட்டியினுள் ஏறினர். அச்சமயம், சிறு குழந்தையை ஒரு கையிலும், சாயம் போன மஞ்சள் நிறப்பையை மறு கையிலும் பிடித்தவாறு கசங்கிய சேலையணிந்த பெண்ணொருத்தியும் ஓடி வந்து இவர்கள் அமர்ந்திருந்த பெட்டியில் ஏறினாள்.
குழந்தையுடன் நின்றவளை கூட்டம் உற்றுப்பார்த்ததே தவிர, இடம் கொடுக்க தயாராக இல்லை. மேகலாவோ எங்கோ வெறித்து பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள். இரக்கப்பட்ட மோகன், எழுந்து தன்னிடத்தை அப்பெண்ணிற்கு கொடுத்தான். மேகலாவினருகே அமர்ந்தவள், குழந்தையை தூங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டாள்.
ரெயில் விருதுநகரை அடையவும், வியாபார நிமித்தமாகவும், குற்றால சீசனுக்கு செல்பவர்களுமாக கம்பார்ட்மெண்ட் ஓவர் லோடானது. ஆங்காங்கே மூட்டை முடிச்சுகள், பைகள், பெட்டிகள் இத்யாதி! இத்யாதி!
வண்டி முன்னோக்கி ஓட, மோகனின் மனம் பின்னோக்கி ஓடியது.
மேகலாவை பெண் பார்க்க பெற்றோர்களுடன் சென்ற மோகன், அவளின் அழகைக் கண்டு பிரமித்து போனான். இவளை மனைவியாக அடைய கொடுத்து வைத்திருக்க வேண்டுமென எண்ணினான்.
எண்ணிய வேளையில், "பையனும், பெண்ணும் வேணா தனியா பேசலாமே" மேகலாவின் தகப்பனார் பச்சைக்கொடி காட்ட, இருவரும் மாடிக்குச் சென்றனர்.
முதலில் ஹை! ஹலோ! கூறி பேசிய பிறகு "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்களை கண்ணின் இமை போல பாதுகாப்பேன். எனக்கு ஓகே. உங்களுக்கு......?? கேட்ட மோகனிடம்,
"அழகை ஆராதிக்கத் தெரிந்தவர், மனைவியையும் அன்பாக நடத்துவாரென நம்புகிறேன்" பதிலளித்தாள் மேகலா. நீண்ட நேரம் பேசியபின் புன்முறுவலுடன் இருவரும் கீழே இறங்கி வந்தனர்.
பெற்றோர்களிடம், மேகலாவை பிடித்திருப்பதாக மோகன் கூற, மேகலாவும் சரியெனும் வகையில் புன்னகைத்தாள்.
இனி முகூர்த்த நாள் குறிக்க வேண்டியதுதான் என பெரியவர்கள் பேசிக்கொண்டனர். வீடு திரும்பியதும்,
"பொண் ரொம்ப அழகா இருக்காளே! சரிப்படுமா..?" அம்மா கேட்கையில், "அவன்தான் அங்கேயே பட்டுனு சொல்லிட்டானே! நாம எதுக்கு முட்டுக்கட்டை போடணம்?" என்றார் அப்பா.
"எதுக்கும் மோகன் கிட்ட ஒரு வார்த்தை நீங்க பேசுங்களேன்."
"என்னை இதுல இழுக்காதே. நீ வேணா பேசு. உன்பாடு, உன் பிள்ளை பாடு" உள்ளே சென்று விட்டார்.
"மோகன்!"
"என்னம்மா..?"
"தப்பா நினைக்காதே. பொதுவா அழகு ஆபத்துன்னு சொல்லுவா. மேகலா ரொம்பவே அழகா இருக்கா. யோசித்து முடிவெடுத்திருக்கலாம். இப்ப கூட நேரம் இருக்கு."
"அம்மா! இந்த மாதிரி ஒரு பொண் மனைவியா வரணும்னு நெனைச்சிருந்தேன். கெடச்சுட்டா. என் முடிவுல மாற்றம் கிடையாது. நீங்க கவலப்படாம இருங்க.!"
மோகன் வீட்டில் இப்படியென்றால், மேகலா வீட்டில்.....!!
"மோகன் சுமார் நிறம்தான். உனக்கு ஒத்து வருமா..?" கேட்டாள் அம்மா.
"பேசிப்பார்த்ததில் ரொம்ப நல்லவர்னு தோணுது."
"ஒரு அரைமணி நேரத்துல தோணிடுத்தா..??" இந்த முறை அப்பா.
"இதுக்கெல்லாம் சில நிமிடங்களே போறும். அநேக விஷயங்கள் ஒத்திருக்கு. எனக்கு ஓகே."
"அப்ப சரி! பின்னால வருத்தப்படக்கூடாதேனு தான் கேட்டோம். உன் ஆசைப்படியே நடக்கட்டும்."
மேகலாவும், மோகனும் தீர்மானித்தபடி திருமணம் எளிமையாக நடை பெற்றது. தேனிலவிற்கு மொரீஷியஸ் சென்று வந்தனர்.
ஜாலியாக தனிக்குடித்தனம் நடத்த ஆரம்பித்து, அலுவலகமும் செல்லத் தொடங்கினர். மேகலா, தன் அழகை பராமரிப்பதில் முழுக்கவனம் செலுத்தினாள். ஆளுயரக் கண்ணாடி முன் நிற்பதே அவளின் வேலை.
மேகலாவின் நெருங்கிய அலுவலக தோழி உமா, "அமுதமாய் இருக்கிற உன் அழகை பாதுகாத்துக்கோ" என அடிக்கடி கூறுவாள்.
திருமணமாகி இனிமையாக இரு ஆண்டுகள் ஓடின. அன்று காலையில் எழுந்தவள் வாமிட் செய்ய, பதறிப்போன மோகன் டாக்டரிடம் அழைத்துச் சென்றான்.
"வாழ்த்துக்கள்! உங்களுக்கு அப்பா பிரமோஷன்! மோகனின் கைகளைப் பிடித்து டாக்டர் குலுக்கவும், அவன் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனான். வீடு திரும்பியதும், மேகலாவை தாங்கு-தாங்கென தாங்கினான். கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்தான். இப்போது குழந்தை தேவையில்லையென மனதிற்குள் நினைத்தாலும், கணவனின் ஆசையை கெடுக்க வேண்டாமென மேகலா பொறுமை காத்தாள். அவனின் அன்பு அவளை கட்டிப்போட்டது.
"மேகலா! உன் அழகெல்லாம் இனிமேல் குறைந்துவிடும்" அலுவலகத்தில் அடிக்கடி உமா தூபம் போட்டாலும், மேகலா மனதை திடமாக வைத்துக்கொண்டாள்.
அழகான பெண் குழந்தை பிறந்தது. "உன்னை மாதிரியே நம்ம குழந்தையும் அழகு" எனக்கூறி பெருமைப்பட்டான் மோகன். மேகலாவின் விருப்பப்படியே குழந்தைக்கு "மிரா" என அன்னையின் பெயர் சூட்டப்பட்டது. பெற்றோர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. குழந்தை பராமரிப்பு பெரும்பாலும் மோகன் தான்.
மேகலாவையும், குழந்தையையும் பார்க்க வந்த உமா, "மேகலா! உன்னழகைக் கண்டு மயங்காதவர்களே கிடையாது. ஒரு அஞ்சு வருஷமாவது ப்ளான் பண்ணியிருக்கலாம். போனது போகட்டும். இப்பவாவது நான் சொல்றதைக் கேளு. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை மட்டும் நீ தவிர்த்து விட்டால், அழகை காப்பாற்றிக் கொள்ளலாம். தப்பா எடுத்துக்காதே"! நன்றாக சாம்பிராணி போட்டு உமா செல்லவும், மேகலாவின் மனதில், அது ஆழமாக வேலை செய்ய ஆரம்பித்தது.
உமா சொன்னது போல, அழகு குறைந்து விடுமோ? கவலை ஏற்பட, அடிக்கடி கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டாள்.
தாய்ப்பாலிருந்தும், குழந்தைக்கு கொடுப்பது போல பாவனை செய்து, மறைவாக புட்டிப்பாலை கொடுத்து தாயமுதத்தை தவிர்த்தாள். வீட்டில் ஒருவருக்கும் தெரியாது.
மோகன் - மேகலா திருமணம் முடிந்த கையோடு குலதெய்வம் கோவில் செல்வது தட்டிப்போனதால், மறுபடியும் கைக்குழந்தையுடன் அனைவரும் ஆய்க்குடி பாலமுருகருக்கு படிப்பாயசம் வைக்கலாமெனக் கிளம்பினர்.
வழியில் குழந்தை வீலென அழ ஆரம்பிக்கையில்தான், பால் பாட்டிலை வீட்டில் மறந்து வைத்துவிட்டது மேகலாவின் நினைவிற்கு வந்தது. பதட்டப்பட்டாள்.
"சங்கோஜப்படாதே! தாய்ப்பாலைக் கொடு!" மோகன் அவளிடம் மெதுவாக கூறினான். கொடுக்க இயலவில்லை. விதி விளையாடியது. அழுத குழந்தை பிறகு அழவேயில்லை. எல்லாமே முடிந்து போனது. பெற்றோர்களும், மோகனும் மனதை தேற்றிக்கொண்டு, மேகலாவிற்கு ஆதரவாக இருந்தனர். குல தெய்வம் கோவில் செல்வது தடைப்பட்டது.
மேகலாவின் மனதில் சொல்லமுடியாத அளவிற்கு குற்ற உணர்வு. மோகனிடம் சொல்ல முடியவில்லை. தன்னழகை விட, தனது சொந்த ரத்தம் முக்கியமானது என்கிற ஞானோதயம் ஏற்பட்டது. கண்ணாடி முன் நின்று அழகு பார்ப்பது மறந்து போய் பித்துப்பிடித்தவள் மாதிரி ஆனாள். தாயமுதம் வீணாகிகக் கொண்டிருந்தது.
பழைய நிலைமைக்கு அவள் திரும்ப வரவேண்டுமென வேண்டி, இரு தடவைகள் தட்டிப்போன குலதெய்வம் கோவிலுக்கு இப்போது மீண்டும் மேகலாவுடன் பயணம்.
ரெயில் சிவகாசி ஸ்டேஷனை நெருங்குகையில், இளம் பெண்ணின் குழந்தை அழ ஆரம்பிக்க, மோகன் தன்னிலைக்கு வந்தான்.
"கொளந்தை ரொம்ப அளுவுதே! பசி போல! பாலக்கொடு தாயி" பெட்டியிலிருந்த மூதாட்டி ஒருவர் கூறவும், அந்தப் பெண், தன்னுடைய மஞ்சப்பையிலிருந்து பால் நிரம்பிய கண்ணாடி பாட்டிலை மெதுவாக எடுத்து குழந்தையின் வாயில் வைத்த வினாடி, வண்டியில் திடீர் குலுக்கல் ஏற்பட, பாட்டில் கைதவறி கீழே விழுந்து உடைந்தது.
சிவகாசியிலிருந்து ரெயில் புறப்பட்டது. அழும் குழந்தையை சமாதானப்படுத்த, பைக்குள்ளிருந்த கிலுகிலுப்பை, பொம்மை என எல்லாவற்றையும் எடுத்து காண்பித்தும், அழுகை நிற்கவில்லை. எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்த மேகலா, திடீரென திரும்பி, அப்பெண்ணிடம், "உங்க பால் வேணா கொடுங்களேன்" என்றாள்.
அவளோ காதில் விழாத மாதிரி இருந்தாள். குழந்தை அழுது கொண்டிருந்தது. மீண்டும் அப்பெண்ணின் கைகளைப்பிடித்து மேகலா வற்புறுத்துகையில், தன்னிடம் தாய்ப்பால் இல்லாத இயலாமையைத் தெரிவித்தாள்.
அடுத்துவரும் ரெயில் நிலையத்தில் பால் கிடைக்குமா? கிடைத்தாலும், பாட்டில் வேண்டுமே! புலம்பி பரிதவித்தாள். ஆளாளுக்கு ஏதோ பேச, பெட்டிக்குள் ஒரே சந்தைக்கடையாக இருந்தது. விடாமல் அழும் குழந்தை, பிறகு அழுவதை நிறுத்திவிட்டால்...!
கண நேரத்தில் தன் குழந்தையை நினைத்த மேகலா, வெறி பிடித்தவள் போல அப்பெண்ணிடமிருந்து குழந்தையைப் பறித்து தனது மார்புடன் அழுத்தியணைக்க, தாயமுதம் கரை புரண்டோடியது. பசியாறிய குழந்தை சிரித்தது. மோகனுக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது.
பசியாற்றியவளைத் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்த பெண், சடாரென மேகலாவின் கால்களில் விழுந்து வணங்கினாள்.
மேகலாவின் மனதில் புற அழகைத் தாண்டிய தாய்மையழகு புரிபட, அவளறியாமலேயே கண்ணீர் வழிந்தது.