

எண்ணங்களால் வாழ்க்கை என்பது மாறி, இன்று எண்களால் வாழ்க்கை என்றாகி விட்டது.
பிறப்பு முதல் இறப்பு வரை, அன்றாடம் நம் வாழ்வில் தினசரி நிறைய சந்தர்ப்பங்களில் எண்கள் உறவாடுகின்றன. அதில், பெரும்பங்கு அலைபேசிக்குத் தான். இருபது வருடங்களுக்கு முன் லேண்ட் லைன் போன் தான். எல்லா வீடுகளிலும் இருக்காது. தொலைபேசி எண்களும் நான்கு அல்லது ஐந்து டிஜிட்டலில் தான் இருக்கும். நினைவு வைப்பதும் எளிது. இன்று பத்து இலக்க கைபேசி தான். அதுவும் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒருஅலைபேசி. சில அலைபேசியில் இரண்டு சிம்கார்டுகள். இரு நபர்கள் முதலில் சந்தித்தால் பிரியும் போது பகிர்ந்து கொள்வது மொபைல் எண்களைத் தான்.
மருத்துவமனைக்குப் போனால், எண்கள் பொறித்த டோக்கன் தான். டெம்பரேச்சர், பிரஷர், எடை, சுகர் எல்லாவற்றையும் மெஷின் எண்களில் தானே காட்டுகிறது. டாக்டர் பீஸை, ஆன்லைனில் கட்டும்போது, பின் நம்பர் போட்டால் தான் பணம் பரிவர்த்தனையாகும்.
வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கும்போது, சில சமயம் மொபைலில் வரும் OTP நம்பரை, பதிவிட வேண்டியிருக்கும். மெடிக்கல் ஸ்டோரில், மருந்து வாங்கி விட்டு, கார்டில் பதிவு செய்ய என் பெயரை கூறினேன்.
"மேடம் மொபைல் நம்பர் சொல்லுங்க" என்கிறார்கள் கேஷ் கவுண்டரில். மால்களிலும் இதே நிலை தான். பூஜ்யத்திலிருந்து பத்து வரை உள்ள எண்கள் நம் வாழ்க்கையில் சுற்றி சுழன்று வருகிறது. சில தொடர் எண்கள் நினைவில் நிற்கிறது. பெரும்பாலான எண்கள் பத்துக்கு மேல் உள்ள இலக்கங்களில் இருப்பதால் மனதில் நிற்காமல் திணற வைக்கிறது.
சமையல் கேஸ் சிலிண்டர் வந்தால், "மேடம் OTP நம்பர் சொல்லுங்க" ன்னு கேட்டு நம்பர் சொன்ன பிறகே சிலிண்டரை தோளிலிருந்து இறக்குகிறான் டெலிவரி பாய்.. மொபைலுக்கு ஆன்லைனில் ரீ சார்ஜ் பண்ணினாலும் OTP நம்பரை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
மொபைல் இல்லாமல் வெளியே போக முடியலை. சமையலறையில், உழக்கு, பக்கா என இருந்த அளவீடுகள் மறைந்து, நூறு மில்லி, 500கிராம், ஒரு கிலோ என எண்களால் அளக்கப்படுகிறது சமைக்கத் தேவையான உணவுப் பொருட்கள்.
சிறுவயதில் வீதிகளுக்கு பாரதி தெரு, நேதாஜி தெரு, கோயில் வீதி எனப்பெயர் தான் இருக்கும். இப்போது, 5வது தெரு, 6வது தெரு அல்லது 10 வது குறுக்கு தெரு, 12வது குறுக்கு சாலை என வீதிகளும் எண்களால் பெயரிடப்படுகிறது.
நான் இன்னார் என அடையாளத்திற்கு கூட ஆதார் எண் தேவைப்படுகிறது அல்லது பேன்கார்டு நம்பர் வேண்டியிருக்கிறது. கடந்த காலங்களில் எண்கள் குறைந்த இடங்களில் விவர சேகரிப்புக்காக பயன்படுத்தப்பட்டது. இன்றோ, பெரும்பாலான இடங்களில் எண்களின் ஆதிக்கம் தான். வருங்காலத்தில் ஆவணங்களில் பெயருக்கு பதிலாக எண்கள் இருந்தாலும் வியப்பில்லை.
டிஜிட்டல் மாற்றங்களைச் சுமையாகப் பார்க்காமல், அவற்றை உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றி, நவீன காலத்திற்கு ஏற்ப உங்களை எளிதாக கொள்ளுங்கள்.
இந்தத் தகவல்கள் மூலம், டிஜிட்டல் மயமாகிவிட்ட உலகில் தொழில்நுட்பச் சிக்கல்களில் சிக்காமல் நிதானமாகவும், பாதுகாப்பாகவும் உங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளும் தெளிவைப் பெறுவீர்கள். மேலும், எதிர்காலத்தின் டிஜிட்டல் மாற்றங்களுக்குத் தயாராகும் வகையில், உங்களின் தனிப்பட்ட அடையாளங்களையும், தரவுகளையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.