
விலங்குகளில் சில விசித்திரமான பழக்க வழக்கங்கள் உண்டு. நண்டு குஞ்சு பொரித்ததும் இறந்துவிடும் என்று சங்க இலக்கியமான ஐங்குறுநூறு கூறுகின்றது.
'தாய் சா பிறக்கும் புள்ளி களவனோடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர்' (பாடல் 24)
"கரு ஈன்றதும் தாய் நண்டு செத்துவிடும். குட்டி போட்டதும் முதலை தன் குட்டியை தின்றுவிடும் இரக்கமற்ற ஊர் காதலனின் ஊர்" என்கிறாள் ஒருத்தி.
கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் வெறும் கற்பனைத் தொகுதி அல்ல. சங்க இலக்கியத்தில், உளவியல், வானவியல், விலங்கியல், பயிரியல் போன்ற பல துறை சார்ந்த மெய்மைகள் (facts) இடம்பெற்றுள்ளன. மேலும் விலங்குகளில் களிறு- பிடி (யானை), கடுவன் - மந்தி (குரங்கு), கலை - பிணை (மான்), அலவன் - நள்ளி (நண்டு) என ஆணுக்கும் பெண்ணுக்கும் தனிப் பெயர்களும் உண்டு.
'எல்லா நண்டுகளும் கரு ஈன்ற உடன் இறப்பதில்லை. நீல நண்டுகள் (blue crabs) பலமுறை குஞ்சு பொரிக்கும். ஹெர்மிட் நண்டு (hermit crab) எனப்படும் நண்டுகள் ஒரே ஒருமுறை மட்டுமே தன் வாழ்நாளில் கருவுயிர்க்கும்,' என்கிறது அறிவியல்.
கருவுற்ற பிறகு நண்டுகள் உணவு உண்பதில்லை. இதனால் மெலிந்து வலு இழந்திருக்கும் நண்டுகள் கரு ஈன்றதும் தமது பலவீனத்தால் இறந்து போகும். இங்கு ஹெர்மிட் நண்டுகள் அதிகம். இவற்றின் வாழ்வியலைக் கூர்ந்து கவனித்த நம் மக்கள் நண்டுகள் கரு உயிர்த்ததும் இறந்து போகும் என்றனர்.
கவிஞர் கண்ணதாசன் தன் பாடல் ஒன்றில் ஜனனம் மரணம் பற்றிப் பின்வருமாறு பாடுகிறார்.
உண்ட பணக்காரனவன்
தொந்தி என
விம்மி வரும் நண்டில்
பிள்ளை நண்டு ஜனனம்
அதைக் கண்டவுடன்
பெற்ற நண்டு மரணம்
பக்தி இயக்கக் காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் புனைவுகள் அதிகம். நெல் வயலில் வாழ்ந்த ஒரு நண்டு ஜோடியின் இனிய காதல் கதையை அணி நயத்துடன் திருமங்கையாழ்வார் விவரிக்கின்றார். ஓர் அலவன் (ஆண்) தன் பெட்டைக்கு இனிய உண் பொருளைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் மலர்களில் சிறந்த மலரான தாமரை மலரில் இருக்கும் மகரந்தத்தை எடுத்து வர அம்மலருக்குள் புகுந்தது.
மகரந்தத்தைத் திரட்டி முடிப்பதற்குள் பொழுது சாய்ந்து விட்டதால் தாமரை மூடிவிட்டது.
மறுநாள் காலையில் தாமரை மலர்ந்ததும் அலவன் தாமரையின் மகரந்தத்தோடு தன் பெட்டையைத் தேடி வந்தது. அலவனைப் பார்த்ததும் இரவில் எங்கோ தங்கியதால் ஊடல் கொண்ட நள்ளி (பெண்) தான் வசித்த ஆம்பல் மலருக்குள் போய் மூடிக்கொண்டது. இப்பெண் நண்டை கோபிக்கலாம் என்றால் இந்த ஊர் நாச்சியார் கோவில் கொண்டுள்ள திருநறையூர் ஆகும். தன் நாச்சியாரைக் கோபிக்கும் அதிகாரம் இங்குள்ள திருநறையூர் நம்பிக்கே கிடையாது. இப்பாடலில் அணி நயம் மிளிர இவ்வூரை வர்ணிக்கும் திருமங்கை ஆழ்வார் இவ்வூர் நம்பிக்கு அதிகாரம் இல்லாத் ஊர் என்கிறார்.
பள்ளிக் கமலத்து இடைப் பட்ட/ பகுவாய் அலவன் முகம் நோக்கி/ நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த/
நறையூர் நின்ற நம்பியே/ (1513)
காலையில் தாமரை மலர்வதும் ஆம்பல் கூம்புவதும் இயற்கை. அலவனைக் கண்டு ஊடல் கொண்டு நள்ளி ஆம்பலுக்குள் தங்கி விட்டது என்று கூறுவது ஆழ்வார் தன்னுடைய குறிப்பை இயற்கை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்றி அழகுபடப் புனைந்துரைப்பதாகும். எனவே இதனைத் தற்குறிப்பேற்ற அணி என்கிறோம்.
நண்டின் வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்த தமிழ்ப்புலவர்கள் அதன் வாழ்க்கையை அறிவியலோடும் அழகியலோடும் பொருத்தி இரண்டு ஊர்களை விளக்கியுள்ளனர்.