
போரில் உயிர்நீத்த வீரனுக்கு, அவனுடைய பெயரையும் வீரப்புகழையும் கல்லில் பொறித்து அவன் நினைவாகப் பலரும் வழிபடுமாறு கல் நடுவதை நடுகல் என்பர். இவ்வழக்கம் பற்றிச் சங்க இலக்கியத்துள் செய்திகள் உள்ளன. கண்ணகிக்குக் கல் எடுத்த நிகழ்வு சிலப்பதிகாரவஞ்சிக் காண்டத்தில் கூறப்படுகிறது. பிற்காலத்தில் உயரிய செயல் செய்வார்க்கும் கல் நடப்பட்டதை இது உணர்த்துகிறது. தொல்காப்பியர் நடுகல் எடுத்தலின் நிலைகளை வெட்சித் திணையில் குறிப்பிட்டுள்ளார்:
காட்சி, கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்று
இருமூன்று மரபில் கல்லொடு புணர
(புறத்திணை இயல், 5)
இதனையே காதைகளாக இளங்கோவடிகள் காட்சிக்காதை முதலாக அமைத்தார்.
தமிழகத்தில் இத்தகைய நடுகற்கள் நிறையக் கிடக்கின்றன. புறப்பொருள் வெண்பா மாலை நடுகல் அமைத்தலைத் துறைகளாகப் பொதுவியல் திணையில் கூறுகிறது.
கல்காண்டல், கல்கோள் நிலை, கல் நீர்ப்படுத்தல், கல் நடுதல், கல் முறைப்பழிச்சல், இற்கொண்டு புகுதல் என்பன நடுகல் பற்றிய 6 துறைகள் ஆகும்.
1. கல்காண்டல்
கல்லைக் காணல் என்பதைக் குறிக்கிறது. வீரனது உருவம் பொறித்து நடுவதற்கேற்ற கல்லைத் தேர்வு செய்வது என்பது இதன் பொருள்.
ஆனா வென்றி அமரில்வீழ்ந் தோற்குக்
கான நீளிடைக் கல்கண் டன்று
என்பது கொளு.
பெரிய வெற்றியைப் பெற்ற போரில் இறந்துவிட்ட வீரனுக்கு நடுகல் செய்யக் காட்டில் கல்லைத் தேர்ந்தெடுத்தல் என்பது பொருள். 'பகைவரைப் பொருத்து அவர் அம்பாலே மாண்டு விண்ணுலகம் சென்ற இளம் வீரனுக்கு நடுகல் ஆதற்குரிய கல்லினைத் தேர்ந்தெடுத்தனர் வீரர்கள்' என்பது வெண்பா தரும் விளக்கம்.
2. கல்கோள் நிலை
‘கல்லைக் கொள்ளுதல் என்பதை இது குறிக்கிறது. தேர்ந்தெடுத்த நடுகல்லை எடுத்துக் கொணர்தல் என்பது பொருள். கொளு,
மண்மருளத் துடிகறங்க
விண்மேயாற்குக் கல்கொண்டன்று
என்பது.
‘மண் மருளும் வண்ணம் துடியை முழக்கி, வீரசுவர்க்கம் அடைந்த வீரனுக்குக்குரிய கல்லினை எடுப்பது’ என்பது பொருள்.
‘நீரையும் மலரையும் சிதறி நறும்புகை காட்டி மணிகளை ஒலிக்கச் செய்து, பகைவரது சினத்தைக் கிளறிப் போரில் மாண்டவனுக்கு நடுகல் ஆதற்குரிய கல்லைக் கைக்கொண்டார்’ என்று வெண்பா விளக்கமளிக்கிறது.
3. கல் நீர்ப்படுத்தல்:
நடுதற்குரிய கல்லை நீரில் இடுதல் என்பதைக் குறிக்கிறது.கொளு,
வண்டுசூழ் தாமம் புடையே அலம்வரக்
கண்டு கொண்ட கல்நீர்ப் படுத்தன்று
என்பது.
வண்டுகள் சூழும் மாலை சூட்டப்பட்ட அக்கல்லினை நீரில் இடுதல் என்பது கொளுவின் பொருள். நீரில் இடப்பட்ட முறையினை வெண்பா விளக்குகிறது...
‘காடே எரியும் வண்ணம் கதிரவன் வெப்பத்தைப் பொழிதலால், அந்த வெப்பம் தணிய நறுமணப் பொருள்களால் மஞ்சனமாட்டி வாவியில் கல்லை இட்டனர்’ என்பது வெண்பாவின் கருத்து.
கல் நீர்ப்படுத்தல் என்பதற்கு இன்னொரு விளக்கத்தையும் புறப்பொருள் வெண்பா மாலை தருகிறது. கல் நடும் இடத்திற்கு அதனைக் கொண்டுபோதலும் கல் நீர்ப்படுத்தல் என்பதற்குப் பொருளாகும் என்கிறது.
ஓங்கியகல் உய்த்தொழுக்கல்
ஆங்(கு)எண்ணினும் அத்துறைஆகும்
என்பது கொளு.
4. கல் நடுதல்:
உருவாக்கப்பட்ட நடுகல்லை நடுதல் என்பதைக் குறிக்கிறது. கொளு,
வீரனின் பெயர் கல் மிசைப் பொறித்துக் கவின் பெறக் கல் நாட்டின்று
என்கிறது.
‘வீரனுடைய பெயரைக் கல்லில் செதுக்கி, அக்கல்லை நடுதல்’ என்பது பொருள்.
இவ்வெண்பாக்கள் கல் நடும் முறை பற்றியும் அதற்குச் செய்யப்படும் சிறப்பினையும் புலப்படுத்துகின்றன..
மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப்
பீலி அணிந்து பெயர்பொறித்து - வேல்அமருள்
ஆண்தக நின்ற அமர்வெய்யோற்(கு) ஆகுஎன்று
காண்தக நாட்டினார் கல்
‘மாலைசூட்டி, மணி ஒலித்து, மதுவைத் தெளித்து, மயிற்பீலியைச் சூட்டி, அவன் பெயரை எழுதி வேற்போரில் ஆண்மைத்தன்மை வெளிப்படப் போரிட்ட வீரனுக்கு இது உருவமாகட்டும் என்று காணுமாறு கல்லை நட்டார்கள்’ என்கிறது
5. கல் முறைப் பழிச்சல்:
நடுகல்லைப் புகழ்தல் என்பதைக் குறிக்கிறது. கொளு,
நிழலவிர் எழில்மணிப்பூண்
கழல்வெய்யோன் கல்வாழ்த்தின்று
என்று விளக்குகிறது.
ஒளி வீசும் அழகிய மணி அணியையும் வீரக்கழலையும் உடைய வீரனுக்கு எடுக்கப்பட கல்லைப் புகழ்தல் என்பது பொருள்.
பாணனை விளித்துக் கல்லை வணங்குமாறு கூறுவதாக வெண்பா அமைந்துள்ளது.
“பாணனே! வீரன், பகைவரைக் கொன்ற வீரத்தினைச் சொல்லிச் சொல்லி, பொறுக்க முடியாத துன்பத்தோடு இருக்கும் சுற்றத்தாரோடு, கொடைத் தன்மை மிக்க இவ்வள்ளலுக்கு எடுக்கப்பட்ட கல்லினை வணங்கிச் செல்வாயாக” என்கிறது வெண்பா.
6. இற்கொண்டு புகுதல்:
கல்லுக்குக் கோயில் எழுப்புதல் என்று பொருள். கொளு
இதனை,
வேத்த மருள் விளிந்தோன் கல்லென
ஏத்தினர் துவன்றி இற்கொண்டு புக்கன்று
என விளக்குகிறது.
‘வேந்தர்களுக்கிடையிலான போரில் இறந்தவனுக்கு எடுக்கப்பட்ட கல் என்று சொல்லி வாழ்த்தி ஒன்றுகூடிக் கோயில் எடுத்தல்’ என்பது இதன் விளக்கம்.
நடுகல்லைச் சுற்றிக் கோயில் எடுத்துச் சிறப்பித்தமையை வெண்பா காட்டுகிறது:
‘வாளுக்குப் பலி ஊட்டி மணி ஒலிக்க, வீரர் பலரும் கோயிலினுள் வீரக்கல்லை இருக்கச் செய்தார்’ என்கிறது.