
பண்டையத் தமிழ் மகளிர் அணிந்த வளையல்களில், சங்கு வளையல் (Conch Bangle) ஒரு வகையாகும். தமிழர் வரலாற்றுக் காலம் முதல் சங்கு வளையல்களை அணிந்து வந்துள்ளனர். பழந்தமிழ்ப் பெண்கள் சங்கு வளையல்கள் அணிந்தது குறித்து சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சங்கில், நந்து, சுத்தி, பணிலம், நாகு, வண்டு, கோடு, வளை, சுரிமுகம், கம்பு, வெள்ளை, இடம்புரி, வலம்புரி, தரா, சங்கு என்று பல வகைகள் இருக்கின்றன. சங்க இலக்கியங்களில், சங்கு வளையல் பற்றிய குறிப்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. வலம்புரி சங்கு மிகவும் மிகவும் தெய்வீகத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
திருமாலின் மனைவியான மகாலட்சுமியின் பிறப்பிடமான பாற்கடலிலிருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களிலும் மகாலட்சுமி இடம் பெற்றிருப்பாள் என்பது தொன்ம நம்பிக்கை. இதனை அடிப்படையாகக் கொண்டு, வட மாநிலங்களில் திருமணமாகிக் கணவன் வீட்டுக்குச் செல்லும் பெண்கள், கணவன் வீட்டில் செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டுமென்பதற்காக, மகாலட்சுமியின் சங்கு வளையல்களைச் சீதனமாகக் கொடுத்து அனுப்பும் வழக்கம் இன்றும் இருக்கிறது. கடலிலிருந்து எடுக்கப்பட்ட சங்கிலிருந்து செய்த வளையல்களையே மகாலட்சுமி, தன்னுடைய கையில் அணிந்து கொண்டிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சங்கு வளையல் அணிந்து கொண்டிருப்பவர்கள் செய்யும் பணிகள் அனைத்தும் வெற்றியில் முடியும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.
வலம்புரிச் சங்கில் செய்யப்பட்ட வளையல்களை அரச மகளிர் அணிந்திருந்ததாக இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனுடைய தேவி, பாண்டிமாதேவி தனது கைகளில் தங்க வளையல்களுடன் வலம்புரிச் சங்கு வளையல்களை அணிந்திருந்ததாக நெடுநல்வாடை கூறுகிறது.
சங்கினை அறுத்து வளையல் செய்யப்பட்டது பற்றியும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
“விலங்கரம் பொரூஉம் வெவ்வளை போழ்நர்” மணி :(330)
“விலங்கரம் பொராத சங்கின் வெள்வளை” சீவ: (2441)
“கோடு போழ் கடைநரும்” (மது:511)
பண்டையக் காலத்தில் அரம் போன்ற சிறு கருவி கொண்டு, சங்கினை அறுத்து வளையல்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
சங்கை அறுத்து வளையல் செய்பவர்கள் ‘வேளாப் பார்ப்பார்’ என்று அழைக்கப்பட்டனர் என்பதுதை அகநானூறு பாடல் வழியாக, அறிய முடிகிறது.
மேலும் சங்கப்புலவர்களில் ஒருவரான நக்கீரர் வரலாற்றில்,
“அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால்பரப்பி – சங்கதனைக்
கீர் கீர் என அறுக்கும் நக்கீரனோ என் கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?
சங்கறுப்பது எங்கள் குலம்
சங்கரனார்க்கு ஏது குலம்? – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம்
அரனே உம் போல்
இரந்துண்டு வாழ்வதில்லை”
கடற்கரையில் கிடைக்கும் சங்குகளை அறுத்து வளையல் செய்வது, மோதிரம் செய்வது, அழகுமிக்க ஆபரணங்கள் செய்வதுதான் நக்கீரரின் குலத் தொழில். அதனால்தான், "உடம்பு முழுவதும் அழுக்கேற, சங்குகளைப் பொறுக்கி எடுத்து, அறுக்கும் பொழுது, சங்கின் துகள்கள் சிதறாமல் இருப்பதற்காக, அரிவாளில் நெய் தடவி, கால்கள் இரண்டையும் பரப்பி அமர்ந்து, கீர் கீர் என சங்கினை அறுக்கும் நக்கீரனோ என் பாடலில் குற்றம் கண்டது?" என கோபம் கொப்பளிக்கக் கேட்பார் சிவபெருமான்.
"சங்கு அறுப்பது எங்கள் குலம்தான். ஆனால் சிவனே உனக்கு என்ன குலம் இருக்கிறது? சங்கினை அறுத்து, உழைத்து, உண்போமேத் தவிர, அந்தச் சங்கினை பிச்சைப் பாத்திரமாக்கி, உன் போல் நாங்கள், இரந்து உண்டு வாழ்வதில்லை" என சாந்தமாய் பதிலுரைப்பார் நக்கீரர்.
இதன் வழியாக, நக்கீரர் சங்குகளை அறுத்தலைக் குலத்தொழிலாகக் கொண்டிருந்தார் என்பதை அறிய முடிகிறது.
பண்டையத் தமிழ்நாட்டில் இருந்து சங்கு வளையல்கள் ஏற்றுமதி செய்யபட்டுள்ளன. தமிழ்நாட்டில் வெம்பக்கோட்டை போன்ற பகுதிகளில் நடந்த அகழாய்வுகளில் சங்கு வளையல்கள் கிடைத்துள்ளன என்பதன் மூலம் சங்கு வளையல்கள் அதிகமான பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது.
தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு போன்ற உலோகங்களைக் கடந்து, தற்போது கண்ணாடி, நெகிழி போன்றவைகளில் செய்யப்பட்ட வளையல்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், சங்கு வளையல்களின் பயன்பாடுகள் பெருமளவில் குறைந்து போய்விட்டன.
இருப்பினும், மேற்கு வங்கத்தில் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கைவினைஞர்கள் குழு, கடல் சங்குகளை கொண்டு அலங்கார வளையல்கள் மற்றும் ஊது சங்குகளைத் தற்போதும் செய்து வருகிறது. ஒரு வகை கடல் நத்தையின் ஓடான சங்கின் அளவைப் பொறுத்து, அது ஊது சங்காகவோ, வளையல் தயாரிப்பதற்கோ பயன்படுத்தப்படுகிறது. தடிமனமான, பெரிய சங்குகளில் வளையல் செய்வது எளிது. சிறிய, லேசான சங்குகள் துளையிடும் போது எளிதில் உடைந்துவிடும் என்பதால், அவ்வகையான சங்குகள் ஊது சங்குகளாகவும் உருவாக்கப்படுகின்றன. சங்குகளின் மேற்புறத்தில் பூக்கள், இலைகள், கடவுள் உருவங்கள் ஆகியவற்றைச் செதுக்கி ஊது சங்குகளும், பெண்களுக்கேற்ற பல வகையான வடிவமைப்புகளை உள்ளடக்கிய வளையல்களும் தயாரிக்கப்படுகின்றன.
இங்கு தயாராகும் ஊது சங்குகள், சங்கு வளையல்கள் மற்றும் அணிகலன்கள் தமிழ்நாடு, அசாம், திரிபுரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், அருகிலுள்ள பங்களாதேஷ் நாட்டிற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.